மதிமுக: கட்சிப் பதவியிலிருந்து துரை வைகோ விலகல்… பின்னணி காரணங்கள் என்ன?

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மகனும், திருச்சி எம்.பி-யுமான துரை வைகோ, கட்சியின் முதன்மை செயலாளர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது அக்கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக துரை வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து என்னை விடுவித்துக் கொள்கிறேன். கடந்த 7 ஆண்டுகளாக மேற்கொண்ட முயற்சிகளை நிர்வாகிகள் தொடர வேண்டும். எந்த சூழ்நிலையிலும் வைகோ மனம் கலங்கி விடாமல் அவரை பாதுகாக்க வேண்டும்.
மாநில அரசுக்கு மக்கள் கோரிக்கைகளை நேரடியாக எடுத்துச் சென்று தீர்வு காணுவதற்கு பெரு முயற்சி மேற்கொள்கிறேன் என்னால் இயக்கத்திற்கோ, பொதுச்செயலாளருக்கோ எள் முனை அளவு கூட சேதாரம் வந்துவிட கூடாது என முடிவு செய்துள்ளேன்
கட்சியை சிதைக்கிற வேலையை ஒருவர் செய்து வருகிறார், அவருக்கு மத்தியில் முதன்மைச் செயலாளராக பணியாற்ற விரும்பவில்லை. மதிமுக முதல் தொண்டனாக இருந்து கட்சிக்காக உழைப்பேன் என்பதை உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறேன் ” எனக் கூறி உள்ளார்.
அதே சமயம், நாளை ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற உள்ள மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தில் மட்டும் கலந்து கொள்ள இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மல்லை சத்யா காரணமா?
இந்த நிலையில், துரை வைகோவின் பதவி விலகலுக்கு கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யாவுடன் ஏற்பட்ட மோதலே காரணம் என அக்கட்சி வட்டாரங்களில் கூறப்படுகிறது. ” கட்சியை சிதைக்கிற வேலையை ஒருவர் செய்து வருகிறார்” என துரை வைகோ தனது அறிக்கையில் குறிப்பிட்டிருப்பது மல்லை சத்யாவை தான்” என்கின்றனர் அக்கட்சியினர். நீண்ட நாட்களாக மதிமுகவில் நிலவி வந்த உட்கட்சி பூசல்களின் வெளிப்பாடே இந்த மோதல் என்றும் அக்கட்சியினர் கூறுகின்றனர்.
மோதலுக்கான பின்னணி
துரை வைகோ 2021 அக்டோபர் மாதம் மதிமுக தலைமைக் கழக செயலாளராக நியமிக்கப்பட்டார். இது வைகோவின் மகன் என்பதற்காக அல்ல, மாறாக தொண்டர்களின் விருப்பத்தின் அடிப்படையில் ரகசிய வாக்கெடுப்பு மூலம் நியமிக்கப்பட்டதாக வைகோ அப்போது தெரிவித்திருந்தார். ஆனால், இந்த நியமனம் தொடக்கம் முதலே சர்ச்சையை ஏற்படுத்தியது. மதிமுகவின் சிவகங்கை, திருவள்ளூர், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டச் செயலாளர்கள் உட்பட பல முக்கிய நிர்வாகிகள், இதை வாரிசு அரசியலாக விமர்சித்து எதிர்ப்பு தெரிவித்தனர். 2022 ஆம் ஆண்டு மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டபோதும், அதிருப்தி நிர்வாகிகள் கூட்டத்தை புறக்கணித்ததாக செய்திகள் வெளியாகின.

துரை வைகோவின் பதவி ஏற்பு முதல், அவருக்கும் மல்லை சத்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்து வந்ததாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மல்லை சத்யா, வைகோவின் நெருங்கிய வலது கரமாக அறியப்படுபவர். ஆனால், துரை வைகோவின் ஆதரவாளர்கள் மல்லை சத்யாவுக்கு எதிராக செயல்பட்டு வந்ததாகவும், கட்சி நிகழ்ச்சிகளில் அவரது பெயரை பேனர், போஸ்டர்களில் பயன்படுத்தக் கூடாது எனக் கட்டுப்பாடுகள் விதித்ததாகவும் கூறப்படுகிறது. இது இரு தரப்பினரிடையே மோதலை மேலும் தீவிரப்படுத்தியது.
கடந்த ஏப்ரல் 14 அன்று நடைபெற்ற திருச்சி மாநகர் மாவட்ட மதிமுக செயற்குழு கூட்டத்தில், துரை வைகோ குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக மல்லை சத்யாவை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மல்லை சத்யாவுக்கு ஆதரவாக மற்ற மாவட்டங்களில் உள்ள நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்ததால், மதிமுக இரு அணிகளாக பிளவுபட்டிருப்பது தெளிவாக வெளிப்பட்டது.
மேலும், ஏப்ரல் 13 அன்று சென்னையில் நடைபெற்ற மதிமுக தொழிலாளர் முன்னணி பொதுக்குழு கூட்டத்தில், நிர்வாகிகள் நியமனத்தில் முறைகேடு நடந்ததாகவும், சாதி அடிப்படையில் பதவிகள் வழங்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் கோபமடைந்த துரை வைகோ கூட்டத்தில் இருந்து வெளியேறினார். இந்த சம்பவம் மதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மதிமுகவில் வாரிசு அரசியல், சாதி அடிப்படையிலான குற்றச்சாட்டுகள், உட்கட்சி ஜனநாயக மீறல் போன்ற பிரச்னைகள் தொடர்ந்து வெடித்து வருவதால், துரை வைகோ – மல்லை சத்யா மோதல் உச்சத்தை அடைந்து, தற்போது துரை வைகோவின் விலகலுக்கு வழிவகுத்ததாக கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
இதனிடையே துரை வைகோ விலகல் குறித்து வைகோ அதிர்ச்சி வெளியிட்டுள்ள நிலையில், விலகல் குறித்து வைகோ தான் கருத்து தெரிவிப்பார் என மல்லை சத்யா தெரிவித்துள்ளார்.