வரிந்து கட்டும் கட்சிகள்… ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ சாத்தியமா?
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்துக்கு இன்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இது தொடர்பான மசோதா, வரும் குளிர்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
சுமார் 18 ஆயிரம் பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையில், ‘நாடு முழுவதும் ஒரே தேர்தல் நடத்துவது சாத்தியம். இதற்காக அரசியல் அமைப்புச் சட்டத்தை திருத்துவதற்கு மாநிலங்களின் ஒப்புதல் தேவையில்லை. நம்பிக்கை இல்லா தீர்மானம் அல்லது தொங்கு சட்டசபையோ, நாடாளுமன்றமோ அமைந்தால் மீண்டும் தேர்தல் நடத்தலாம்’ எனக் கூறப்பட்டுள்ளது.
அமைச்சரவை கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “பெரும்பான்மையான அரசியல் கட்சிகள், இத்திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. நாட்டின் ஜனநாயகத்தை பாதிக்கும் விஷயங்களில் ஒருமித்த கருத்தை உருவாக்குவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டால் நாடு வலுப்பெறும்” என்றார்.
ஆனால், இந்த திட்டத்துக்குக் காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நடைமுறையில் சாத்தியமில்லாதது. தற்போது இந்த திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்பது தேர்தல் வரும் சமயத்தில் பாஜக செய்யும் அரசியல் தந்திரமே ஆகும். தேர்தல் வரும்போதெல்லாம் பாரதிய ஜனதா கட்சி இதுபோன்ற விஷயங்களை கூறும். நாட்டு மக்கள் நிச்சயம் இதை ஏற்க மாட்டார்கள்” எனத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அதே சமயம், தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இதற்கு ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், எதிர்க்கட்சிகளின் கட்சிகளின் கருத்து என்ன?
“இருமுறை ஓட்டுப் போட வேண்டிய அவசியம் இல்லை”
-முனைவர் பாட்ஷா (துணைத் தலைவர், த.மா.கா)
“தொடக்க காலங்களில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றம் ஆகியவற்றுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடந்தது. கேரளாவில் கம்யூனிஸ்ட் ஆட்சியைக் கவிழ்த்ததில் இருந்து இரண்டு தேர்தல்களும் மாறி மாறி வந்தன. இதனால் மக்கள் வரிப்பணம் விரயமானது.
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் அமல்படுத்தப்பட்டால், மக்கள் இரண்டு முறை ஓட்டுப் போட வேண்டிய அவசியம் இல்லை. அரசியல் கட்சிகளுக்கும் செலவு குறையும். ஒட்டுமொத்தமாக அனைத்துக் கட்சிகளும் வரவேற்க வேண்டிய விஷயம் இது.
கர்நாடகாவில் எஸ்.ஆர்.பொம்மையின் ஆட்சியைக் கவிழ்த்ததற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அவ்வாறு கலைத்தது தவறு என தீர்ப்பு வந்தது. அதன்பிறகு ஆட்சிக் கலைப்பு சம்பவங்கள் நடைபெறவில்லை. எனவே, மத்திய, மாநிலங்களில் ஒரேகட்டமாக தேர்தல் நடத்தப்படுவதை வரவேற்கிறோம்” என்றார்.
“சாத்தியத்தை ஆராய வேண்டும்”
காசிநாத பாரதி (செய்தி தொடர்பாளர், அதிமுக)
“ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நடைமுறையில் சாத்தியப்படுமா என்பதை ஆராய வேண்டும். தென் மாநிலங்களில் தேர்தல் நடத்தப்படும்போது வடஇந்தியாவில் இருந்து அதிகாரிகளை இங்கு அனுப்புவது வழக்கம். ஒரேநேரத்தில் தேர்தல் நடத்தப்படும்போது அதற்கேற்ப அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும்.
நாடு முழுவதும் பணியாளர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. சில மாநிலங்களில் ஓராண்டுக்கு முன்பு தான் தேர்தல் நடந்துள்ளது. அங்கு மீண்டும் தேர்தல் நடத்தும்போது செலவுகள் அதிகம் தேவைப்படும். 140 கோடி மக்கள் தொகையுள்ள நாட்டில் ஒரே கட்டமாக நடத்துவதற்கேற்ற கட்டமைப்பை உருவாக்குவது அவசியம்” என்றார்.
நிறைவேறுவது சாத்தியமா?
இந்த நிலையில், ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவைப்படும், ஏனெனில் இது அரசியலமைப்பு திருத்தத்தை உள்ளடக்கியது. அதை நடைமுறைப்படுத்த குறைந்தபட்சம் ஆறு திருத்தங்கள் தேவை.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தனிப்பெரும்பான்மை இருந்தாலும், இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பெறுவது சவாலாக இருக்கும். ராஜ்யசபாவில் உள்ள 245 இடங்களில், பாஜக கூட்டணிக்கு 112, எதிர்க்கட்சிகளுக்கு 85 இடங்கள் உள்ளன. மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மைக்கு, அரசாங்கத்திற்கு குறைந்தபட்சம் 164 வாக்குகள் தேவை.
மக்களவையில் கூட, 545 இடங்களில் 292 இடங்களை பாஜக கூட்டணி கொண்டுள்ளது. மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைக் கணக்கிடும்போது 364 எம்.பி-க்களின் ஆதரவு தேவை. ஆனால், தற்போதுள்ள உறுப்பினர்கள் மற்றும் வாக்களிப்பதன் அடிப்படையில் மட்டுமே பெரும்பான்மை கணக்கிடப்படும் என்பதால், நிலைமை மாறும்.