ஐந்தாவது ஆண்டில் ஸ்டாலின் ஆட்சி… சாதனைகள், சவால்கள்… 2026 வெற்றி வாய்ப்பு எப்படி?

மே 7 அன்று, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக (திமுக) அரசு நான்கு ஆண்டுகளை நிறைவு செய்து, ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
2021 சட்டமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த திமுக, ‘திராவிட மாடல்’ ஆட்சியை முன்னிறுத்தி செயல்பட்டு வருகிறது. கடந்த நான்கு ஆண்டு கால சாதனைகள், எதிர்கொண்ட சவால்கள் என்ன..? 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவின் வெற்றி வாய்ப்புகள் எப்படி உள்ளன?
நான்கு ஆண்டு சாதனைகள்
ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ‘மக்கள் நலன்’ மற்றும் ‘சமூகநீதி’ ஆகியவற்றை முன்னிறுத்தி பல திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி மற்றும் ஊட்டச்சத்தை மேம்படுத்தியுள்ளது. ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’ மூலம் 1.16 கோடி பெண்களுக்கு மாதம் ரூ. 1,000 வழங்கப்படுகிறது. இது, பெண்களின் பொருளாதார நிலையை உயர்த்தியுள்ளது. பெண்களுக்கு இலவச பேருந்து பயணத் திட்டம், 4.5 கோடி பெண்களுக்கு பயனளித்துள்ளது.
தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2021 – 2022 முதல் 8 சதவீதம் அல்லது அதற்கு மேல் என்ற அடிப்படையில் நிலையாக உள்ளது. இது, தேசிய சராசரியை விட அதிகமாகும். 2021 ஏப்ரல் முதல் டிசம்பர் வரை 41.5% அந்நிய முதலீடு அதிகரித்து, தொழில் வளர்ச்சிக்கு உதவியது. 2024-25 ஆம் நிதியாண்டில், தமிழ்நாட்டின் பொருளாதாரம், நாட்டிலேயே அதிகப்பட்சமாக 9.69 விழுக்காடு வளர்ச்சியுடன் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் மூலம் 2.25 கோடி மக்கள் பயனடைந்துள்ளனர். மேலும், தமிழ்நாடு சமூக முன்னேற்றக் குறியீட்டில் முதலிடம் பிடித்துள்ளது.
கொரோனா தொற்று காலத்தில், ஸ்டாலின் மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டு, தடுப்பூசி வீணாக்கத்தைக் குறைத்து, திறமையான நிர்வாகத்தை வெளிப்படுத்தினார். உள்கட்டமைப்பில், விருதுநகரில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் போன்ற திட்டங்கள் மக்களின் வசதிக்காக செயல்படுத்தப்பட்டன.
எதிர்கொண்ட சவால்கள்
ஆனாலும், திமுக அரசு பல சவால்களை எதிர்கொண்டது. மத்திய அரசுடனான மோதல்கள், குறிப்பாக தேசிய கல்விக் கொள்கை (NEP), இந்தி திணிப்பு, மற்றும் நீட் தேர்வு விலக்கு கோரிக்கைகள், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. ஆளுநர் ஆர்.என். ரவியுடனான மோதல், மசோதாக்களுக்கு ஒப்புதல் தாமதமானது குறித்து உச்சநீதிமன்றத்தில் “வரலாற்று” முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு வரை சென்றது.
2021 தேர்தலின்போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில், பெட்ரோல், டீசல், மற்றும் சமையல் எரிவாயு விலைக் குறைப்பு போன்றவை நிறைவேறவில்லை. இது எதிர்க்கட்சிகளின் விமர்சனத்திற்கு உள்ளானது. சென்னையில் விக்னேஷ் மற்றும் திருவண்ணாமலையில் தங்கமணி ஆகியோரின் காவல் மரணங்கள், காவல்துறை மீது விமர்சனங்களை எழுப்பின. மேலும், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவமும், கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவம் போன்றவையும் எதிர்கட்சிகளிடமிருந்து கடும் விமர்சனங்களை எதிர்கொள்ள வைத்தது.

மழைநீர் வடிகால் அமைப்புகளின் பராமரிப்பு குறைபாடு, சென்னையில் வெள்ள பாதிப்புகளை ஏற்படுத்தியது. உதயநிதி ஸ்டாலினின் துணை முதலமைச்சர் பதவி உயர்வு, குடும்ப அரசியல் என்ற விமர்சனத்தை மீண்டும் எழுப்பியது.
இந்த நிலையில், அதிமுக – பாஜக இடையே மீண்டும் உருவாகி உள்ள கூட்டணி மற்றும் நடிகர் விஜய் தலைமையில் புதிதாக உருவாகியுள்ள தமிழக வெற்றிக் கழகம் (TVK) ஆகியவையும் திமுகவுக்கு சவாலாக உள்ளன. விஜய்யின் அரசியல் பிரவேசம், திமுகவின் இளைஞர்கள் வாக்குகளைச் சிதறடிக்கக்கூடுமோ என அஞ்சப்படுகிறது.
2026 ல் வெற்றி வாய்ப்பு எப்படி?
ஆனாலும், 2019 ஆம் ஆண்டு தேர்தலிலிருந்து தொடர்ந்து வெற்றியைக் கொடுத்துவரும் கூட்டணி பலம் திமுகவுக்கு முக்கிய சாதகமான அம்சமாக உள்ளது.
அந்த வகையில் 2026 தேர்தலில், தொடர்ந்து இரண்டாவது முறை ஆட்சியைப் பிடிக்க ஸ்டாலின் தீவிரமாக உள்ளார். மாநில சுயாட்சி மற்றும் கூட்டாட்சி கோரிக்கைகளை வலுப்படுத்த, நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஜூன் 1 அன்று மதுரையில் நடைபெறவுள்ள திமுக பொதுக்குழு, 2026 தேர்தல் உத்திகளை வகுக்கும். ஸ்டாலின், “வெற்றி பெறுபவரே வேட்பாளராக நிறுத்தப்படுவார்” என்று உறுதியளித்து, கட்சி உறுப்பினர்களை உற்சாகப்படுத்தியுள்ளார். மக்களைத் தேடி மருத்துவம், உயர்கல்வி சேர்க்கை (47% விகிதம்), மற்றும் வறுமை குறைப்பு (1.43% மட்டுமே வறுமைக் கோட்டிற்கு கீழே) ஆகியவை திமுகவின் பலமாக உள்ளன. கடந்த நான்கு ஆண்டுகளில், திமுக அரசு மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது.

ஆனால், இளைஞர்களுக்கான வேலையின்மை, விலைவாசி உயர்வு மற்றும் அதிமுக-பாஜக கூட்டணியின் அரசியல் அழுத்தங்கள் ஆகியவை திமுகவுக்கு சவாலாக உள்ளன. 2026 தேர்தல் நெருக்கத்தில் ‘ரெய்டுகள்’ மூலம் திமுகவுக்கு பாஜக நெருக்கடியைக் கொடுக்க வாய்ப்பு உள்ளது.
இவற்றையெல்லாம் சமாளித்து ஸ்டாலின், “ஏழாவது முறையாக ஆட்சி அமைப்போம்” என்று நம்பிக்கையுடன் கூறினாலும், அதை சாத்தியமாக்க எஞ்சி இருக்கும் ஓராண்டுக்குள் மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய வேண்டிய கடமையும் கட்டாயமும் உள்ளது!