Amazing Tamilnadu – Tamil News Updates

அதிகரிக்கும் வேலைவாய்ப்பு… தமிழக இளைஞர்களை அழைக்கும் மலேசியா!

லேசியா அதன் துடிப்பான கலாச்சாரங்கள் மற்றும் வளமான பொருளாதாரம் ஆகியவற்றிற்கு பெயர் பெற்றது. பல சர்வதேச நிறுவனங்கள் தங்கள் தலைமையகத்தை அங்கு அமைந்துள்ளன.

மலேசியாவில் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் தொடர்பான பணிகளுக்கு தற்போது அதிக தேவை இருப்பதாக சொல்லப்படுகிறது.

அதேபோன்று ஐடி துறை பொறியாளர்கள், வெப் டெவெலப்மென்ட், ஆட்டோமேஷன் இன்ஜினீயர், ஹெச்ஆர் எனப்படும் மனிதவளத் துறை, மார்க்கெட்டிங் துறை, நிதித்துறை போன்றவற்றுக்கும் பணியாளர்கள் தேவை உள்ளது.

மேலும், ஜவுளித்துறையில் திறமைவாய்ந்த தொழிலாளர்கள் அதிகம் தேவைப்படுகிறார்கள். அதேபோன்று மருத்துவ பணியாளர்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை, சுற்றுச்சூழல் பொறியாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு அதிக தேவை உள்ளது. ஆசிரியர்கள், கார்ப்பரேட் பயிற்சியாளர்கள் மற்றும் கல்வி ஆலோசகர்களும் தேவைப்படுவதாக அந்த நாட்டின் மனிதவளத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், மலேசியாவின் உள்கட்டமைப்பு திட்டங்கள் வளர்ந்து வருவதால், அதற்கேற்ற பொறியியல் மற்றும் கட்டுமானத்தில் திறமையான நிபுணர்களுக்கும் குறிப்பிடத்தக்க தேவை உள்ளது. திட்ட மேலாளர்கள், சிவில் இன்ஜினியர்கள் மற்றும் சர்வேயர்கள் போன்றவர்கள் இத்துறையில் தேவைப்படுகிறார்கள்.

இந்த நிலையில், தமிழகம் வந்துள்ள மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன், தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “
பொருளாதார ரீதியாக வர்த்தகம், முதலீடு போன்றவற்றில் இந்தியாவும், மலேசியாவும் நிறையதிட்டங்களை உருவாக்க உள்ளோம். இந்தியாவிலிருந்து மலேசியா வருவோருக்கு விசா இலவசம் என்ற நடைமுறையை இரு நாட்டுப் பிரதமர்களும் சேர்ந்து உருவாக்கி இருக்கிறார்கள். இது வரவேற்கத்தக்கது. இதன் மூலம் சுற்றுலா மேம்படும்.

இந்திய-மலேசிய உறவு 4 தலைமுறைகளாக நீடிக்கிறது. மலேசியாவுக்கான நல்ல திட்டங்களை இந்திய அரசு அறிவிக்கும் என்றநம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. மலேசிய அரசாங்கம், தமிழர்களுக்கு நிறைய உதவிகளை செய்து வருகிறது. வெளிநாட்டுத் தொழிலாளர்களை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்த திட்டங்களை உருவாக்கி வருகிறோம்.

மலேசியாவில் வேலைவாய்ப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவிலிருந்து திறன் வாய்ந்த தொழிலாளர்களை மலேசிய அரசு வேலைக்கு அழைக்கிறது. குறிப்பாக, ஜவுளித் துறையில் திறமைவாய்ந்த தொழிலாளர்கள் தமிழகத்தில்தான் இருக்கிறார்கள். அவர்களை மலேசியா அரசாங்கம் பயன்படுத்திக் கொள்ளும்” எனத் தெரிவித்தார்.

வாய்ப்பு உள்ளோர் இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்!

Exit mobile version