நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்தது ஏன்? – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!

பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் இன்று டெல்லியில் நடக்கிறது. இக்கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்தது ஏன் என்பது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விரிவாக விளக்கம் அளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதின் முழு விவரம் வருமாறு:-

‘மக்களைப் பழிவாங்குகிற பட்ஜெட்’

ஒரு நல்ல அரசு என்பது வாக்களித்த மக்களுக்கு மட்டுமல்ல – வாக்களிக்க மறந்த மக்களுக்கும் சேர்ந்தே பாடுபட வேண்டும்!

இப்படித்தான் தமிழ்நாடு அரசு பணியாற்றிக் கொண்டு இருக்கிறது! ஏன், மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு வருவதற்கு முன்பு இருந்த எல்லா ஒன்றிய அரசுகளும்கூட அப்படித்தான் இருந்தன. ஆனால், இந்தப் பெருந்தன்மை ஒன்றிய பா.ஜ.க. அரசிடம் இல்லை! இவர்கள் மட்டும்தான் அரசியல் நோக்கத்துடன் அரசை நடத்துகிறார்கள்.

அதற்கு அடையாளம்தான், கடந்த 23-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்களுக்கு எதிராக நடந்து கொண்ட பா.ஜ.க.வைப் பல்வேறு மாநில மக்களும் புறக்கணித்தார்கள். அப்படி புறக்கணித்த மாநிலங்களை – அந்த மாநில மக்களைப் பழிவாங்குகிற பட்ஜெட்டாகத்தான், ஒன்றிய நிதி அமைச்சர் தாக்கல் செய்துள்ள பட்ஜெட் அமைந்துள்ளது. ஒட்டுமொத்த இந்திய மக்களுக்காகவும் உருவாக்க வேண்டிய பட்ஜெட்டை – ‘இந்தியா’ கூட்டணிக்கு வாக்களித்த மக்களைப் பழிவாங்க உருவாக்கி இருக்கிறார். இது, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்பால், அவர் ஏற்றுக்கொண்ட பதவிப் பிரமாணத்துக்கே முரணானது.

ஒன்றிய பாஜக அரசானது, தொடர்ச்சியாகத் தமிழ்நாட்டைப் புறக்கணித்துக் கொண்டு வருகிறது. தமிழ்நாட்டுக்கு என்று அவர்கள் அறிவித்த ஒரே ஒரு சிறப்புத் திட்டம் என்றால், அது, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைதான். ஆனால் அதுவும் பத்தாண்டுகள் ஆகியும் என்ன நிலைமையில் இருக்கிறதென உங்களுக்கே நன்றாகத் தெரியும். தமிழ்நாட்டுக்கென எந்தச் சிறப்புத் திட்டத்தையும் கொடுக்காமல், தமிழ்நாட்டு மக்கள் பாஜக-வுக்கு வாக்களிக்க வேண்டும் என எப்படித்தான் எதிர்பார்க்கிறார்களோ தெரியவில்லை.

மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நிதி தருவதில்லை

இந்த பட்ஜெட்டில் நாம் மிகவும் எதிர்பார்த்தது… சென்னை மெட்ரோ ரயில் திட்ட இரண்டாம் கட்டப் பணிகளுக்கான ஒன்றிய அரசின் நிதி! ஆனால், இப்போது தமிழ்நாடு அரசுதான் இந்தத் திட்டப்பணிகளை முடுக்கிவிட்டுச் செயல்படுத்திக் கொண்டு இருக்கிறது! ஒன்றிய அரசோ, தன்னோட பங்காக ஒரு ரூபாய் கூட விடுவிக்காமல், வேண்டுமென்றே மூன்று ஆண்டுகளாகக் காலம் தாழ்த்திக் கொண்டு இருக்கிறது!

கேட்டால், ‘இது மாநில அரசின் திட்டம்’ என நாடாளுமன்றத்திலேயே பதில் சொல்கிறார்கள்… அப்படி என்றால், ரயில்வே துறையை மாநில அரசுக்குக் கொடுத்துவிடுவீர்களா? கோவை, மதுரை மாநகரங்களில் மெட்ரோ ரயில் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான ஒப்புதல் அளிப்பதைப் பற்றி மூச்சே விடவில்லை! ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளில் இதே ஒன்றிய அரசு, நமது நகரங்களைவிடப் பல சிறிய நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்து – நிதி உதவியும் வாரி வழங்கியிருக்கிறது. இது எந்த விதத்தில் நியாயம்?

‘வெள்ள நிவாரணமும் இல்லை’

கடந்த ஆண்டு இரண்டு முறை புயல்கள் தாக்கி, கடும் இயற்கைப் பேரிடர்களைத் தமிழ்நாடு சந்தித்தது! இதற்கு நிவாரணமாக, 37 ஆயிரம் கோடி ரூபாய் கேட்டோம். ஆனால், ஆண்டுதோறும் வழக்கமாக வழங்கப்பட வேண்டிய 276 கோடி ரூபாய் நிதியை அளித்துவிட்டு, ஏமாற்றிவிட்டார்கள். சரி, இந்த பட்ஜெட்டிலாவது வெள்ள நிவாரண அறிவிப்பு வெளியாகுமெனக் காத்திருந்தோம். ஆனால், தங்களின் பதவி நாற்காலிக்கு, கால்களாக இருக்கும் மாநிலங்களுக்குப் பத்தாயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் நிதியை அள்ளி வழங்கியிருக்கிறார் ஒன்றிய நிதி அமைச்சர்.

ஒட்டுமொத்தமாகச் சொல்லவேண்டும் என்றால், தமிழ்நாட்டுக்குப் புதிய திட்டங்களைத் அறிவிக்கவில்லை என்பதோடு – ஏற்கனவே நடைபெற்று வரும் திட்டங்களுக்கான நிதியையும் குறைக்கும் வஞ்சக முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது இந்த ஒன்றிய அரசு.

கல்வி நிதியும் நிறுத்தி வைப்பு

இது எல்லாவற்றையும்விடக் கொடுமையான விஷயம் என்னவென்றால்.. தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையை முடக்கும் வகையில், இருபது ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்படுத்தப்பட்டு வரும் ‘அனைவருக்கும் கல்வி இயக்கம்’ திட்டத்தின்கீழ், வழக்கமாக விடுவிக்கப்பட வேண்டிய நிதியைக் கூட நிறுத்தி வைத்துள்ளார்கள். தேசிய கல்விக் கொள்கையைச் செயல்படுத்துவோம் எனக் கையெழுத்து போட்டால்தான் நிதியை விடுவிப்போம் என்று அடம்பிடிக்கிறது ஒன்றிய அரசு. மாணவ – மாணவிகளின் கல்வி பாழாகுமே… அவர்களுக்குக் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாத நிலை வருமே என ஒரு துளி கவலை கூட இல்லாமல், தங்களின் கொள்கைத் திணிப்பையும் இந்தித் திணிப்பையும் மட்டுமே முன்னிறுத்தக் கூடியதாகத்தான் பா.ஜ.க. அரசு இருக்கிறது.

ஒன்றிய அரசுக்குத் தமிழ்நாட்டு மக்களின் குரலாக – ஏன், இந்திய நாட்டு மக்களின் குரலாக ஒன்று சொல்கிறேன்… மேலும் மேலும் தவறு செய்கிறீர்கள்! மேலும் மேலும் தோல்விகளைச் சந்திப்பீர்கள்! இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கொந்தளிப்பதுபோல, இந்திய மக்களின் மனங்களும் கொந்தளிப்பில் இருக்கிறது! இதற்கு பாஜக பதில் சொல்லியே தீர வேண்டும்!

இவ்வாறு மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நிதி ஆயோக் கூட்டத்தை புதுச்சேரி, தெலங்கானா, கர்நாடகா, பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், ஜார்க்கண்ட் மாநிலங்களும் புறக்கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Dprd batam gelar sidang paripurna, laporan reses dprd kota batam masa persidangan i tahun sidang 2024. Meet marry murder. through registry editor (for all editions).