எல் 2: எம்புரான் Vs முல்லைப் பெரியாறு: கலை சுதந்திரமும் சமூக பொறுப்புணர்வும்!

மலையாள திரையுலகின் மிகப்பெரிய எதிர்பார்ப்பை பெற்ற ‘எல்: 2 எம்புரான்’ திரைப்படம், வெளியீட்டிற்கு பின்னர் சர்ச்சைகளின் புயலில் சிக்கியுள்ளது.
பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில் மோகன்லால் நடித்த இப்படம், மார்ச் 27 அன்று வெளியானது. ‘லூசிபர்’ படத்தின் இரண்டாம் பாகமாக உருவான இது, வசூலில் சாதனைகளை படைத்தாலும், சில காட்சிகள் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளன. குறிப்பாக, முல்லைப் பெரியாறு அணை தொடர்பான சர்ச்சைக்குரிய வசனங்கள் தமிழக விவசாயிகளிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளன.
குஜராத் கலவரம் தொடர்பான காட்சிகள், இந்துத்வ அமைப்புகளின் எதிர்ப்பால் நீக்கப்பட்டன. ஆனால், முல்லைப் பெரியார் அணை பாதுகாப்பற்றதாக சித்தரிக்கப்பட்ட காட்சிகளை படக்குழு நீக்க மறுத்திருப்பது இரு மாநில உறவுகளை பதற்றமாக்கியுள்ளது.
குஜராத் கலவர காட்சிகள் நீக்கம்
‘எம்புரான்’ படத்தில், 2002 குஜராத் கலவரத்தை நினைவூட்டும் காட்சிகள் இடம்பெற்றன. கோத்ரா ரயில் எரிப்பு மற்றும் அதைத் தொடர்ந்து முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான வன்முறை சித்தரிக்கப்பட்டது. பில்கிஸ் பானு பலாத்கார வழக்கு—ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை மற்றும் அவரது குடும்பத்தின் படுகொலை—மறைமுகமாக குறிப்பிடப்பட்டது. “பாபா பஜ்ரங்கி” என்ற கதாபாத்திரம், பஜ்ரங் தளின் பாபு பஜ்ரங்கியை சுட்டிக்காட்டுவதாக இந்துத்வ அமைப்புகள் குற்றம்சாட்டின. ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக ஆதரவாளர்கள், “இது இந்து எதிர்ப்பு பிரச்சாரம்,” என்று எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், 20-க்கும் மேற்பட்ட காட்சிகள்—சுமார் 15 நிமிடங்கள்—நீக்கப்பட்டு, ஏப்ரல் 1 அன்று புதிய பதிப்பு வெளியிடப்பட்டது. மோகன்லால், “சமூகங்களை புண்படுத்தும் நோக்கம் இல்லை,” என்று மன்னிப்பு கோரினார்.
முல்லைப் பெரியாறு சர்ச்சை

குஜராத் காட்சிகள் நீக்கப்பட்டாலும், முல்லைப் பெரியாறு அணை தொடர்பான சர்ச்சைக்குரிய காட்சிகள் படத்தில் தொடர்கின்றன. “இரண்டு ஷட்டர்கள் திறந்தாலே பேரழிவு ஏற்படும் அணையை குண்டு வைத்து தகர்க்க வேண்டும்,” என்ற வசனம், அணையை அழிக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைப்பதாக தமிழக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
“999 ஆண்டு ஒப்பந்தம்” என்று குறிப்பிடப்பட்டு, அணை பிரிட்டிஷ் ஆட்சியின் சுமையாக சித்தரிக்கப்பட்டது, தமிழக உணர்வுகளை புண்படுத்தியுள்ளது. தேனி விவசாயிகள், “இது எங்கள் வாழ்வாதாரத்தை கேலி செய்கிறது,” என்று போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தமிழக விவசாயிகளின் எதிர்ப்பு
முல்லைப் பெரியாறு அணை, தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் 2 லட்சம் ஏக்கர் விளைநிலங்களுக்கு பாசனம் வழங்குகிறது. 1895-ல் பென்னிகுவிக் கட்டிய இந்த அணை, தென்மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாகவும், கேரளாவின் 80% காய்கறி தேவையை பூர்த்தி செய்யவும் உதவுகிறது. தமிழக விவசாயிகள், “எங்கள் உயிர்நாடியை அவமதிக்கிறது,” என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பெரியாறு-வைகை பாசன சங்கத்தின் அன்வர் பாலசிங்கம், “இது கேரள அரசின் மறைமுக ஆதரவுடன் நடக்கிறது,” என்று குற்றம்சாட்டி உள்ளார். உச்சநீதிமன்றம், அணை உறுதியாக உள்ளதாக 2014-ல் தீர்ப்பளித்த போதும், படம் பொய் பரப்புரையை தொடர்வது தமிழக-கேரள உறவை சீர்குலைப்பதாக கருதப்படுகிறது.
சீமானின் கண்டனம்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “முல்லைப் பெரியாறு அணையை பாதுகாப்பற்றதாக சித்தரிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது,” எனக் கூறி உள்ளார். “கேரள அரசின் மறைமுக ஆதரவுடன் மலையாளத் திரைத்துறை தொடர்ச்சியாக இத்தகைய பொய்ப்பரப்புரையில் ஈடுபட்டு வருவது இரு மாநில மக்களிடையே உள்ள நல்லிணக்கத்தைச் சீர்குலைப்பதற்கான சதிச்செயலேயாகும். இத்திரைப்படத்தில் மத ஒற்றுமை குறித்து பேசும் நீங்கள், இன வெறுப்பை விதைத்தது ஏன்?

தமிழ்நாட்டில் பல்லாயிரக்கணக்கான மலையாளிகள் சிறப்புறத் தொழில் நடத்தி வாழ்ந்து வருகின்றனர். அதேபோன்று கேரளாவிலும் நீண்டகாலமாக தமிழர்கள் அதிகளவில் வாழ்ந்துவருகின்றனர். தமிழ்நாட்டிலிருந்து கேரளாவுக்கு காய்கறி மட்டுமல்லாது, மணல் மற்றும் கனிம வளங்கள் ஒவ்வொரு நாளும் கொண்டு செல்லப்படுகின்றன.
அதற்குப் பதிலாக கேரளாவிலிருந்து திருட்டுத்தனமாக மருத்துவக் கழிவுகளும், குப்பைகளும், தெருநாய்களும் ஏற்றிவரப்பட்டு தமிழ்நாட்டு எல்லைப்பகுதியில் கொட்டப்படுகின்றன. இருந்தபோதிலும், அவற்றையெல்லாம் சகித்து, பொறுத்து தமிழர்கள் மனிதநேயம் காத்து வரும் நிலையில், அதனைச் சீர்குலைக்கும் செயலில் கேரளத்திரைத்துறை தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது” என்று குறிப்பிட்டுள்ள சீமான், எம்புரான் திரைப்படக்குழு உடனடியாக முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பற்றதாக சித்தரிக்கும் அவதூறு பரப்புரைக் காட்சிகளை நீக்க வேண்டுமென வலியுறுத்தி உள்ளார்.
கலை சுதந்திரமும் சமூக பொறுப்பும்
படக்குழு, குஜராத் எதிர்ப்பை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுத்தாலும், முல்லைப் பெரியாறு காட்சிகளை நீக்க மறுத்தது, தமிழகத்தையும் தமிழக விவசாயிகளின் உணர்வுகளையும் படக்குழு புறக்கணித்துள்ளதையே காட்டுகிறது என விமர்சிக்கப்படுகிறது.

இது, படைப்பாளிகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட அணுகுமுறையையும் அவர்களின் முன்னுரிமைகளையும் கேள்விக்கு உள்ளாக்குகிறது. மேலும் கலை சுதந்திரத்திற்கும் சமூக பொறுப்பிற்கும் இடையிலான மோதலின் உதாரணமாகவும் உள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.