முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், சசிகலா, அமமுக பொதுச் செயலாளர் தினகரன் உள்ளிட்டோரை மீண்டும் அதிமுக-வில் சேர்த்துக்கொள்ள அக்கட்சியில் ஒரு தரப்பினர் விரும்பினாலும், அவர்களைச் சேர்த்துக்கொள்வதில்லை என்பதில் அதன் பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமி உறுதியாக உள்ளார்.
“ஓநாயும், வெள்ளாடும் ஒன்றுபட்டு இருக்க முடியுமா? களைகளும், பயிர்களும் ஒன்றாக வளர்ந்து வெள்ளாமை ஆகுமா? விசுவாசியும், துரோகியும் தோளோடு தோள் நிற்க முடியுமா?” என ஜெயலலிதாவின் 77 ஆவது பிறந்த நாளையொட்டி அவர் நேற்று முன்தினம் கட்சித் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், எடப்பாடியின் இந்த கருத்துக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் முதலமைச்சரும் கட்சியின் பொதுச் செயலாளராகவும் இருந்த ஜெயலலிதாவுக்கு தான் எந்த அளவுக்கு விசுவாசியாக இருந்தேன் என்பதை விளக்கி உள்ளதோடு, தனது விசுவாசத்தைப் பாராட்டி ஜெயலலிதா சொன்ன வார்த்தையையும் குறிப்பிட்டு, எடப்பாடிக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.
” ‘ கூடி வாழ்தல், கேடு செய்யாதிருத்தல், உழைத்துப் பிழைத்தல், பகிர்ந்து அளித்தல் என்பவை பாராட்டத்தக்க பண்புகள் என்ற நிலை மாறி, இவையே மனித குலத்தின் வாழ் முறைகள் என்றாக வேண்டும்’ என்கிறார் அண்ணா. இந்தப் பண்புகள் எல்லாம் மனிதனை விலங்கினின்று வேறுபடுத்திக் காட்டுவதாகும். இந்தப் பண்புகள் இல்லாதவர்கள் ஒழுக்கமற்றவர்கள் என்பதுதான் பேரறிஞர் அண்ணாவின் பார்வை.
தனி வாழ்வில் ஒழுக்கமற்றவன் பொது வாழ்விலும் ஒழுக்கமற்றவனாகவே இருப்பான் என்பது கம்பனின் அரசியல் பார்வை. பேரறிஞர் அண்ணா குறிப்பிட்ட பாராட்டத்தக்க பண்புகளை இன்று வரை நான் கடைபிடித்துக் கொண்டிருக்கிறேன்.
பாராட்டிய ஜெயலலிதா…
என்னை இந்த நிலைக்கு ஆளாக்கிய ஜெயலலிதா என்றென்றும் விசுவாசமாக இருந்திருக்கிறேன். இதை நான் சொல்லவில்லை. ஜெயலலிதாவே கூறியிருக்கிறார். ‘அரசியல் வரலாற்றில், எந்த நாட்டின் வரலாற்றிலும் ஒருவரை ஒரு அரியாசனத்தில் அமர வைத்துவிட்டு, அதன் பின்னர் உரியவருக்கே அந்த அரியாசனம் திரும்பத் தரப்பட்டதாக வேறு வரலாறே இல்லை. அந்தப் புதிய வரலாற்றை படைத்துக் காட்டியவர் ஓ. பன்னீர்செல்வம்’ என்று என்னைப் பற்றி பெருமையாக பரதனுடன் ஒப்பிட்டுப் பேசியவர் ஜெயலலிதா.

மேலும், “மிகச் சிறிய பொறுப்புகளில், சாதாரண பொறுப்புகளில் தங்கள் வாழ்க்கையை தொடங்கி உள்ளார்கள். பின்னர் அரசியல் வாழ்க்கையில் அவர்கள் படிப்படியாக முன்னேறி இருக்கிறார்கள். அவர்களுடைய உழைப்பு, இயக்கத்தின்பால் அவர்களுக்குள்ள விசுவாசம், தலைமையிடம் அவர்கள் கொண்டுள்ள பற்று, இவற்றின் காரணமாக அவர்கள் படிப்படியாக உயர்ந்துள்ளார்கள்” என்று ஜெயலலிதா. கூறியிருக்கிறார். ஜெயலலிதாவின் வாக்கு தெய்வ வாக்கு. இதனை என் வாழ்நாளில் கிடைத்த பாக்கியமாக கருதுகிறேன்.
நய வஞ்சகம் நசுக்கப்படும்
ஒரு விதை வளருகிறது என்ற சொன்னால், அங்கு சத்தமிருக்காது. ஆனால், மரம் விழுகிறது என்று சொன்னால் பலத்த சத்தம் இருக்கும். சத்தம் எங்கு இருக்கிறது என்பது எல்லோருக்கும் நன்றாகத் தெரியும். அது அழிவுப் பாதையை நோக்கிச் செல்கிறது, வீழ்ச்சியை நோக்கி விரைந்து சென்று கொண்டிருக்கிறது. அது ஒரு மூழ்கும் கப்பல். அந்த மூழ்கும் கப்பலில் யாரும் ஏறமாட்டார்கள். அழிவிலிருந்து மீட்டெடுக்க வேண்டுமென்றால், நன்றி மறந்த, துரோகத்தின் மறுவுருவமாக விளங்குகின்ற, ஆணவச் செருக்குடைய, பொய்மையின் மறுவடிவமாக திகழ்கின்ற நய வஞ்சகம் அகற்றப்பட வேண்டும். இல்லையெனில் வீழ்ச்சி என்பது நிச்சயம். “எப்படிப்பட்ட பாவத்தைச் செய்தவர்க்கும் அதிலிருந்து தப்பிக்க வழி உண்டு.
‘செய் நன்றி மறந்த பாவத்திலிருந்து விடுபட வேறு மார்க்கம் இல்லை’ என்கிற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க அழிவிலிருந்து தப்பிப்பது என்பது அறவே இயலாத ஒன்று. ‘பொறுத்தார் பூமியாள்வார்’ என்று சொல்வார்கள். எனவே, 2026 ஆம் ஆண்டு மே மாதம் தமிழ்நாட்டுப் பூமியை ஆளப் போவது யார் என்பது தெரியும். நன்றி கெட்டவர்கள் தூக்கி எறியப்படுவார்கள். துரோகம் நிச்சயம் வீழும். நய வஞ்சகம் நசுக்கப்படும். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், கருவாடு மீனாகாது. கறந்த பால் மடி புகாது, நய வஞ்சகம் வெற்றி பெறாது” என்று அந்த அறிக்கையில் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.