சுதந்திரத்துக்குப் பிறகு, 1956, நவம்பர் 1 அன்று மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அதுவரை ‘மதராஸ் மாகாணம்’ என அழைக்கப்பட்டு வந்த பகுதியில், தமிழர்கள் வாழ்ந்த பகுதி மட்டும் ‘மதராஸ் ஸ்டேட்’ ஆனது. இந்த மாற்றம் குறித்து முன்பே அறிந்திருந்த பெரியார், 1955 அக்டோபர் 10 ஆம் தேதி அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அதில், “தமிழ்நாட்டை விட்டு மலையாளிகள், ஆந்திரர்கள், கன்னடர்கள் பிரிந்து போன பின்பும் கூட தமிழ்நாட்டுக்கு ‘தமிழ்நாடு’ என்று பெயர் இருக்கக்கூடாது எனச் சிலர் சூழ்ச்சி செய்கிறார்கள். அந்தப்பெயரை மறைத்து ‘சென்னை நாடு’ என்று பெயர் சூட்டவும் போகிறார்கள் என்று தெரிகிறது. தமிழ், தமிழ்நாடு என்ற பெயர் இந்த நாட்டுக்கு இல்லாதபடி எதிரிகள் சூழ்ச்சி செய்து வெற்றிபெற்றுவிடக்கூடாது” என்று கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து ‘பெயர் மாற்றம்’ கோரிக்கைகள் தீவிரமடைந்தன.
சங்கரலிங்கனாரின் உயிர்த் தியாகம்
இந்த நிலையில், ஆந்திர மாநில கோரிக்கையை வலியுறுத்தி, 1952 ஆம் ஆண்டு பொட்டி ஶ்ரீராமுலு என்பவர் உண்ணாவிரதமிருந்து உயிர்த்தியாகம் செய்தார். இது விருதுநகரைச் சேர்ந்த காந்தியவாதியான சுதந்திரப் போராட்ட தியாகி சங்கரலிங்கனாரை மிகவும் பாதித்தது. அவரும் பொட்டி ஶ்ரீராமுலுவைப் பின்பற்றி, 1956 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் தேதி, 12 கோரிக்கைகளை முன்வைத்து விருதுநகர் தேசபந்து மைதானத்தில் உண்ணாவிரதத்தை மேற்கொண்டார். இந்த 12 கோரிக்கைகளில் ஒன்று, ‘தமிழ்நாடு’ எனப் பெயர்மாற்ற வேண்டும் என்கிற கோரிக்கை. சங்கரலிங்கனாரின் உடல்நலம் கருதி அன்றைய மூத்த தலைவர்களான காமராஜர், ம.பொ.சி, கக்கன், அண்ணா, ஜீவானந்தம் உள்ளிட்ட பலரும் அவரை நேரில் சந்தித்து சமாதானப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டனர்.
ஆனால், சங்கரலிங்கனார் விடாப்பிடியாக 75 நாள்கள் உண்ணாவிரதமிருந்து, 1956, அக்டோபர் 13 ஆம் தேதியன்று உயிர்த்தியாகம் செய்தார். ஆனால், உயிர்பிரிந்த பின்னும் சங்கரலிங்கனாரின் கோரிக்கைகளில் எதையுமே அன்றைய காங்கிரஸ் அரசு நிறைவேற்றவில்லை. இதற்குப் பிறகு, ‘தமிழ்நாடு’ பெயர் மாற்ற கோரிக்கை, தீவிர பிரச்னையாக உருவெடுத்தது.
தீவிரமடைந்த போராட்டம்
அண்ணா தலைமையிலான திமுக 1957 ஆம் ஆண்டு, முதன்முறையாகச் சட்டமன்றத்தில் நுழைந்தபோது, ‘பெயர்மாற்ற’ கோரிக்கையை முன்வைத்து சட்டமன்றத்தில் ஒரு தீர்மானத்தைக் கொண்டுவந்தது. ஆனால், அந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக 42 வாக்குகளே பதிவாயின. எதிர்ப்பாக 127 வாக்குகள் பதிவானதால், அத்தீர்மானம் தோல்வியடைந்தது. ஆனாலும் திமுக சோர்ந்து விடவில்லை. தொடர்ந்து தமிழ்நாடு கோரிக்கையை முன்னெடுத்து, முழங்கி வந்தது.
1961 ஆம் ஆண்டு அப்போதைய சோஷலிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருந்த சின்னதுரை மீண்டும் தமிழ்நாடு பெயர்மாற்ற தீர்மானத்தைச் சட்டமன்றத்தில் முன்னெடுத்தார். இதையொட்டி ம.பொ.சியின் தமிழரசு கட்சி, தமிழகம் முழுக்கப் பல்வேறு போராட்டங்களை நடத்தியது. காங்கிரஸ் கட்சி தரப்பில் காமராஜர், பெயர்மாற்றம் சாத்தியமில்லை என்று அறிவிக்காமல், “அரசின் கடிதப்போக்குவரத்தில் மட்டும் தமிழ்நாடு என்று குறிப்பிடலாம்” என்று சமாதானம் பேசினார். ஆனால், அதை யாரும் ஒப்புக்கொள்ளவில்லை.
காங்கிரஸ் எதிர்ப்பும் திமுக அளித்த விளக்கமும்
1963 ஜூலை 23ம் தேதி திமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்த இராம.அரங்கண்ணல் சட்டமன்றத்தில் பெயர்மாற்றத்தை வலியுறுத்தி தீர்மானத்தை நிறைவேற்றினார். இந்தச் சமயத்திலும் காங்கிரஸ் ஆட்சிதான். ஆனால் முதல்வராக காமராஜருக்கு பதில் பக்தவத்சலம் இருந்தார். “பேரை மாற்றினால் ஒப்பந்தங்களை ஆவணங்களை எல்லாம் மாற்ற வேண்டும்” என்று மறுத்தார் ஆர்.வெங்கட்ராமன். “கோல்ட்கோஸ்ட் என்று பெயர் கொண்ட நாடு கானா என மாறிவிட்டதே, அங்கே இந்தச் சிரமங்கள் எல்லாம் இல்லையே” என்று சுட்டிக்காட்டி திமுக எதிர்ப்பு தெரிவிக்க, மீண்டும் தீர்மானம் தோல்வியடைந்தது!
மாநிலங்களவையில் மேற்குவங்கத்தைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் தலைவர் புபேஷ் குப்தா, தமிழ்நாடு பெயர் மாற்ற கோரிக்கையை முன்வைத்து தனிநபர் மசோதாவைக் கொண்டுவந்தார். இது தொடர்பான விவாதத்தின்போது, மாநிலங்களவை உறுப்பினராக இருந்த அண்ணா, “வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்லுலகம்” என்ற தொல்காப்பிய வாசகத்தையும், “இமிழ்கடல் வேலியை தமிழ்நாடாக்கி” என்ற சிலப்பதிகாரப் பாடலையும் சுட்டிக்காட்டி பேசினார். ஆனாலும், புபேஷ் குப்தாவின் தமிழ்நாடு பெயர் மாற்ற மசோதா தோல்வியைத் தழுவியது.
மேலும், “தமிழ்நாடு என்று பெயரை மாற்றுவதால் என்ன லாபத்தை அடையப்போகிறீர்கள்?” என மாநிலங்களவையில் கேள்வி எழுப்பிய காங்கிரஸ் கட்சியினருக்கு,”பார்லிமென்ட்டை ‘லோக்சபா’ என்றும்… கவுன்சில் ஆஃப் ஸ்டேட்ஸை ‘ராஜ்யசபா’ என்றும் மாற்றியதால்… நீங்கள் என்ன லாபம் அடைந்துவிட்டீர்கள்!” என எதிர்கேள்வி எழுப்பி, அவர்களை வாயடைக்கச் செய்தார் அண்ணா.
அண்ணாவால் சாத்தியமான பெயர் மாற்றம்
இருப்பினும் கோரிக்கையும், போராட்டமும் தொடர்ந்த நிலையில், 1967 ல் அண்ணா தலைமையில் திமுக ஆட்சியைப் பிடித்த பின்னர்தான் ‘தமிழ்நாடு’ என்ற பெயர் மாற்றம் சாத்தியமானது. 1967 ஆம் ஆண்டு ஜூலை 18 அன்று, ” ‘மதராஸ் ஸ்டேட்’ என்ற பெயரை ‘தமிழ்நாடு’ என்று மாற்றுவதற்கு அரசியல் சட்டத் திருத்தம் கொண்டு வரவேண்டும் ” என்கிற தீர்மானம் முதலமைச்சர் அண்ணாவால் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
தீர்மானத்தைக் கொண்டு வந்த அண்ணா பேசியபோது, “நம்முடைய பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் நெடுங்காலத்திற்குப் பிறகும்முடைய இல்லங்களிலே அமர்ந்து பேசிக்கொள்ளுகின்ற நேரத்தில், பெருமையோடு சொல்லிக் கொள்ள இருக்கிறார்கள்” எனக் குறிப்பிட்டார். தீர்மானம் ஒருமனதாக நிறைவேறிய பின்னர் பேசிய அண்ணா, ” இந்த நன்னாளில் ‘தமிழ்நாடு’ என்று நான் சொன்னதும் ‘வாழ்க’ என்று அவை உறுப்பினர்கள் சொல்ல வேண்டும்’ எனக் கேட்டுக்கொண்டதும், அதன்படியே அவையில் ‘தமிழ்நாடு’ என்ற முழக்கமும், ‘வாழ்க’ என்ற முழக்கமும் மூன்று முறை ஓங்கி ஒலித்தது.