பாஜக கூட்டணியில் இணைகிறாரா சீமான்… என்ன நடக்கிறது..? – பரபரக்கும் அரசியல் களம்!

2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவை வீழ்த்த வலுவான எதிரணியை உருவாக்க பாஜக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது.
இந்த நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் ரகசியமாக சந்தித்ததாக நேற்று வெளியான தகவலால் எழுந்த பரபரப்பு அடங்குவதற்குள், இன்று எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சீமானும், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும் ஒரே மேடையை பகிர்ந்து கொண்டது அரசியல் வட்டாரங்களில் விவாதப் பொருளாகி உள்ளது.
இது ஒரு தற்செயலான சந்திப்பா அல்லது பின்னால் பெரிய திட்டம் ஏதும் உள்ளதா என்ற கேள்விகள் அரசியல் வட்டாரத்தில் அலையடிக்கின்றன. என்ன நடந்தது, என்ன நடக்கிறது…?
நிர்மலா சீதாராமன் உடன் சந்திப்பா?
அண்மையில் டெல்லியில் நடந்த அமித்ஷா – எடப்பாடி சந்திப்பைத் தொடர்ந்து அதிமுக – பாஜக கூட்டணி ஏறக்குறைய உறுதியாகி விட்டதாகவே சொல்லப்படுகிறது.
ஓபிஎஸ், தினகரன் மற்றும் சசிகலா ஆகியோரை மீண்டும் அதிமுகவில் சேர்த்துக்கொள்வதற்கு தான் எடப்பாடி மறுப்பு தெரிவித்து வருவதாகவும், அவரை வழிக்குக்கொண்டு வரவே செங்கோட்டையனை பாஜக கொம்பு சீவி விட்டுக்கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. அந்த வகையில், நிர்மலா சீதாராமன் உடனான செங்கோட்டையன் நடத்தும் சந்திப்பு எடப்பாடியை வழிக்குக் கொண்டு வரும் உத்தியாகவே பார்க்கப்படுகிறது.
இதனிடையே, அதிமுக – பாஜக அணிக்குள் சீமானை கொண்டு வரவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. அதன் ஒரு பகுதியாகவே மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சீமான் நேற்று முன் தினம் இரவு சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் சந்தித்துப் பேசியதாக தகவல் வெளியானது. ஆனால், அதனை திட்டவட்டமாக மறுத்த சீமான், தனித்து தான் போட்டி என்று கூறியுள்ளார்.
ஒரே மேடையில் சீமான் – அண்ணாமலை

இந்த நிலையில், சென்னை அடுத்த காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் பல்கலைக் கழகத்தில் இந்திய ஜனநாயகக் கட்சி நிறுவனர் பாரிவேந்தரின் தமிழ் பேராயம் நடத்தும் ‘சொல் தமிழா சொல்’ நிகழ்ச்சியின் இறுதிச் சுற்று இன்று நடைபெற்றது.
அதில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் கலந்துகொண்டனர். பரபரப்பான அரசியல் சூழல் நிலவி வரும் நிலையில் சீமானும் அண்ணாமலையும் ஒரே மேடையை பகிர்ந்துகொண்டது முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் அண்ணாமலை பேசுகையில் சீமானை புகழ்ந்து பேசியதும், சீமான் பேசும்போது “தமிழின் பெருமையை பிரதமர் மோடி உயர்த்தி பிடிக்கிறார்” எனப் புகழ்ந்து பேசியதும் நாம் தமிழர் கட்சி, பாஜக கூட்டணியை நோக்கி நகர்கிறதா என்ற கேள்வியை எழுப்பி உள்ளது. ” பாஜகவுடன் அவருக்கு ஒரு மறைமுக நெருக்கம் உருவாகி வருகிறதோ..?!” என இது குறித்து சமூக வலைதளங்களிலும் பரபரப்பாக கருத்துகள் பதிவிடப்பட்டு வருகின்றன
கட்சி வட்டாரங்கள் சொல்வது என்ன?
என்றாலும், நாம் தமிழர் மற்றும் பாஜகவின் உள் வட்டார தகவல்கள் என்ன சொல்கின்றன?
2026 தேர்தலை மனதில் வைத்து, தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு எதிராக ஒரு மாற்று சக்தியை உருவாக்க பாஜக தீவிர முயற்சியில் உள்ளது. அந்த வகையில், அமித்ஷாவுடனான எடப்பாடி பழனிசாமியின் சந்திப்பைத் தொடர்ந்து, அதிமுக-பாஜக கூட்டணி ஏறக்குறைய உறுதியாகி விட்டதாக பேசப்படுகிறது. இதனிடையே, சீமானை இந்த அணியில் இணைக்கும் முயற்சியும் நடப்பதை மறுப்பதற்கில்லை என்கின்றன பாஜக உள்வட்டார தகவல்கள். நாம் தமிழர் கட்சிக்கு இருக்கும் 8-10% வாக்கு வங்கி, பாஜக-அதிமுக கூட்டணிக்கு ஒரு பெரிய பலமாக அமையும் என்கிறார்கள் அக்கட்சியின் மேலிட புள்ளிகள்.
சீமானின் நிலைப்பாடு
சீமான் எப்போதும் தமிழ் தேசியவாதத்தை முன்னிறுத்தி, தனித்து போட்டியிடுவதையே கொள்கையாக வைத்துள்ளார். “நாம் தமிழர் தனித்து நிற்கும்,” என அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார். நாம் தமிழர் கட்சியின் உள்வட்டாரத்தில் விசாரித்தாலும், “சீமான்< பாஜகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை” என்கிறார்கள். ஆனால், அவரது சமீபத்திய பேச்சுகளில் திமுகவை கடுமையாக தாக்குவதும், பெரியார் குறித்த சர்ச்சை பேச்சுகளும் பாஜகவை மறைமுகமாக ஆதரிப்பது போன்ற தொனி தெரிவதும் கவனிக்கப்படுகின்றது. “ ‘மோடி தமிழை உயர்த்துகிறார்’ என்ற அவரது இன்றைய கருத்து, தமிழர் பிரச்னைகளை மத்திய அரசுக்கு எடுத்துச் செல்ல ஒரு தந்திரமாக இருக்கலாம் அல்லது பாஜகவுடன் ஒரு உடன்பாட்டின் ஆரம்பமாக இருக்கலாம்” என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

இந்த நிலையில் திமுக தரப்பிலோ, “பாஜகவும் நாம் தமிழர் கட்சியும் இணைந்து தமிழகத்தில் குழப்பத்தை உருவாக்க முயல்கின்றன” என குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால், நாம் தமிழர் தம்பிகள், “இது தமிழர் உரிமைகளை முன்னிறுத்தும் முயற்சி மட்டுமே,” என்கின்றனர். பாஜக தரப்பில், “சீமானை இணைத்தால், திராவிட ஆதிக்கத்தை உடைக்க முடியும்,” என அக்கட்சி நம்புகிறது. ஆனால், சீமானின் தமிழ் தேசியவாதம் பாஜகவின் மத்திய ஆதிக்கக் கொள்கைகளுடன் எப்படி ஒத்துப்போகும் என்பது புரியாத புதிராக உள்ளது.
என்ன நடக்கிறது?
அண்ணாமலை – சீமான் இடையே நடந்தது ஒரு தற்செயலான சந்திப்பு என்றால், அதன் தாக்கம் அரசியல் விவாதங்களுடன் முடிந்துவிடலாம். ஆனால், இதன் பின்னால் ஒரு ரகசிய உடன்பாடு இருக்கிறதென்றால், 2026 தேர்தலில் திமுகவுக்கு எதிரான ஒரு புதிய அணி உருவாகலாம். பாஜகவுக்கு தமிழகத்தில் வாக்கு வங்கி குறைவு என்றாலும், நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவீதம் அவர்களுக்கு ஒரு முக்கிய பலமாக அமையலாம். ஆனால், சீமான் இதற்கு இணங்குவாரா என்பது கேள்விக்குறிதான். நாம் தமிழர் கட்சியினரோ, “சீமான் தமிழர் நலனுக்காக எந்த மேடையையும் பயன்படுத்துவார், ஆனால் கூட்டணி இல்லை,” என மறுக்கிறார்கள். மறுபுறம், பாஜகவோ, “சீமானை எங்கள் பக்கம் கொண்டு வர சற்று நாட்கள் ஆகலாம், ஆனால் சாத்தியமற்றது இல்லை,” என நம்பிக்கை தெரிவிக்கிறது.
மொத்தத்தில் சீமானின் தமிழ் தேசியவாதமும், பாஜகவின் இந்துத்துவமும் முரண்படும் என்றாலும், பொது எதிரியான திமுகவை எதிர்க்க ஒரு தற்காலிக உடன்பாடு உருவாகலாம். அந்த வகையில், தமிழக அரசியலில் பாஜகவும் நாம் தமிழரும் இணைவது சாத்தியமா என்பதற்கு வரும் நாட்களே பதில் சொல்லும்!