சர்வதேச அளவில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் வாய்ந்த விளையாட்டு என்றால் அது ‘பித்தியன்’ விளையாட்டுக்கள் தான் (Pythian Games). ஒலிம்பிக் விளையாட்டுகளில் தடகளப் போட்டிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். ஆனால், ‘பித்தியன்’ விளையாட்டுகளில் பாரம்பரிய விளையாட்டுகள், கலை மற்றும் நடனப் போட்டிகளே பிரதானம்.
அதென்ன ‘பித்தியன் விளையாட்டு’..?
பண்டைய கிரேக்க கோயில் அமைந்திருந்த ‘டெல்பி’ என்ற நகரத்தில், கிரேக்க கடவுளான அப்பல்லோவால் கொல்லப்பட்ட புராணப் பாம்பான பைத்தானின் பெயரால் நடத்தப்பட்ட விளையாட்டுகளுக்கே ‘பித்தியன் விளையாட்டுகள்’ எனப் பெயரிடப்பட்டது. இந்த விளையாட்டுகள் அப்பல்லோவின் நினைவாக நடத்தப்பட்டன. மதப்பிரசங்கம், இசை மற்றும் கலைகளுடனான அப்பல்லோவுக்கு உள்ள தொடர்பைக் கொண்டாடும் வகையில் இந்த விளையாட்டுகள் வடிவமைக்கப்பட்டன. பண்டைய கிரேக்கத்தின் நான்கு பன்ஹெலெனிக் (Panhellenic Games) விளையாட்டுகளில் ஒன்றாக நடத்தப்பட்ட இதில் இசை, கவிதை மற்றும் தடகளப் போட்டிகள் இடம்பெற்றன. இந்த விளையாட்டுகள் கலைச் சிறப்பையும் ஆன்மீக முக்கியத்துவத்தையும் அடையாளப்படுத்தியதால், ஒலிம்பிக் விளையாட்டுகளிலிருந்து வேறுபட்டு காணப்பட்டன.
புதுப்பிக்கப்படும் பித்தியன் விளையாட்டுகள்
இந்த நிலையில், உலக அளவில் கலைஞர்கள் மற்றும் பாரம்பரிய விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தி, அவர்களுக்கு உதவும் வகையில் பண்டைய பித்தியன் விளையாட்டுகளை, இன்றைய காலத்துக்கு ஏற்றவாறு நவீனப்படுத்தவும், பண்டைய பாரம்பரியத்தை புதுப்பிக்கும் வகையிலும் ‘சர்வதேச பித்தியன் கவுன்சில் & டெல்பிக் இந்தியா டிரஸ்ட்’ ( International Pythian Council & Delphic India Trust) என்ற அமைப்பை டெல்லியைச் சேர்ந்த என்ற பிஜேந்தர் கோயல் என்பவர் ஏற்படுத்தி உள்ளார்.
கலை, கலாச்சாரம், பாரம்பரிய விளையாட்டுகள் மற்றும் பல்வேறு விளையாட்டுகளில் தொழில்முறை போட்டிகளை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்தி, பித்தியன் விளையாட்டுகளை உலகின் முதல் கலாச்சார விளையாட்டுகளாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளில் இந்த ‘சர்வதேச பித்தியன் கவுன்சில்’ தீவிரமாக உள்ளது.
ரஷ்யா, கிரேக்கத்துடன் கைகோக்கும் இந்தியா
அந்த வகையில், உலகளாவிய கலாச்சார ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, சர்வதேச டெல்பிக் கமிட்டி (International Delphic Committee – Russia), எக்குமெனிகல் டெல்பிக் யூனியன் (Ecumenical Delphic Union – Greece) மற்றும் சர்வதேச பைத்தியன் கவுன்சில் (இந்தியா) ஆகியவற்றின் பிரதிநிதிகள் நவீன பித்தியன் விளையாட்டுகளை மேலும் விரிவுபடுத்தவும் வலுப்படுத்தவும் கைகோத்துள்ளனர்.
நவீன பித்தியன் விளையாட்டுகள் மூலம் கலை, கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய விளையாட்டுகளுக்கான ஒரு பெரிய தளத்தை நிறுவுவதற்கான நடவடிக்கைகளை இறுதி செய்வதற்காக இவர்கள் விரைவிலேயே கூடி ஆலோசிக்க உள்ளனர்.
அந்த வகையில், உலகளாவிய கலாச்சார இயக்கமான ‘நவீன பித்தியன் விளையாட்டுகள்’, கலை, கலாச்சார மற்றும் பாரம்பரிய விளையாட்டு சிறப்பைக் கொண்டாட உள்ளது. இந்த விளையாட்டுகள் கலைஞர்கள், கலைஞர்கள் மற்றும் பாரம்பரிய விளையாட்டு ஆர்வலர்களுக்கு ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஆகிய இரண்டிலும் ஒரு சர்வதேச தளத்தை வழங்கும் என்பதால், நவீன பித்தியன் விளையாட்டுகள் இவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகவே அமைந்துள்ளது எனலாம்.

இது குறித்துப் பேசும் நவீன பித்தியன் விளையாட்டுகளின் நிறுவனரான பிஜேந்தர் கோயல், “ரஷ்யா, கிரீஸ் மற்றும் இந்தியா இடையேயான இந்த ஒத்துழைப்பு, பல்வேறு நாடுகள் ஒன்றிணைந்து கலை மற்றும் கலாச்சாரத்தை உலக அளவில் ஊக்குவிக்கவும் கொண்டாடுவதற்குமான ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது” என்கிறார்.
அடுத்த கட்டமாக, இந்த மூன்று நாடுகளின் பிரதிநிதிகள், பிஜேந்தர் கோயலுடன் சேர்ந்து, இந்த உலகளாவிய முயற்சியின் கட்டமைப்பு மற்றும் வடிவமைப்பை இறுதி செய்வது குறித்து ஆலோசிக்க உள்ளனர்.
வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கான மேடை
இந்த விளையாட்டுப் போட்டிகள் வழக்கமான கலைஞர்கள் மற்றும் பாரம்பரிய விளையாட்டு வீரர்களுக்கு மட்டுமல்லாது, ஊனமுற்ற கலைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கும் ஒரு பிரத்யேக வாய்ப்பை வழங்கி, அவர்களின் திறமைகளுக்கும் உலகளாவிய அங்கீகாரத்தை உறுதி செய்யும். மேலும், ரஷ்யா மற்றும் கிரீஸ் நாட்டுடனான இந்த கலாச்சார ஒத்துழைப்பு நடவடிக்கை, உலகளாவிய கலாச்சார ராஜதந்திரம் மற்றும் கலாச்சார பரிமாற்றத்திற்கான புதிய கதவுகளைத் திறக்கும் என்கிறார்கள் பித்தியன் கவுன்சிலைச் சேர்ந்தவர்கள்.
மேலும், மிக முக்கியமாக, ஒவ்வொரு கலைஞருக்கும் வீரருக்கும் விளையாட்டுச் சங்கங்கள் மற்றும் கூட்டமைப்புகள் ஏற்படுத்தி உள்ள வரம்புகளைத் தாண்டி தங்களது திறமையை வெளிப்படுத்துவதற்கான உரிமையை நவீன பித்தியன் விளையாட்டுகள் வழங்குகின்றன என்பதால், இதை திறமை மற்றும் படைப்பாற்றலுக்கான உண்மையான உலகளாவிய ஒரு மேடை அல்லது விளையாட்டுக் களம் என்றே அழைக்கலாம்!