Site icon Amazing Tamilnadu – Tamil News Updates

மதுரை அழகர்கோவில், தென்காசியில் இரு புதிய உயிரினங்கள் கண்டுபிடிப்பு!

தூத்துக்குடி மாவட்டம், நாகலாபுரத்தைச் சேர்ந்தவர் அஹமது ஜெரித். 26 வயதாகும் இவர், விலங்கியல் பாடத்தில் முதுநிலை பட்டப்படிப்பை முடித்துள்ளார். அவரது இளைய சகோதரர் அஹமது பாசில். இவரும் விலங்கியலில் முதுநிலை படித்து வருகிறார். இவர்கள், வன உயிரின ஆராய்ச்சியாளர்களின் உதவியாளர்களுடன், உயிரினங்களைக் கண்டறியும் ஆய்வாளர்கள் குழுவுடன் இணைந்து தேடலில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், இந்தக் குழுவினரால் மதுரை மாவட்டம், அழகர்கோவில் மற்றும் தென்காசி மாவட்டம் மேக்கரை மலைப்பகுதியில் இரண்டு உயிரினங்கள் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மதுரை அழகர்கோவிலில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட உயிரினத்திற்கு சினிமாபிஸ் சுந்தரா (Cnemapis Sundara) ‘பெயின்டட் டுவார்ப் கெக்கோ’ (Painted Dwarf Gecko) எனப் பெயரிடப்பட்டுள்ளது. கெக்கோக்களை சமஸ்கிருதத்தில் ‘அழகான’ அல்லது ‘சுந்தரா’ என்று அழைத்தனர். இந்த வார்த்தையின் மூலம் புதிய உயிரினங்களுக்குப் பெயரிட்டுள்ளனர்.

வர்ணம் கெசாண்ட குள்ள கெக்கோ, முந்திரித் தோட்டங்கள் நிறைந்த பகுதியில் கண்டறியப்பட்டுள்ளது. தற்போது இது, அழகர்கோவிலில் மட்டுமே காணப்படுகிறது. மற்ற பகுதிகளில் இந்த இனத்தை அடையாளம் காண முடியவில்லை என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

ஆண் கெக்கோ அடர் நீலம் கலந்த சாம்பல் நிறத்தில் உள்ளது. இதன் தலைகளில் கோடுகள் உள்ளன. உடல் நீலம் மற்றும் வெள்ளை நிறத்துடன் உள்ளது. ஒரு மெல்லிய மஞ்சள் பட்டை கழுத்தின் குறுக்கே செல்கிறது. வால்கள் மாறி மாறி கருப்பு மற்றும் நீலம்-வெள்ளை கோடுகளுடன் உள்ளன.

பெண் கெக்கோ டானிஷ் நிறத்தில் உள்ளது. உடல்களில் வெள்ளை, கருப்பு மற்றும் பழுப்பு நிற புள்ளிகள் உள்ளன. வால்கள் வெள்ளை மற்றும் பழுப்பு நிறத்தில் உள்ளன. கால்கள் மட்டும் சற்று நீல நிறத்தில் உள்ளது.

தனது மகன்களின் ஆர்வம் குறித்து ஜெரித் தந்தை முஹமது ஜக்காரியா கூறுகையில், “எனது இரு மகன்களும் காட்டு உயிரினங்களை கண்டறிவதில் அதிக ஆர்வம் உள்ளவர்கள். சிறுவயதில் இருந்தே ஊர்வன உள்ளிட்ட விலங்குகளை புகைப்படம் எடுப்பதற்காக அவர்கள் சிறிய மலைகள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்” என்றார். முஹமது ஜக்காரியா தற்போது விளாத்திகுளம் அருகே நாகலாபுரத்தில் ஜக்காரியா ஸ்டூடியோ நடத்தி வருகிறார்.

தென்காசி மேக்கரை

இதேபோல் தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள மேக்கரை பகுதியிலிருந்து சினிமாபிஸ் ட்ரைட்ரா (Cnemapis Triedra) டுவார்ப் கெக்கோ (Dwarf Gecko) கண்டறியப்பட்டுள்ளது. ரிசார்ட் ஒன்றின் பாறையில் இதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது பகல் நேரத்தில் மிகவும் சுறுசுறுப்பாக செயல்படுகிறது என்றனர் ஆய்வாளர்கள்.

இந்த இரண்டு உயிரினங்களும் ‘விலங்குகள் கண்டுபிடிப்புகள் 2023- புதிய இனங்கள் மற்றும் புதிய பதிவுகள்’ என்ற புத்தகத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Exit mobile version