” ‘கச்சத்தீவு’ விவாதிக்கப்படவில்லை” – மோடியின் இலங்கை பயணத்தால் தமிழக மீனவர் பிரச்னை தீருமா?

பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறைப் பயணமாக வெள்ளிக்கிழமை இலங்கை சென்றார். மோடியின் இந்த பயணத்தில், தமிழ்நாடு மீனவர்களின் நீண்டகால பிரச்னை முக்கிய விவாதப் பொருளாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விடுவிக்கவும், கச்சத்தீவு தீவை மீட்கவும் மத்திய அரசை வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில், மோடியின் பயணத்தில் மீனவர் பிரச்னை விவாதிக்கப்பட்டதா, இதற்கு தீர்வு கிடைக்குமா என்பதை அங்கிருந்து வெளியான தகவல்களின் அடிப்படையில் பார்க்கலாம்.
மோடிக்கு இலங்கையின் உயரிய விருது
மோடியின் இலங்கை பயணம், இந்தியாவின் “அண்டை நாடு முதலில்” கொள்கையை வலுப்படுத்துவதற்காகவும், இலங்கையுடனான உறவை மேம்படுத்துவதற்காகவும் திட்டமிடப்பட்டது. பிரதமர் மோடி விமானம் மூலம் நேற்று இரவு இலங்கைக்கு சென்றார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து இலங்கையில் இந்தியா உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களை பிரதமர் மோடி, அதிபர் அனுரா குமார திசநாயகே ஆகியோர் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தனர். திரிகோணமலையின் சம்பூரில் இந்தியா உதவியுடன் செயல்படுத்தப்படும் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையத் திட்டம், தம்புள்ள என்ற இடத்தில் 5 ஆயிரம் மெட்ரிக் டன் வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தைக் கட்டுப் படுத்தக்கூடிய குளிர்பதன வசதித் திட்டம், இலங்கை முழுவதும் உள்ள சுமார் 5 ஆயிரம் மத வழிபாட்டுத் தலங்களின் மேற்கூரைகளில் சூரிய மின் தகடுகளை நிறுவும் திட்டம் ஆகியவற்றை நாட்டுக்கு அர்ப்பணித்தனர்.
இந்த நிலையில், பிரதமர் மோடிக்கு இன்று இலங்கையின் உயரிய விருதான ‘ஸ்ரீலங்கா மித்ர விபூஷண’ (Sri Lanka Mitra Vibhushana) விருது அளித்து இலங்கை அரசு கெளரவித்தது.

7 ஒப்பந்தங்கள் கையெழுத்து
பின்னர் மோடி, இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதனைத் தொடர்ந்து இந்தியா – இலங்கை இடையே 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. எரிசக்தி இறக்குமதி மற்றும் ஏற்றுமதி புரிந்துணர்வு உடன்படிக்கை.டிஜிட்டல் தொழில்நுட்பம் தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை.
இந்தியா – இலங்கை – ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய மூன்று நாடுகளுக்கு இடையில் திருகோணமலை எரிசக்தி தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை.
இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு குறித்த புரிந்துணர்வு உடன்படிக்கை.கிழக்கு மாகாணம் தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை. இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையில் சுகாதாரம் தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை. இந்தியாவின் மருத்தக நிறுவனம் மற்றும் இலங்கை தேசிய மருந்தாக்கல் கூட்டுஸ்தாபனம் ஆகியவற்றுக்கு இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கையெழுத்தாகின.
இந்தியாவின் நிதி உதவி
இலங்கையின் டிஜிட்டல் அடையாள சட்டத்திற்காக இந்தியா சார்பில் ரூ. 300 கோடி உதவி. இலங்கைக்கு வழங்கப்பட்ட கடன்களில் கடந்த 6 மாதங்களில் மட்டும் 100 மில்லியன் டாலருக்கு அதிகமான கடன்கள் மானியமாக மாற்றப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண வளர்ச்சிக்காக 4 பில்லியன் இலங்கை ரூபாய், இந்தியா சார்பில் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர் பிரச்னையும் மோடியின் வேண்டுகோளும்
இந்த சந்திப்பில், தமிழக மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக இலங்கை அதிபருடன் பிரதமர் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது “மீனவர்கள் பிரச்சனையை இலங்கை அரசு மனிதாபிமானத்துடன் அணுக வேண்டும். கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள், அவர்களின் படகுகளை உடனடியாக விடுவிக்க வேண்டும். கைது செய்து சிறையில் வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டதாக மோடி பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மோடியின் இந்த வாய்மொழி கோரிக்கையை இலங்கை அரசு எத்தனை தூரம் தீவிரமாக எடுத்துக்கொள்ளும் என்பதை வரும் நாட்கள் தான் உணர்த்தும்.
கடந்த ஆண்டு டிசம்பரில் திசாநாயக்காவின் இந்திய பயணத்தின்போது இது குறித்து ஆரம்ப விவாதங்கள் நடந்தன. அப்போது, இந்திய வெளியுறவு அமைச்சகம், மீனவர் பிரச்னையை “மனிதாபிமான மற்றும் வாழ்வாதார பிரச்னையாக” அணுக வேண்டும் என்று வலியுறுத்தியது. இந்த நிலையில், இன்றைய பேச்சுவார்த்தையில், இந்த அணுகுமுறை மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது.
கச்சத்தீவு விவாதிக்கப்படவில்லை
இதனிடையே தமிழக சட்டமன்றத்தில், கடந்த 2 ஆம் தேதி அன்று ஒருமனதாக நிறைவேற்றிய தீர்மானத்தில், கச்சத்தீவை மீட்பதே நிரந்தர தீர்வு என்று கூறப்பட்டிருந்தது. இது மோடியின் பயணத்திற்கு முன் மத்திய அரசுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தியது. ஆனாலும், இன்றைய பேச்சுவார்த்தையில் அது குறித்து மோடி எதுவும் பேசவில்லை என்பது உறுதியாகி விட்டது.

பிரச்னையின் பின்னணி
1974-ல் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டது. அதன்பின், தமிழக மீனவர்கள் பாக் விரிகுடா பகுதியில் மீன் பிடிக்கும்போது இலங்கை கடற்படையால் அடிக்கடி கைது செய்யப்படுகின்றனர். 2024-ல் மட்டும் 530 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 2025 முதல் மூன்று மாதங்களில் 147 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு, சில சமயங்களில் ஏலம் விடப்படுகின்றன. இது மீனவர்களை வறுமைக்கு தள்ளியுள்ளது.
இந்த நிலையில், மோடியின் பயணத்தைத் தொடர்ந்து, இரு நாடுகளும் இணைந்து மீன்பிடி பிரச்னைக்கு தீர்வு காண ஒரு கூட்டு பணிக்குழு மீண்டும் செயல்படுத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. மேலும், இலங்கை மீனவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் சுருக்குமடி வலையை தமிழக மீனவர்கள் கைவிட வேண்டும் என்ற பரிந்துரையும் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் உள்ளன.

ஆனால், கச்சத்தீவு மீட்பு குறித்து உறுதியான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி, 2024-ல் “கச்சத்தீவு விவகாரம் 50 ஆண்டுகளுக்கு முன் தீர்க்கப்பட்டது” என்று கூறியிருந்தார். இந்த நிலையில், மோடியின் தற்போதைய இலங்கை பயணத்திலும் இலங்கை அதே நிலைப்பாட்டையே வெளிப்படுத்தி இருப்பதாக தெரிகிறது.
தீர்வு சாத்தியமா?
மீனவர் பிரச்னைக்கு உடனடி தீர்வாக, கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்படுவது சாத்தியம் என்றாலும், நிரந்தர தீர்வுக்கு கச்சத்தீவு மீட்பு அல்லது பகிரப்பட்ட மீன்பிடி உரிமை தேவை. தமிழக அரசு, “1974 ஒப்பந்தத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும்” என்று வலியுறுத்துகிறது. ஆனால், இலங்கையின் பொருளாதார நெருக்கடி மற்றும் சர்வதேச அழுத்தங்கள், இதை சிக்கலாக்கலாம். தமிழக மீனவர்களும் தமிழக அரசும் “மோடி இந்த பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்” என்று எதிர்பார்க்கின்றனர். ஆனால் முழு தீர்வு இரு நாடுகளின் பரஸ்பர ஒப்புதலையே சார்ந்துள்ளது.
மொத்தத்தில், மோடியின் இலங்கை பயணத்தில் மீனவர் பிரச்னை விவாதிக்கப்பட்டுள்ளது. மேலும் மீனவர்களின் உடனடி விடுதலைக்கான நம்பிக்கை உள்ளது. ஆனால், கச்சத்தீவு மீட்பு உள்ளிட்ட நிரந்தர தீர்வு இன்னும் நிச்சயமற்றதாகவே உள்ளது. தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க, இந்திய-இலங்கை அரசுகள் மனிதாபிமானத்துடன், தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தால் மட்டுமே பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும்.