தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் பாரதிராஜா (48) செவ்வாய்க்கிழமை மாலை மாரடைப்பால் காலமானார். இந்த திடீர் மரணம் தமிழ்த் திரையுலகையும், ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மனோஜ் பாரதிராஜாவுக்கு சமீபத்தில் இதய அறுவை சிகிச்சை நடைபெற்றிருந்தது. இதயத்தில் ஸ்டென்ட் பொருத்தப்பட்டு, அவர் ஓய்வில் இருந்தார். ஆனால், செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியளவில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு, வீட்டிலேயே மயங்கி விழுந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். “சிகிச்சைக்கு பிறகும் இதுபோன்ற மாரடைப்பு ஏற்படுவது அரிது” என்று மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர். இந்த துயரச் செய்தி, அவரது குடும்பத்திற்கும் திரையுலகிற்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மனோஜ் பாரதிராஜாவுக்கு மனைவி நந்தனா, இரு மகள்கள் உள்ளனர்.
மனோஜின் திரைப்பயணம்
மனோஜ் பாரதிராஜா 1999-ல் தனது தந்தை பாரதிராஜா இயக்கிய ‘தாஜ்மஹால்’ படம் மூலம் நடிகராக அறிமுகமானார். ‘சமுத்திரம்’, ‘கடல் பூக்கள்’, ‘அல்லி அர்ஜுனா’, ‘வருஷமெல்லாம் வசந்தம்’, ‘ஈர நிலம்’ உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்தார். 2023-ல் ‘மார்கழி திங்கள்’ படத்தை இயக்கி, இயக்குநராகவும் அவதாரம் எடுத்தார். இப்படத்தை சுசீந்திரன் தயாரித்து, இளையராஜா இசையமைத்திருந்தார். மனோஜின் திரைப்பயணம், தந்தையின் புகழுக்கு ஈடாக இல்லாவிட்டாலும், தனித்துவமான முத்திரையை பதித்தது.
பிரபலங்களின் இரங்கல் / அஞ்சலி
மனோஜின் மறைவு குறித்து தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “நடிகரும் இயக்குநர் பாரதிராஜாவின் மகனுமான மனோஜ் பாரதி மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன். அவரை இழந்து வாடும் பாரதிராஜாவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன்” என்று பதிவிட்டார். தொடர்ந்து நீலாங்கரை வீட்டில் வைக்கப்பட்டிருந்த மனோஜ் உடலுக்கு இன்று நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.

இளையராஜா வெளியிட்ட வீடியோவில், என்னுடைய நண்பர் பாரதியின் மகனான மனோஜ் குமார் மறைந்த செய்திகேட்டு மிகவும் அதிர்ந்துபோனேன். என்ன சொல்வதற்கும் எனக்கு வார்த்தை வரவில்லை. இப்படி ஒரு சோகம் பாரதிக்கு நடந்திருக்க வேண்டாம் என்று தோன்றினாலும், நிகழ்வதை நம்மால் தடுக்க இயலாது, ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். காலம் விதித்திருக்கின்ற காரணத்தால், மனோஜின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்” எனப் பேசியுள்ளார்.
கவிஞர் வைரமுத்து, ” மனோஜ் மரணம் திரையுலகினருக்கான (உடல் நலத்தை பேணி காப்பதில்) எச்சரிக்கை ” என அஞ்சலி செலுத்த வந்தபோது தெரிவித்தார்.
“யாருக்கும் ஆறுதல் சொல்ல முடியாத சோகம் நிகழ்ந்திருக்கிறது.மனோஜ் என்கிற இளைஞன் மறைந்திருக்கிறான். பாரதிராஜா என்ற முதியவர் பேச முடியாமல் இருக்கிறார். ஒரு முதியவர் பேச முடியாமல் இருப்பது போன்ற துயரம் மிகப்பெரியது. கலைஞர்கள் தங்களுடைய உடலைக் கவனித்துக் கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும்.கலை மீதி அதீத ஈடுபாட்டுடன் இருப்பவர்கள் உடல் குறித்தான விழிப்புணர்வைப் பெறாதவர்களாக இருக்கிறார்கள். கலைஞர்கள் தங்களின் உடலைக் கட்டமைத்துக் கொள்ள வேண்டும்.வாழ்க்கை முறைகளை வகுத்துக் கொள்ள வேண்டும் என்பதை மனோஜின் மரணம் கற்றுக் கொடுத்திருக்கிறது” என மேலும் தெரிவித்தார் வைரமுத்து.
நடிகர் கமல்ஹாசன், “என் ஆத்ம நண்பர் பாரதிராஜாவின் புதல்வன் மனோஜின் மறைவு மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறுகிறேன்,” என்று எக்ஸ் தளத்தில் தெரிவித்தார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “மனோஜின் திடீர் மரணம் திரையுலகிற்கு பேரிழப்பு,” என்று குறிப்பிட்டார். மதிமுக தலைவர் வைகோ, தமாகா தலைவர் ஜி.கே. வாசன், பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்தனர்.
இறுதிச் சடங்கு
அவரது உடலுக்கு தமிழ் திரைப்பட இயக்குநர்கள், நடிகர்கள், நடிகைகள் மற்றும் திரையுலக பிரபலங்கள்,நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் உள்ளிட்ட பலரும் ரசிகர்களும் கண்ணீர் மல்க அவருக்கு இறுதி மரியாதை செலுத்தினர். இறுதிச் சடங்கு இன்று மாலை சென்னை, பெசன்ட் நகர் மின்மயானத்தில் நடைபெறுகிறது.