தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு முதலீட்டாளர்களை சந்தித்து தமிழ்நாட்டில் தொழில் தொடக்க அழைப்பு விடுத்து வருகிறார். அவரின் அந்த முயற்சி காரணமாக உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களான நோக்கியா, பேபால், ஈல்ட்டு இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ், மைக்ரோசிப் டெக்னாலஜி, இன்பிங்ஸ் ஹெல்த்கேர் மற்றும் அப்ளைடு மெட்டீரியல்ஸ் ஆகிய 6 நிறுவனங்களுடன் 900 கோடி ரூபாய் முதலீட்டில் 4,100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
கூகுள் நிறுவனத்துடன் தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) ஆய்வகங்கள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும், ஓமியம் நிறுவனத்துடன் எலக்ட்ரோலைசலர்கள் உற்பத்தி மற்றும் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தித் துறையில் 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிய தொழிற்சாலையை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தாகின.
அதன் தொடர்ச்சியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சிகாகோவில் லிங்கன் எலக்ட்ரிக், விஷய் பிரிஷிஷன் மற்றும் விஸ்டியன் ஆகிய நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதில் செங்கல்பட்டு மாவட்டத்தில் லிங்கன் எலக்ட்ரிக் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உற்பத்தி மையத்தை விரிவாக்கம் செய்வதற்கு ரூ.500 கோடி முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. லிங்கன் எலக்ட்ரிக் நிறுவனம் வெல்டிங் பொருட்கள், ஆர்க் வெல்டிங் உபகரணங்கள், வெல்டிங் பாகங்கள், பிளாஸ்மா மற்றும் ஆக்ஸி-எரிபொருள் வெட்டும் உபகரணங்கள், ரோபோடிக் வெல்டிங் பொருட்களின் உலகளாவிய உற்பத்தி நிறுவனம் ஆகும். இது பார்ச்சூன் 1000 நிறுவனங்களில் ஒன்றாகும்.
விஷய் பிரிஷிஷன் நிறுவனமானது செமிகண்டக்டர்கள் மற்றும் எலக்ட்ரானிக் பாகங்களின் உற்பத்தி நிறுவனமாகும். இந்நிறுவனம் இஸ்ரேல், ஆசியா, ஐரோப்பா மற்றும் அமெரிக்கா நாடுகளில் உற்பத்தி ஆலைகளைக் கொண்டு உள்ளது, அங்கு ரெக்டி பையர்கள், டையோட்கள், ஆப்டோ எலக்ட்ரானிக்ஸ், மின்தடையங்கள், மின் தேக்கிகள் போன்றவற்றை உற்பத்தி செய்கிறது. இந்நிறுவனத்தின் தலைமையகம் அமெரிக்க நாட்டின், பென்சில்வேனியாவின் மால்வெர்னில் அமைந்து உள்ளது.
மேலும், விஷய் பிரிஷிஷன் நிறுவனத்தின் Sensors and Transducers உற்பத்தி மையத்தை ரூ.100 கோடி முதலீட்டில் நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதேபோல், விஸ்டியன் நிறுவனத்தின் மின்னணு உற்பத்தி மையத்தை ரூ.250 கோடி முதலீட்டில் சென்னை மற்றும் கோயம்புத்தூரில் நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. மொத்தம் ரூ.850 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.