NEP:தமிழகத்துக்கு மத்திய அரசின் அடுத்த நெருக்கடி… விழிப்பிதுங்கும் பல்கலைக்கழகங்கள்!

தேசிய கல்விக் கொள்கையை ( National Education Policy – NEP) முன்வைத்து தமிழக அரசுக்கு மத்திய அரசின் அடுத்த குடைச்சல் தொடங்கிவிட்டது. இந்த முறை தமிழகத்தில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழுவிடமிருந்து வந்துள்ள சுற்றறிக்கையால், மத்திய – மாநில அரசுகளுக்கு இடையேயான அடுத்தகட்ட மோதல் வெடிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ஏற்கெனவே தேசியக் கல்விக் கொள்கையில் மும்மொழி திட்டம் உள்ளதால், அது இந்தி மற்றும் சமஸ்கிருத மொழி திணிப்புக்கே வழி வகுக்கும் எனக் கூறி, தேசிய கல்விக் கொள்கையின் அம்சமான பிஎம்ஸ்ரீ பள்ளி திட்டத்தில் தமிழகம் சேர மறுத்துவிட்டது. இதனால், தமிழகத்துக்குத் தர வேண்டிய கல்வி நிதியை மத்திய அரசு கடந்த ஆண்டு முதல் நிறுத்திவிட்டது. அந்த வகையில் எஸ்எஸ்ஏ திட்டத்தின் 2023-24 ஆம் கல்வியாண்டின் 4 ஆம் தவணை நிதி ரூ.249 கோடியும், 2024-25 கல்வியாண்டின் நிதி ரூ.2,152 கோடியும் மத்திய அரசால் இன்னும் விடுவிக்கப்படாததால் மாநில அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பான விவாதத்தின்போது தான், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழக எம்.பி-க்களை நாகரிகமற்றவர்கள் என விமர்சித்து, அது பெரும் சர்ச்சையாகி பின்னர் அவர் மன்னிப்பு கேட்டார்.

NEP தூதர்களை நியமிக்க அறிவுறுத்தல்

இந்த நிலையில், மும்மொழிக் கொள்கையை தமிழகத்தில் அமல்படுத்த வைப்பதற்கான அடுத்தகட்ட நடவடிக்கையாக மாநிலத்தில் உள்ள உயர் கல்வி நிறுவனங்கள் (The higher educational institutions -HEIs) பக்கம் தனது கவனத்தை திருப்பி உள்ளது மத்திய அரசு.

ஏற்கெனவே கடந்த 2023 ஆம் ஆண்டில் யுஜிசி-யிடமிருந்து தமிழகத்தின் அனைத்து துணைவேந்தர்கள், இயக்குநர்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களின் (HEIs) முதல்வர்களுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பப்பட்டு இருந்தது. அதில், ஒவ்வொரு உயர் கல்வி நிறுவனமும், தேசிய கல்விக் கொள்கையை மாணவர்களிடம் விளக்கி, ஊக்குவிப்பதற்காக தங்கள் நிறுவனத்தில் இருந்து மூன்று மாணவர்களை NEP தூதர்களாக (NEP SAARTHI) நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தது.

ஆனால், தேசியக் கல்விக் கொள்கையை செயல்படுத்துவதில் மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே நிலவும் மோதலை கருத்தில்கொண்டு, தமிழக உயர் கல்வி நிறுவனங்கள் இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அடுத்த நெருக்கடி

இந்த நிலையில், NEP தூதர்களாக நியமிக்கப்பட்ட மாணவர்களின் செயல்பாடுகளைப் பதிவேற்றுமாறு தமிழகத்தில் உள்ள அனைத்து உயர்கல்வி நிறுவனங்களையும் யுஜிசி தற்போது கேட்டுக்கொண்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசுக்கும் மத்திய கல்வி அமைச்சகம் கடிதம் அனுப்பி உள்ள நிலையில் இரு தரப்புக்கும் இடையே மீண்டும் மோதல் வெடிக்கும் சூழல் உருவாகி உள்ளது.

மேலும், இந்த விவகாரத்தில் பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்ற அடிப்படையில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியும் தலையிட்டு, உயர் கல்வி நிறுவனங்களுக்கு நெருக்கடி கொடுக்கக்கூடும் எனத் தெரிகிறது.

விழிப்பிதுங்கும் பல்கலைக்கழகங்கள்

அப்படி தமிழக உயர் கல்வி நிறுவனங்கள் அழுத்தத்துக்கு பணிந்தால் அது மாநில அரசை பகைத்துக்கொண்டது போல் ஆகி விடும். மறுக்கும் பட்சத்தில் மத்திய அரசு தரப்பில் இருந்து நெருக்கடிகள் போன்றவற்றை எதிர்கொள்ள நேரிடலாம். இதனால், தமிழக பல்கலைக்கழகங்களும் இதர உயர் கல்வி நிறுவனங்களும் விழி பிதுங்கிப் போய் நிற்கின்றன.

ஆக மொத்தத்தில், ” தேசியக் கல்விக் கொள்கையை முன்வைத்து வரும் நாட்களில் தமிழகத்துக்கு மேலும் நெருக்கடிகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதை சமாளிக்க தமிழக அரசு உடனடியாக தனது மாநில கல்விக் கொள்கையை உறுதியாக செயல்படுத்தா விட்டால், இந்த மோதல் மென்மேலும் தொடரத்தான் செய்யும். இதனால் பாதிக்கப்படப்போவது என்னவோ மாணவர்களும் ஆசிரியர்களும் தான்” என்கிறார்கள் கல்வியாளர்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

자동차 생활 이야기. Bahas 2 agenda penting, pjs wali kota batam hadiri rapat paripurna dprd kota batam. Jimmy palmer sky immo.