Amazing Tamilnadu – Tamil News Updates

அமலுக்கு வந்த ‘ஃபாஸ்டேக்’ புதிய விதிமுறைகள்… தெரிந்துகொள்ள வேண்டியவை என்ன?

தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச் சாவடிகளில் டிஜிட்டல் முறையில் சுங்க கட்டணம் செலுத்த ‘ஃபாஸ்டேக்’ முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
இதன்படி, வாகனத்தின் முன் கண்ணாடியில் ஒட்டப்படும் ஃபாஸ்டேக் ஸ்டிக்கர் தானியங்கி எந்திரம் மூலம் ஸ்கேன் செய்யப்பட்டு, பயனரின் வங்கிக் கணக்கில் இருந்து நேரடியாக சுங்க கட்டணம் வசூலிக்கப்படும். கட்டணம் செலுத்த வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதைத் தவிர்க்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டது.

நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) மற்றும் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் இணைந்து சுங்க சாவடி கட்டணத்தை ஒழுங்குபடுத்தும் வகையிலும், மோசடிகளை தடுத்து தகராறுகளை குறைக்கும் வகையிலும் ‘ஃபாஸ்டேக்’ பயன்படுத்துவதில் சில முக்கிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இவை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன.

தெரிந்துகொள்ள வேண்டியவை…

அதன்படி, வாகனங்கள் சுங்கச் சாவடியை அடைவதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பு ஃபாஸ்டேக் பிளாக் லிஸ்ட் செய்யப்பட்டிருந்தாலோ, ஹாட் லிஸ்டில் இருந்தாலோ, குறைந்த பண இருப்பைக் கொண்டிருந்தாலோ சுங்கச் சாவடியில் பணப்பரிவர்த்தனை நிராகரிக்கப்படும். இதற்கான பிழைக் குறியீடு 176 (error code 176) ஆக இருக்கும்.

மேலும், தாமதமான பணம் செலுத்தல் அல்லது தடைசெய்யப்பட்ட டேக் வைத்துள்ள பயனர்களுக்கும் இனி கூடுதல் அபராதம் விதிக்கப்படும். புதிய வழிகாட்டுதல் விதிகளின்படி, டோல் ரீடரை கடந்து செல்லும் நேரத்திலிருந்து 15 நிமிடங்களுக்கு மேல் சுங்கவரி பரிவர்த்தனையின் செயலாக்கம் நடைபெற்றால் ஃபாஸ்டேக் பயனாளர்களுக்கு கூடுதல் கட்டணம் விதிக்கப்படலாம்.

புதுப்பிக்கப்பட்ட நேஷனல் எலக்ட்ரானிக் டோல் கலெக்சன் (NETC) வழிகாட்டுதல்களின்படி, ஒரு பரிவர்த்தனை தாமதமாகி, பயனரின் ஃபாஸ்டேக் கணக்கில் போதுமான இருப்பு இல்லை என்றால் அதற்கு இனி டோல் ஆப்பரேட்டரே பொறுப்பாவார். எனவே பயணங்களைத் தொடங்குவதற்கு முன்பே ஃபாஸ்டேக்கில் போதிய பணயிருப்பு உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டியது அவசியம். மேலும் பயனர் விவரங்களை அவ்வப்போது பதிவு செய்து அதனை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

முன்பு பயனர்கள் தங்களது பாஸ்டேக்கை டோல் கேட்டில் ரீசார்ஜ் செய்து அதனை கடந்து செல்லும் வசதி இருந்தது. ஆனால், தற்போது புதிய அமலாகியுள்ள புதிய விதிமுறையின் படி, பயனர்கள் தங்களது ஃபாஸ்டேக் நிலையை முன்கூட்டியே சரிபார்க்க வேண்டியது அவசியமாகும்.

Exit mobile version