ஆன்லைன் கேம்: சிறுவர்களுக்கு தடை… புதிய விதிகள் சொல்வது என்ன?

இன்றைய டிஜிட்டல் உலகத்தில் இணைய பயன்பாட்டை ஆக்கபூர்வமாக பயன்படுத்துபவர்கள் ஒருபுறம் இருந்தாலும், ஆன்லைன் சூதாட்டம், ஆன்லைன் கேம் போன்றவற்றில் மூழ்கிப் போகிறவர்களும் இன்னொருபுறம் உள்ளனர்.
அந்த வகையில் ஆன்லைன் கேம், ஆன்லைன் சூதாட்டம் போன்றவற்றில் சிறுவர்களும் ஈடுபடுவது மிகுந்த கவலைக்குரிய அம்சமாக மாறியுள்ளது. ஆன்லைன் சூதாட்டங்களில் இளைஞர்கள் பலர் பணத்தை இழந்து தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்களும் ஆங்காங்கே நடந்து வருகின்றன.
இந்த நிலையில், ஆன்லைன் விளையாட்டுகளால் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக தமிழக சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் நிறைவேற்றப்பட்டதுடன், ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்தவும் சட்டம் இயற்றப்பட்டன.
அதன்படி, தமிழ்நாடு ஆன்லைன் விளையாட்டு ஆணையம் உருவாக்கப்பட்டு இதன் தலைவராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி முகமது நசிமுதின் நியமிக்கப்பட்டிருந்தார். அதன்படி, ஆன்லைன் விளையாட்டை ஒழுங்குபடுத்துவது, அந்த விளையாட்டுகளை அளிக்கும் நிறுவனங்களை கண்காணிப்பது உட்பட பல்வேறு பணிகளை ஆணையம் மேற்கொண்டு வந்தது.
தற்போது ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் வகையில் விதிகளை கடுமையாக்கி தமிழ்நாடு ஆன்லைன் கேமிங் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஆன்லைனில் பணம் கட்டி விளையாட தமிழ்நாடு ஆன்லைன் கேமிங் ஆணையம் தடை விதித்துள்ளது.
புதிய விதிகள் சொல்வது என்ன?
இது தொடர்பாக ஆன்லைன் கேம் விளையாட்டு நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ள அரசாணையில்,
18 வயதுக்கு உட்பட்ட பயனாளர்கள் பணம் கட்டி ஆன்லைன் விளையாட்டுகளில் பங்கேற்க தடை விதிக்கப்படுகிறது.
ஆன்லைனில் பணம் கட்டி விளையாடும் விளையாட்டுகளில் உள்நுழைய ஆதார் அட்டை எண் மற்றும் ஓடிபி மூலம் ஆய்வு செய்து விளையாட அனுமதிக்க வேண்டும்.
நள்ளிரவு 12 முதல் அதிகாலை 5 மணி வரை ஆன்லைனில் பணம் கட்டி விளையாடும் விளையாட்டுகளுக்கு பயனாளர்களை அனுமதிக்க கூடாது.

பயனாளர் ஒருவர் ஒரு மணி நேரத்திற்கும் மேல் விளையாடினால் 30 நிமிட இடைவெளியில் எச்சரிக்கை செய்தி அனுப்ப வேண்டும்.
ஆன்லைனில் விளையாடுபவர்கள் யார் என்பது குறித்து கண்டிப்பாக கே.ஒய்.சி வாங்க வேண்டும்.
ஆன்லைன் விளையாட்டு அடிமைப்படுத்தும் இயல்பைக் கொண்டது என்பது போன்ற எச்சரிக்கை வாசகம் ஆன்லைன் விளையாட்டு செயலில் இடம்பெற செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதோடு, இந்த விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.