மன்மோகன் சிங்: இந்திய நடுத்தர வர்க்கத்தை உருவாக்கிய சிற்பி!
இந்தியாவின் பொருளாதார மற்றும் சமூக கட்டமைப்பை மாற்றி நாட்டை ஒரு புதிய பாரம்பரியத்துக்குள் அழைத்துச் சென்ற இந்தியாவின் முன்னாள் பிரதமருமான டாக்டர் மன்மோகன் சிங் நேற்று இரவு காலமானார்.
மன்மோகன் சிங், தொலைநோக்கு பார்வை கொண்ட பொருளாதார வல்லுநர். அவரது தைரியமான மற்றும் தொலைநோக்கு கொள்கைகள் தான் 1991 ஆம் ஆண்டில் இந்தியாவின் எதிர்காலத்தை மறுவரையறை செய்தன. லட்சக்கணக்கானவர்களை வறுமையிலிருந்து உயர்த்தியதோடு, நவீன இந்தியாவின் முதுகெலும்பாக விளங்கும் இன்றைய நடுத்தர வர்க்கத்தை உருவாக்கியதிலும் அவரது பங்களிப்பு மகத்தானதாக இருந்தது.
நாட்டை மீட்டெடுத்த பொருளாதார சீர்திருத்தங்கள்
ஒரு பொருளாதார வல்லுநராக டாக்டர் மன்மோகன் சிங்கின் வாழ்க்கையின் மிக முக்கியமான தருணம் என்றால், அது 1991 ஆம் ஆண்டு தான். அப்போதைய பிரதமர் பி. வி. நரசிம்ம ராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசில் நிதியமைச்சராக மன்மோகன் சிங் பதவி வகித்த போது, இந்தியா கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி இருந்தது. அந்நிய செலாவணி இருப்பு குறைந்து, நாடு திவால் நிலைக்குத் தள்ளப்படும் சூழ்நிலையில் தவித்துக்கொண்டிருந்தபோது, சிங் அதிரடியாக பல்வேறு பொருளாதார சீர்திருத்தங்களை வெளியிட்டு, தாராளமய கொள்கைகளை அறிவித்தார்.
நேரு காலத்தில் இருந்த சோசியலிச பொருளாதாரத்தில் பல கட்டுப்பாடுகள் இருந்தன. அவற்றைத் தளர்த்தி, வெளிநாட்டு வர்த்தக தடைகளை நீக்குதல், லைசென்ஸ் ராஜ் அமைப்பை அகற்றுதல், இறக்குமதி வரிகளைக் குறைப்பது, முக்கிய துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டை ஊக்குவிப்பது மற்றும் பொருளாதாரத்தின் முக்கிய துறைகளை கட்டுப்படுத்துவது போன்ற மாற்றங்களைப் புகுத்தினார். இந்த சீர்திருத்தங்கள் இந்தியாவை பொருளாதாரப் படுகுழியில் இருந்து மீட்டது மட்டுமல்லாமல், உலகளாவிய வல்லரசாக உருவெடுக்கவும் களம் அமைத்தன.
நிலைப்பாட்டில் உறுதி
இந்த சீர்திருத்தங்களை அடைவதற்கான சிங்கின் பயணம் சவால்கள் நிறைந்ததாக இருந்தது. 1991ஆம் ஆண்டு அவர் தாக்கல் செய்த பட்ஜெட்டுக்கு அவரது சொந்தக் கட்சி உட்பட பல்வேறு தரப்பினரிடமிருந்து கடுமையான எதிர்ப்பு எழுந்தது. நாடாளுமன்றக் கட்சிக் கூட்டங்கள் விமர்சனங்களால் நிரம்பி வழிந்தன. பல காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இந்த மாபெரும் மாற்றங்களை ஜீரணிக்க சிரமப்பட்டனர். ஆயினும்கூட, சிங் நவீன, தாராளமயமாக்க பொருளாதாரக் கொள்கை குறித்த தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார்.
இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ், தனது புத்தகமான To the Brink and Back: India’s 1991 Story என்ற புத்தகத்தில், ” சிங் தனது பொருளாதார கொள்கை நாடு திவாலாகி விடாமல் இருப்பதற்கும் நாட்டின் எதிர்கால பொருளார வளர்ச்சிக்கும் மிக அவசியம்” என பொறுமையாக விளக்கவும் வலியுறுத்தவும் செய்தார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
எழுச்சி கண்ட நடுத்தர வர்க்கம்
1991 ஆம் ஆண்டு பட்ஜெட், நிதி சீர்திருத்தத்தை மட்டும் நோக்கமாக கொண்டிராமல், மக்கள் மற்றும் அவர்களின் அபிலாஷைகள் உள்ளிட்ட அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் சமூக நீதியை வலியுறுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், இதை “மனித முகத்துடன் கூடிய பட்ஜெட்” என்றும் சிங் குறிப்பிட்டார். அரசியல் அழுத்தங்களால் உர விலை உயர்வை குறைக்க அவர் ஒப்புக் கொண்டாலும், எண்ணெய் நிறுவனங்களை நஷ்டத்தில் இருந்து மீட்டெடுக்கவும், அதற்கான அரசு மானியங்களைக் குறைக்கவும் சமையல் எரிவாயு மற்றும் பெட்ரோல் விலைகளை அதிகரிப்பது போன்ற பிற முக்கிய நடவடிக்கைகளில் அவர் உறுதியாக இருந்தார். இந்த நுட்பமான சமநிலைப்படுத்தும் செயல், அரசியல் பொருளாதாரத்தில் அவரது நிபுணத்துவத்தை வெளிப்படுத்தியதோடு மட்டுமல்லாது, அவற்றின் முக்கிய கொள்கைகளில் சமரசம் செய்யாமல் சீர்திருத்தங்களைச் செயல்படுத்தவும் அவருக்கு உதவியது.
மன்மோகன் சிங்கின் கொள்கைகளின் நீடித்த தாக்கம் தான், இன்று இந்தியாவில் நடுத்தர வர்க்கம் மிக அதிக எண்ணிக்கையில் உருவாவதற்கும், அவர்களது எழுச்சிக்கும் முக்கிய காரணமாக அமைந்தது. இது குறித்து முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் இன்றைய தனது ட்விட்டர் பதிவில், “இந்தியாவின் தற்போதைய நடுத்தர வர்க்கம் நிதியமைச்சராகவும் பிரதமராகவும் அவர் மேற்கொண்ட கொள்கைகளின் உருவாக்கம் ஆகும்” என மிக பொருத்தமாக குறிப்பிட்டுள்ளார், தாராளமயமாக்கலால் திறந்துவிடப்பட்ட வாய்ப்புகளால் முன்னேற்றம் அடைந்த நடுத்தர வர்க்கம், நுகர்வு, புதுமை மற்றும் தொழில்முனைவோர் ஆகியவற்றின் உந்து சக்தியாக மாறி, இன்று இந்தியாவை உலகளாவிய சக்தி மிக்க நாடாக உருவாக்குவதில் மிகப் பெரும் பங்காற்றுகிறது. இந்த பெருமையெல்லாம் மன்மோகனையே சாரும்.
சமூக நலத் திட்டங்கள்
மன்மோகன் சிங் 2004 முதல் 2014 வரை பிரதமராக இருந்த காலம் அவரது கொள்கைகளை மேலும் முன்னெடுத்துச் செல்ல மிகவும் உதவியது. தனது ஆட்சியில் பொருளாதாரக் கொள்கைகள், வெளிநாடுகளுடனான உறவுகள், சமூக நலன் மற்றும் நாட்டின் உட்கட்டமைப்பிலும் கவனம் செலுத்தினார்.
அதனடிப்படையில் தொடங்கப்பட்டதுதான் தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம். இதுவே பின்னர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் (MGNREGA) என மறுபெயரிடப்பட்ட 100 நாள் வேலைத் திட்டம். கிராமப்புற வறுமை மற்றும் வேலை வாய்ப்பின்மை என இரண்டு பிரச்னைகளின் தீவிரமும் இந்த திட்டத்தினால் தணிந்தது. மன்மோகன் சிங் அமல்படுத்திய தகவல் அறியும் உரிமைச் சட்டம் (2005) ஜனநாயகத்தின் மிக முக்கிய அங்கமாக பார்க்கப்படுகிறது.
ஒரு காலத்தில் தன்னை ஒரு “தற்செயலான பிரதமர்” என்று தாழ்மையுடன் விளித்துக் கொண்டவர் மன்மோகன். அவரது அமைதியான நடத்தை, புத்திக்கூர்மை மற்றும் இந்தியாவின் முன்னேற்றத்திற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவை நாட்டின் வரலாற்றில் அழியாத அடையாளத்தை விட்டுச் சென்றுள்ளன.
இந்தியாவின் தலை விதியை மாற்றியவர்
பெரிய நன்மைக்காக கடினமான முடிவுகளை எடுப்பதில் தான் உண்மையான அரசியல் தலைமை உள்ளது என்பதை டாக்டர் மன்மோகன் சிங்கின் பங்களிப்புகள் நமக்கு நினைவூட்டுகின்றன. அவரது தொலைநோக்குப் பார்வை இந்தியாவின் பொருளாதார நிலப்பரப்பை மாற்றியது, தேசத்திற்கு ஒரு புதிய அடையாளத்தையும் அதன் மக்களுக்கு பிரகாசமான எதிர்காலத்தையும் அளித்தது.
இந்தியாவின் தலைவிதியை மாற்றியமைத்து, தலைமுறைகளை பெரியதாக கனவு காணவும், மேலும் சாதிக்கவும் ஊக்கப்படுத்திய மனிதருக்கு ஒரு ராயல் சல்யூட்!