தமிழ்நாட்டில் முட்டை மையோனைஸ் விற்பனைக்கு தடை… காரணம் என்ன?

தமிழ்நாடு அரசு, பொது மக்களின் சுகாதாரத்தை கருத்தில்கொண்டு, முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மையோனைஸ் வகைகளுக்கு ஓராண்டு காலத்திற்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு, உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம், 2006-ன் பிரிவு 30 (2) (a)-ன் கீழ் அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஏப்ரல் 8,முதல் இந்தத் தடை உத்தரவு தமிழ்நாடு முழுவதும் நடைமுறையில் இருக்கும் என தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை அரசிதழில் தெரிவித்துள்ளது.
மையோனைஸ் என்பது முட்டையின் மஞ்சள் கரு, தாவர எண்ணெய், வினிகர் மற்றும் மசாலாப் பொருட்கள் கலந்து தயாரிக்கப்படும் ஒரு பிரபலமான உணவுப் பொருளாகும். இது பல உணவு விடுதிகளிலும், வீடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், மையோனைஸ் தயாரிக்க பச்சை முட்டை பயன்படுத்தப்படுவதால், கிருமித் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. முறையற்ற முறையில் தயாரிக்கப்படுவது, சரியான வெப்பநிலையில் சேமிக்கப்படாமல் இருப்பது போன்ற காரணங்களால் மையோனைஸ், பொது சுகாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக உணவுப் பாதுகாப்புத் துறை கண்டறிந்துள்ளது.
குறிப்பாக, சால்மோனெல்லா போன்ற தீங்கு விளைவிக்கும் கிருமிகள், மையோனைஸ் மூலம் பரவுவதற்கு வாய்ப்பு உள்ளது. இதனால், உணவு விஷத்தன்மை, வயிற்றுப் பிரச்னைகள் மற்றும் பிற உடல்நலக் கோளாறுகள் ஏற்படலாம். இத்தகைய பாதிப்புகளைத் தடுக்க, மையோனைஸ் உற்பத்தி, சேமிப்பு, விநியோகம் மற்றும் விற்பனை ஆகியவற்றுக்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து உணவு உற்பத்தி நிறுவனங்கள், உணவு விடுதிகள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களுக்கும் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தடை உத்தரவு கண்டிப்பாக பின்பற்றப்படுவதை உறுதி செய்ய, உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள், தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளனர். மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தடையால், மையோனைஸ் பயன்படுத்தும் உணவு விடுதிகள் மற்றும் நுகர்வோர் மாற்று வழிகளைத் தேட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. முட்டை இல்லாமல் தயாரிக்கப்படும் மையோனைஸ் வகைகள் அல்லது பிற சாஸ்கள் பயன்படுத்தப்படலாம் என உணவுத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் கருதுகின்றனர். இந்த உத்தரவு, உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கவும், உணவு உற்பத்தியில் தரத்தை உறுதி செய்யவும் ஒரு முக்கிய நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.