உலக நாடுகளை உறைய வைத்த மியான்மர்-தாய்லாந்து நிலநடுக்கம்… 1000+ பலி, உதவும் இந்தியா!

வெள்ளிக்கிழமை அன்று மதியம் மியான்மர் மற்றும் தாய்லாந்தை தாக்கிய 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிர்களை பறித்து, பல்லாயிரக் கணக்கான மக்களை கண்ணீரிலும் துயரத்திலும் ஆழ்த்தியுள்ளது.
மியான்மரின் மண்டலே நகருக்கு அருகே, சகைங் என்ற இடத்தில் மையம் கொண்ட இந்த பேரிடர், தாய்லாந்து தலைநகர் பாங்காக் உள்ளிட்ட பல பகுதிகளையும் பாதித்தது. இந்தியா “ஆபரேஷன் பிரம்மா” என்ற பெயரில் மியான்மருக்கு உதவி அனுப்பியுள்ள நிலையில், இந்த நிலநடுக்கத்தின் பாதிப்புகள் உலக நாடுகளை உறையவைத்துள்ளன.
பேரழிவின் தொடக்கம்
மியான்மரின் மண்டலே பகுதியில் வெள்ளிக்கிழமை மதியம் 12:50 மணியளவில் தொடங்கிய இந்த நிலநடுக்கம், வெறும் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிகழ்ந்ததால் அதன் தாக்கம் பல மடங்கு அதிகமாக இருந்தது. முதல் நடுக்கத்தை தொடர்ந்து 6.4 ரிக்டர் அளவிலான பின்னடுக்கமும் (aftershock) ஏற்பட்டது. மண்டலேயில் கட்டிடங்கள் இடிந்து, பாலங்கள் உடைந்து, சாலைகள் பிளவுபட்டன. ஒரு பழமையான மசூதி இடிந்ததில் மூவர் உயிரிழந்தனர். உயிரைக் காப்பாற்றிக் கொள்ள மக்கள் தெருவில் அலறியபடி ஓடினர்.இந்த பேரிடர், மியான்மரின் பல ஆண்டு உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்ட மக்களை மேலும் துயரத்தில் தள்ளி உள்ளது.
பாங்காக்கில் பதற்றம்
மியான்மரிலிருந்து 900 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாங்காக்கிலும் இந்த நிலநடுக்கம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. கட்டுமானத்தில் இருந்த 33 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து, குறைந்தது 10 பேர் உயிரிழந்தனர். “கட்டிடம் திடீரென குலுங்கி, சில நொடிகளில் தரைமட்டமானது; தூசி மூட்டத்தில் மக்கள் அலறினர். பாங்காக்கில் உயரமான கட்டிடங்களில் தண்ணீர் தொட்டிகள் அசைந்து, மக்கள் பீதியில் தெருவுக்கு ஓடினர்” என்று நேரில் பார்த்தவர்கள் கூறியதாக ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன. அரசு அவசர நிலையை பிரகடனம் செய்து, மெட்ரோ சேவைகளை நிறுத்தியது. “எங்கள் குடும்பம் பாதுகாப்பாக வெளியேறியது, ஆனால் பலருக்கு அது சாத்தியமாகவில்லை” என்று இந்த பேரிடரில் தப்பிய பாங்காக் குடியிருப்பாளர் ஒருவர் கண்ணீருடன் கூறி உள்ளார்.

உயிரிழப்பு அதிகரிக்கும்?
மியான்மர் அரசின் தகவலின்படி, மார்ச் 29 காலை வரை 1,002 பேர் உயிரிழந்து, 2,376 பேர் காயமடைந்துள்ளனர். ஆனால், அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) இது 10,000-ஐ தாண்டலாம் என எச்சரிக்கிறது. மண்டலேயில் மடாலயமொன்றில் சிக்கிய துறவிகளை மீட்க முயற்சிகள் தொடர்கின்றன. “எங்களிடம் போதிய இயந்திரங்கள் இல்லை; ஆனால் மீட்பு பணியை நிறுத்த மாட்டோம்,” என்று மீட்பு பணியாளர் ஒருவர் கூறினார். பாங்காக்கில் 100-க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக அஞ்சப்படுகிறது. இந்த பேரிடர், அந்த நாட்டு மக்களின் கனவுகளை சிதைத்து, அவர்கள் வாழ்வில் நீங்கா துயரத்தை ஏற்படுத்திவிட்டுச் சென்றுள்ளது.
இந்தியாவின் ‘ஆபரேஷன் பிரம்மா’
இந்த துயரத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியா தனது உதவிக்கரத்தை நீட்டியுள்ளது. “ஆபரேஷன் பிரம்மா” என்ற பெயரில், 15 டன் நிவாரண பொருட்கள் – கூடாரங்கள், படுக்கைகள், உணவு, மருந்துகள் – மியான்மரின் யாங்கூனுக்கு அனுப்பப்பட்டுள்ளன. “மியான்மர் மக்களுக்கு முதல் உதவியாளராக இந்தியா இருக்கிறது,” என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, “எல்லா உதவிகளையும் செய்ய தயாராக உள்ளோம்,” என்று உறுதியளித்துள்ளார்.

உலக நாடுகளும் உதவிக்கரம்
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், “நாங்கள் ஏற்கனவே மியான்மர் அதிகாரிகளுடன் பேசியுள்ளோம்; இது ஒரு மோசமான பேரிடர், நாங்கள் உதவுவோம்,” என்று அவர் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) பலி எண்ணிக்கை 10,000-ஐ தாண்டலாம் என எச்சரித்துள்ள நிலையில், அமெரிக்க சர்வதேச மேம்பாட்டு நிறுவனம் (USAID) தாய்லாந்துக்கு மீட்பு குழுக்களை அனுப்புவதாக அறிவித்துள்ளது. மியான்மருக்கு மருத்துவ உதவி மற்றும் தற்காலிக தங்குமிடங்களை வழங்க தயாராக உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம், மியான்மருக்கு உணவு, தண்ணீர், மற்றும் அவசர மருத்துவ பொருட்களை அனுப்புவதற்கான திட்டங்களை அறிவித்துள்ளது. இது, பேரிடருக்கு பிந்தைய மீட்பு மற்றும் மறுவாழ்வு பணிகளுக்கு முக்கிய பங்களிப்பாக அமையும்.
மியான்மரின் அண்டை நாடான சீனா, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட யுனான் மாகாணத்தில் ஏற்பட்ட சேதங்களை கருத்தில் கொண்டு, மியான்மருக்கு மருத்துவ குழுக்கள், உணவு பொருட்கள், மற்றும் 5 மில்லியன் யுவான் மதிப்பிலான நிவாரண உதவிகளை அனுப்புவதாக அறிவித்துள்ளது. “எங்கள் அண்டை நாட்டு மக்களுக்கு இது ஒரு கடினமான நேரம்; நாங்கள் அவர்களுடன் நிற்கிறோம்,” என்று சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பு (WHO), மியான்மருக்கு அவசர மருத்துவ பொருட்களை அனுப்புவதற்கான திட்டங்களை ஆராய்ந்து வருகிறது. மியான்மரின் மோசமாக பாதிக்கப்பட்ட 6 பகுதிகளுக்கு, குறிப்பாக உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கும் பணிகளை ஐநா ஒருங்கிணைத்து வருகிறது.
நிலநடுக்கத்துக்கு என்ன காரணம்?

இந்த நிலநடுக்கம் மியான்மரின் சகைங் பகுதியில் உள்ள புவிப்பிளவு (Sagaing Fault) காரணமாக ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது ஒரு நில அதிர்வு பகுதி என்பது அறியப்பட்டாலும், இத்தகைய பேரழிவை எதிர்பார்க்க முடியவில்லை. “கட்டிடங்கள் நிலநடுக்கத்தை தாங்கும் வகையில் இல்லை,” என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். உள்நாட்டு போர், வறுமையால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ள மியான்மர் மக்களை இந்த பேரிடர் மேலும் துயரத்துக்குள் தள்ளி உள்ளது.
மியான்மர்-தாய்லாந்து நிலநடுக்கம், இயற்கையின் சக்தியை அவ்வப்போது நமக்கு நினைவூட்டுகிறது என்றே சொல்ல வேண்டும்!