Site icon Amazing Tamilnadu – Tamil News Updates

இந்தியாவிலேயே முதல்முறையாக சென்னையில் உலகளாவிய திறன் மையம்… 500 பேருக்கு வேலைவாய்ப்பு!

மிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்த்திடும் வகையிலும், இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கிடவும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அமெரிக்க நாட்டிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இப்பயணத்தின் போது, முதலமைச்சர் முன்னிலையில் சான்பிரான்சிஸ்கோவில் 29.8.2024 அன்று நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களான நோக்கியா, பேபால், ஈல்ட்டு இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ், மைக்ரோசிப் டெக்னாலஜி, இன்பிங்ஸ் ஹெல்த்கேர் மற்றும் அப்ளைடு மெட்டீரியல்ஸ் ஆகிய 6 நிறுவனங்களுடன் 900 கோடி ரூபாய் முதலீட்டில் 4,100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும்,

30.8.2024 அன்று ஆப்பிள், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களின் உயர் அலுவலர்களை சந்தித்து, தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்ததோடு, கூகுள் நிறுவனத்துடன் தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) ஆய்வகங்கள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும், 31.8.2024 அன்று ஓமியம் நிறுவனத்துடன் எலக்ட்ரோலைசலர்கள் உற்பத்தி மற்றும் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தித் துறையில் 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிய தொழிற்சாலையை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டன.

இந்த நிலையில், இந்தியாவின் முதல் உலகளாவிய திறன் மையத்தை சென்னையில் அமைத்திட சிகாகோவில் உள்ள் அஷ்யூரண்ட் நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசின் புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தாகி உள்ளது. மின்மேலாண்மை மற்றும் ஹைட்ரோலிக்ஸ் துறையில் முன்னணி நிறுவனமான ஈட்டன் நிறுவனத்துடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. சென்னையில் உற்பத்தி வசதியை விரிவாக்குவதுடன், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உலகளாவிய பயன்பாட்டு பொறியியல் (Global Utility Engineering Centre – GCC) நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஷ்யூரன்ட் நிறுவனம் (Assurant, Inc.) பார்ச்சூன் 500 இன்சூரன்ஸ் நிறுவனங்களில் ஒன்றாகும், இந்நிறுவனம் அட்லாண்டாவை தலைமையிடமாக கொண்டு இடர் மேலாண்மை தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்கி வருகிறது. சொத்து, விபத்து, நீட்டிக்கப்பட்ட சாதனங்களின் பாதுகாப்பு போன்ற பலவிதமான சிறப்பு மற்றும் முக்கிய சந்தை காப்பீட்டுத் திட்டங்களை வழங்கி வருகின்றன. இந்நிறுவனத்தின் உலகளாவிய தலைமையகம் அமெரிக்க நாட்டின் அட்லாண்டாவில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version