தமிழ்நாட்டிற்கான தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சான்பிரான்சிஸ்கோவில் முதலீட்டாளர்களைச் சந்தித்தார். இந்த சந்திப்பில் இதுவரை 8 நிறுவனங்களுடன் ரூ. 1300 கோடி முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம், 4,600 நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் 21 ஆம் தேதி சென்னையில் நடை பெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் கிரீன்கோ நிறுவனத்துடன் ரூ.20,114 கோடி முதலீட்டில் மூன்று புனல் மின் நிலையங்களை அமைக்க அமைச்சர் முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. இதன் மூலம் 1,500 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், ஒப்பந்தம் மேற்கொண்ட 7 நாட்களில் முதல் கட்டப் பணிகளை தொடங்கி யது கிரீன்கோ நிறுவனம். அதன்படி சேலம் மாவட்டம், மேட்டூர் பாலமலை மற்றும் நவிப்பட்டி ஆகிய கிராமங்களில் ரூ. 5,947 கோடியில் கிரீன்கோ எனர்ஜி நிறுவனம் நீரேற்று புனல் மின் நிலையம் அமைக்கிறது. இதற்கான கட்டு மானப் பணிக்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் விண்ணப்பம் அளித்துள்ளது.
இந்நிலையில், ஓசூரில் ரூ.100 கோடியில் உலகளாவிய தொழில்நுட்ப மையத்தை VST Tillers & Tractors நிறுவனம் அமைக்க உள்ளது. பெங்களூரை தலைமையிடமாகக் கொண்ட VST Tillers & Tractors நிறுவனம், விவசாய உபகரணங்கள் மற்றும் டிராக்டர்கள், எலக்ட்ரிக் வாகனம் உட்பட 10 புதிய தயாரிப்புகளை உருவாக்கி வருகிறது.
இந்த புதிய தொழில்நுட்ப மையம் EV கண்டுபிடிப்புகளை வேகமாக கண்காணிக்கவும், தனியுரிம தொழில்நுட்பங்களை மேம்படுத்தவும், சோதனை திறன்களை அதிகரிக்கவும் மற்றும் சர்வதேச ஒத்துழைப்புகளை வளர்க்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது நிறுவனத்தின் முதன்மை R&D மையமாக செயல்படும், உலகளாவிய R&D மையத்தை படிப்படியாக நிறுவ நிறுவனம் ரூ.100 கோடிக்கு முதலீடு செய்ய VST Tillers & Tractors நிறுவனம் திட்டமிட்டுள்ளது.