சென்னை, கோவை, மதுரையில் அமெரிக்க நிறுவனங்கள் ரூ. 1,000 கோடி முதலீடு… 4,000 பேருக்கு வேலைவாய்ப்பு!
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தனது பயணத்தின் முதல்கட்டமாக சான் பிரான்சிஸ்கோவில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்றார். அப்போது, அவரது முன்னிலையில் நோக்கியா, பேபால் ( Nokia, PayPal) உள்ளிட்ட பல்வேறு அமெரிக்க நிறுவனங்களுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே 1,000 கோடி ரூபாய் முதலீடுகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இதன் மூலம் சுமார் 4,100 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முதலீடுகள் மூலம் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் புதிய தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட உள்ளன. எந்தெந்த நிறுவனங்கள் எங்கெங்கு முதலீடு செய்ய உள்ளன, ஒவ்வொரு நிறுவனம் மூலம் எவ்வளவு பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பது உள்ளிட்ட முழு விவரங்கள் வருமாறு:
சென்னை
சென்னை தரமணியில் அப்லைட் மெட்டிரியல்ஸ் நிறுவன புதிதாக செமி கண்டக்டர் உற்பத்திக்கான தொழில்நுட்ப மையத்தை அமைக்க உள்ளது. AI தொழில்நுட்பத்துடன் அமையும் இந்த தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் மூலம் 500 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
அதேபோன்று சென்னையை அடுத்த சிறுசேரியில் நோக்கியா நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் அமைகிறது. இதற்காக 450 கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன்மூலம் 100 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
சென்னையில் 500 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கித் தரும் வகையில், தகவல் தொழில்நுட்ப மையம் அமைக்க கீக் மைன்ட்ஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
சென்னை செம்மஞ்சேரியில் செமி கண்டக்டர் ஆராய்ச்சி மையம் அமைக்க மைக்ரோசிப் நிறுவனத்துடன் 250 கோடி ரூபாய் முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்மூலம் ஆயிரத்து 1500 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
இதேபோல், சென்னையில் ஏஐ தொழில்நுட்ப மையம் அமைக்க ‘பே பால்’ நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் புதிய மின்சாதன உபகரண ஆலை அமைக்க ஒமியம் நிறுவனத்துடன் 400 கோடி ரூபாயில் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்மூலம் 500 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்க இருக்கிறது.
கோவை
கோவை சூலூரில் செமி கண்டக்டர் உற்பத்திக்கான உபகரண ஆலை அமைக்க ஈல்ட் இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்மூலம் 300 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
மதுரை
மதுரை வடபழஞ்சியில் புதிய தொழில்நுட்ப மையம் அமைக்க இன்பின்க்ஸ் நிறுவத்துடன் 50 கோடி ரூபாயில் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதன்மூலம், மதுரையில் 700 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ளது.