Amazing Tamilnadu – Tamil News Updates

தஞ்சாவூர், சேலத்தில் மினி டைடல் பூங்கா… அதிகரிக்கும் ஐடி வேலைகள்!

ந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கி வரும் தமிழ்நாட்டை 2030 ஆம் ஆண்டிற்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார மாநிலமாக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்காக பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் நோக்கத்துடனும், மாநிலத்தில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காகவும் முதல்வர் அண்மையில் அமெரிக்காவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டு 19 நிறுவனங்களுடன் ரூ.7616 கோடி முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. எதிர்காலத்தில் தகவல் தொழில்நுட்பத் துறையில் ஏற்படக்கூடிய அதீத வளர்ச்சியை கருத்திற்கொண்டு 2000ம் ஆண்டு முதல்வர் கலைஞர் தொலைநோக்கு பார்வையுடன் சென்னை தரமணியில் டைடல் பூங்காவை நிறுவி திறந்து வைத்தார். இது நம் மாநிலம் முழுவதும் தகவல் தொழில்நுட்பத்துறையில் மாபெரும் வளர்ச்சி ஏற்பட வித்திட்டது.

‘பரவலான வளர்ச்சியே பார் போற்றும் வளர்ச்சி, சீரான வளர்ச்சியே சிறப்பான வளர்ச்சி’ என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எண்ணத்திற்கேற்ப, தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்ப சூழல் அமைப்பினை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தும் வகையில், இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் மினி டைடல் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

அதில் விழுப்புரம் மாவட்டத்தில் அமைக்கப்பட்ட மினி டைடல் பூங்காவை கடந்த பிப்ரவரியில் திறந்து வைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, தஞ்சாவூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்காக்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தஞ்சாவூர் மினி டைடல் பூங்கா

தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் வட்டம், பிள்ளையார்பட்டி கிராமத்தில் ரூ.30 கோடியே 50 லட்சம் செலவில் தரை மற்றும் 3 தளங்களுடன் 55,000 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள மினி டைடல் பூங்காவை திறந்து வைத்து, அங்கு ஹாம்லி பிசினஸ் சொலுயூசன் இந்தியா மற்றும் இன்போரியஸ் சாப்ட்வேர் டெக்னாலஜி இந்தியா ஆகிய 2 நிறுவனங்களுக்கு தள ஒதுக்கீட்டுக்கான ஆணைகளை முதலமைச்சர் வழங்கினார். இந்த கட்டடத்தில் 30 சதவிகித தள ஒதுக்கீடு தற்போது வரை வழங்கப்பட்டுள்ளது.

சேலம் மினி டைடல் பூங்கா

சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம், ஆனைக்கவுண்டன்பட்டி, கருப்பூர் கிராமத்தில் ரூ.29 கோடியே 50 லட்சம் செலவில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் 55,000 சதுரடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்காவில் நம்ம ஆபீஸ், ஏகேஎஸ் ஹைடெக் ஸ்மார்ட், தமிழ் சோரஸ், டெல்த் ஹெல்த்கேர், சொல்யூசன்ஸ், அக்சஸ் ஹெல்த்கேர் ஆகிய நிறுவனங்களுக்கு தள ஒதுக்கீட்டுக்கான ஆணைகளை வழங்கினார். இங்கு 71 சதவிகித தள ஒதுக்கீடு தற்போது வரை வழங்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு மினி டைடல் பூங்காக்கள் மூலம் டெல்டா பகுதியில் ஐடி வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version