யூடியூப் டு வெள்ளித்திரை… கோபி – சுதாகர் இணையின் புதிய படம்!

யூடியூப் பிரபலங்கள் பலர் வெள்ளித்திரையிலும் தங்களது திறமைகளை வெளிக்காட்டத் தொடங்கிவிட்டனர். அந்த வகையில், கடந்த மாதம், ‘நக்கலைட்ஸ்’ யூடியூப் குழுவைச் சேர்ந்த ராஜ்குமார் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் நடிப்பில் வெளியான ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் , ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
தற்போது பரிதாபங்கள் யுடியூப் சேனல் பிரபலங்களான கோபி, சுதாகர் இணையும் படம் குறித்த அறிவிப்பும் வெளியாகி உள்ளது. இவர்கள் ஏற்கெனவே ஜோம்பி, உறியடி 2, செவன் ஆகிய படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.
மேலும் யூடியூப்-ஐ தாண்டி வெள்ளித்திரையில் திரைப்படம் எடுக்கும் முயற்சியில் இருவரும் ஈடுபட்டு வந்தனர். அதன்படி கிரவுட் ஃபண்ட் முறையில் பொது மக்களிடம் பணம் வசூலித்து திரைப்படம் எடுக்க திட்டமிட்டனர். இருவரின் முயற்சிக்கு ஓரளவு தொகை கிடைத்தது. அதை வைத்து‘ஹே மணி கம் டுடே, கோ டுமாரோ’ தலைப்பில் படம் உருவாவதாகவும் அதற்கான டைட்டில் லுக் போஸ்டரையும் வெளியிட்டிருந்தனர். இப்படத்தை எஸ்ஏகே என்பவர் இயக்க, ஜேக்ஸ் பிஜோய் இசையமைப்பதாக இருந்தது. பின்பு கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக இப்படம் தாமதம் ஆவதாகவும், விரைவில் இந்தப் படத்தை தொடங்குவதாகவும் அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில் , கோபி சுதாகரின் பரிதாபங்கள் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. ‘ஓ காட் பியூட்டிஃபுல்’ (Oh God Beautiful)எனத் தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தின் அறிவிப்பு வீடியோ இன்று வெளியானது. இந்தப் படத்தை விஷ்ணு விஜய் என்ற அறிமுக இயக்குநர் இயக்குகிறார்.
சென்னை பிரசாத் லேப்பில் இன்று இதற்கான பூஜை நடைபெற்றது. பரிதாபங்கள் வீடியோக்களுக்கு யூடியூப் உலகில் தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. மேலும் சமூக வலைதளங்களில் வெளியாகும் மீம்ஸ்களில் வடிவேலு காமெடிக்கு அடுத்தபடியாக கோபி, சுதாகர் யூடியூப் வீடியோ காட்சிகள் அதிகம் வலம் வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், புதிய படம் தொடங்கி உள்ள இவர்களுக்கு ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.