தமிழகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் அறிவிக்கப்பட்ட மிக முக்கியமான திட்டங்களில் ஒன்று மகளிருக்கான இலவச பேருந்து திட்டம். இதன் மூலம் தமிழகத்தில் ஏராளமான பெண்கள் பயன்பெற்று வருகிறார்கள்
இந்த நிலையில், தமிழகப் போக்குவரத்து கழகம் அண்மையில் நீல நிறப் பேருந்துகளை அறிமுகப்படுத்தியது. இந்த புதிய நீல நிற சொகுசு பேருந்துகள் சென்னை மற்றும் கோவை உள்ளிட்ட நகரங்களில் தொடங்கப்பட்டுள்ளது.இந்த பேருந்துகளில் தானியங்கி கதவுகள், டிஜிட்டல் பலகை, சிசிடிவி கேமரா, சார்ஜிங் வசதி, மாற்று திறனாளிகளுக்கான பிரத்யேக இருக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த பேருந்துகள் டீலக்ஸ் பேருந்துகள் போன்ற தோற்றத்தில் காணப்படுவதால், இலவச பேருந்துகளில் பயணிக்கும் பெண்கள் இதில் கட்டணம் வசூலிக்கப்படும் என நினைத்து ஏறத் தயங்கி வந்தனர்.
இந்த நிலையில், நீல நிறப் பேருந்துளிலும் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்று அரசுப் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் இயக்கப்படும் 9,000 நகர பேருந்துகளில் 7,300க்கும் மேற்பட்ட சாதாரண கட்டண பஸ்களில், இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. சென்னையில் 1,559 சாதாரண கட்டண பஸ்களில், பெண்கள் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர்.
நகர்ப்புறங்களில், ‘ஒயிட் போர்டு’ பஸ்களிலும், கிராமப்புறங்களில் நகர பஸ்களிலும், பெண்கள் இலவசமாக பயணிக்கலாம். தமிழகம் முழுதும் தினமும் சராசரியாக, 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணித்து வருகின்றனர். சென்னையில் சமீபத்தில் துவங்கப்பட்டுள்ள நீல நிற சொகுசு பஸ்களிலும், இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறுகையில், “மாநகரப் போக்குவரத்து கழகத்தில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள நீல நிறத்தில் இருக்கும், 130 புதிய சொகுசு பேருந்துகளிலும், பெண்கள் இலவச பயண திட்டம் அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்த பேருந்துகள், ‘மகளிர் விடியல் பயணம்’ என பெயரிடப்பட்டு இருக்கும். இந்த வகை பேருந்து சேவை துவங்கிய போது, சொகுசு பஸ்களாக இயக்கப்பட்டன. தற்போது சாதாரண கட்டண பேருந்துகளாவே இயக்கப்படுகின்றன. கோவை, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட அரசு போக்குவரத்து கழகங்களிலும், நீல நிற டவுன் பேருந்துகளில்கணிசமான அளவுக்கு, ‘மகளிர் விடியல் பயண பஸ்கள்’ இயக்கப்பட்டு வருகின்றன” எனத் தெரிவித்தனர்.