மீண்டும் தொடங்கிய நாகை – இலங்கை கப்பல் சேவை!

சுமார் 40 ஆண்டு கால இடைவெளிக்குப் பின்னர், நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகம் வரை கடந்த 2023 அக்டோபர் 14 ஆம் தேதி ‘செரியாபாணி’ என்ற பெயரில் பயணிகள் கப்பல் சேவை தொடங்கியது.
ஆனால், வடகிழக்கு பருவமழை மற்றும் பல காரணங்களால் அதே மாதம் 23 ஆம் தேதி முதல் அந்த கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதன்பின்னர் ‘சுபம்’ என்ற கப்பல் நிறுவனம் மீண்டும் நாகையிலிருந்து காங்கேசன் துறைக்கு ‘சிவகங்கை’ என்ற பெயரில் கப்பல் சேவையை, 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16 முதல் தொடங்கியது. இந்த கப்பல் சேவை வாரத்தில் 5 நாள் இயக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் சில மாதங்களுக்கு முன் தற்காலிமாக நிறுத்தப்பட்டது. தற்போது பருவமழை ஓய்ந்துவிட்டதால், மீண்டும் இந்தாண்டுக்கான கப்பல் போக்குவரத்து பிப்ரவரி 12 ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்க உள்ளதாகவும், இனி வாரத்துக்கு செவ்வாய்கிழமை தவிர இதர 6 நாட்களும் கப்பல் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
சுற்றுலா பயணிகளிடையே இந்த அறிவிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தொழில்நுட்ப சான்றிதழ் அனுமதி கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. இதனால் அறிவித்தபடி பிப்ரவரி 12 அன்று கப்பல் போக்குவரத்து தொடங்கப்படாமல் தள்ளி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், தற்போது அனைத்து அனுமதிகளும் வழங்கப்பட்டதால் நாகை – இலங்கை இடையேயான கப்பல் சேவை இன்று முதல் மீண்டும் தொடங்கியது. காலை தொடங்கிய கப்பல் சேவையை மும்மதத்தை சேர்ந்தவர்களும் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இந்த கப்பலில் 83 பயணிகள் நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு பயணம் செய்தனர்.

டிக்கெட் முன் பதிவு
டிக்கெட் முன் பதிவுக்கு www.sailsubham.com என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
இதில் ஒரு நபர் 10 கிலோ வரை பொருட்கள் எடுத்து செல்லலாம். 60 கிலோ வரை கட்டணம் செலுத்தி எடுத்து செல்லலாம். இலங்கையில் 3 நாள் தங்கி சுற்றி பார்த்து வரும் ‘பேக்கேஜ்’ திட்டத்தை நடைமுறைப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக ‘சுபம்’ கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.