அமெரிக்க பயணம்… அமைச்சர்கள், கட்சியினருக்கு மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தல்!

மிழ்நாட்டிற்கு சர்வதேச தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று இரவு அமெரிக்கா புறப்படுகிறார். இந்த நிலையில், தனது பயணம் தொடர்பாக திமுக-வினருக்கும் அமைச்சர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கி கடிதம் எழுதி உள்ள அவர், தான் கடல் கடந்து சென்றாலும் தனது கவனமெல்லாம் தமிழ்நாட்டில் தான் இருக்கும் என்றும், அமெரிக்காவில் இருந்தாலும் தாய்வீடான தமிழ்நாடு பற்றியேதான் தனது மனது சிந்திக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

” ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் என்ற பொருளாதார இலக்குடனானப் பயணத்தில் மற்றொரு கட்டம்தான், உங்களில் ஒருவனான நான் மேற்கொள்ளும் இந்த அமெரிக்கப் பயணம்.

ஆகஸ்ட் 29 அன்று சான்பிரான்சிஸ்கோவில் நடைபெறும் முதலீட்டாளர் சந்திப்பில் பங்கேற்று உரை நிகழ்த்துவதுடன், ஆகஸ்ட் 31 அன்று புலம்பெயர்ந்த தமிழர்களைச் சந்தித்து பேசுகிறேன். அதன்பின், செப்டம்பர் 2-ஆம் தேதி சான்பிரான்சிஸ்கோவிலிருந்து சிகாகோ செல்கிறேன். 10 நாட்களுக்கு அமெரிக்காவில் உள்ள முக்கிய நிறுவன முதலீட்டாளர்களை சந்தித்து, தமிழ்நாட்டில் முதலீடு செய்து, தொழில் தொடங்கிட அழைப்பு விடுக்கிறேன். “ஃபார்ச்சூன் 500” நிறுவனத்தின் தலைமை நிர்வாகிகளை சந்தித்து உரையாடவிருக்கிறேன். இவையனைத்தும் அன்னைத் தமிழ்நாடு தொழில்வளம் பெறவும், தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திடவுமான முயற்சிகளாகும். தொழில்முதலீடு சார்ந்த பயணம் என்றாலும், அமெரிக்காவாழ் தமிழர்களுக்கென்று தனியாக நேரத்தை ஒதுக்கித்தராமல் இருக்க முடியுமா? செப்டம்பர் 7-ஆம் நாள் சிகாகோவில் தமிழர்களுடனான மாபெரும் சந்திப்பு நிகழவிருக்கிறது.

ஆகஸ்ட் 27 தொடங்கி செப்டம்பர் 14 வரையிலான இந்தப் பயண நாட்களின் நோக்கம், தமிழ்நாட்டின் தொழில்வளர்ச்சி அடுத்து வரும் பல தலைமுறைகளுக்குப் பயன் தருவதாக இருக்கவேண்டும் என்பதுதான். இந்தக் குறுகிய இடைவெளியில், தமிழ்நாடு அரசின் நிர்வாகப் பணிகள் தொய்வின்றித் தொடரவும், மக்கள் நலன் சார்ந்து திராவிட மாடல் அரசு நிறைவேற்றி வரும் திட்டங்களின் பயன்கள் தொடர்ந்து கிடைத்திடவும் அமைச்சர்களும் அதிகாரிகளும் சிறப்பான முறையில் செயல்பட வேண்டும் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன். கழகத்தின் மாநில அளவிலான பொறுப்பாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் செப்டம்பர் 17-ஆம் நாள் நடைபெறவுள்ள கழகத்தின் பவளவிழா ஆண்டின் முப்பெரும் விழாவை எழுச்சியுடன் நடத்திடுவதற்கான பணிகளை இப்போதே தொடங்கியிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

முதலமைச்சர் அயல்நாடு சென்றிருந்தாலும், தமிழ்நாட்டில் எந்தவொரு பணியும் தடைபடாமல் நடைபெறுகிறது என்று மக்கள் தரும் சான்றிதழே திராவிட மாடல் அரசுக்குப் பெருமை சேர்ப்பதாகும். அந்தச் சான்றிதழை அமைச்சர்களும், மதிப்பிற்குரிய கழக நிர்வாகிகளும் பெற்றுத் தருவீர்கள் என்ற நம்பிக்கையுடன்தான் பொறுப்பை உங்களிடம் பகிர்ந்து செல்கிறேன். அமைச்சரவைக் கூட்டத்திலும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திலும் ஏற்கெனவே இதனை வலியுறுத்தியிருக்கிறேன். ஆட்சிப் பணியும், கழகப் பணியும் தொய்வின்றித் தொடர்வதற்கு ஏற்ற வகையில் ஒருங்கிணைப்புக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றுடன் ஒருங்கிணைந்து ஒவ்வொருவரும் தங்கள் கடமையினை கண்ணியத்துடன் நிறைவேற்ற வேண்டும். கட்டுப்பாடு காக்கின்ற வகையில், செயலில் வேகம் – சொற்களில் கவனம் என்பதை மனதில் நிறுத்தி செயலாற்றுங்கள்.

நம் மீது விமர்சனம் செய்ய விரும்புவோர், விவாதம் நடத்துவோர் ஆகியோருக்கு ஆட்சியிலும் கட்சியிலும் நாம் நிறைவேற்றும் பயனுள்ள செயல்களே பதில்களாக அமையட்டும். வார்த்தைகளால் பதில் சொல்லி அவர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் வாய்ப்பை உருவாக்கித் தர வேண்டியதில்லை. தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகளான உங்கள் மீது உங்களில் ஒருவனான எனக்கு நிறைந்த நம்பிக்கை உண்டு. அந்த நம்பிக்கை செயல்வடிவமாக மாறுவதை ஒவ்வொரு நாளும் தொடர்பு கொண்டு விசாரிப்பேன். பணிகளைக் கண்காணிப்பேன். உடன்பிறப்புகளிடம் என் உணர்வுகளைக் கடிதம் வாயிலாகவும் காணொலிகளாகவும் பகிர்ந்து கொள்வேன். அமெரிக்காவில் இருந்தாலும் தாய்வீடான தமிழ்நாடு பற்றியேதான் என் மனது சிந்திக்கும். பார்வை கண்காணிக்கும்.

தமிழ்நாடு சிறக்க அயல்நாட்டுக்குச் சிறகு விரிக்கிறேன். உங்கள் வாழ்த்துகளுடன் பறக்கிறேன்” என அவர் அந்த கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Dprd kota batam. The real housewives of beverly hills 14 reunion preview. Discover more from microsoft news today.