‘லியோ’ வசூலை முந்திய ‘எல் 2: எம்புரான்’ – பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனை!

மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டாரான மோகன்லால் நடிப்பில், பிருத்விராஜ் இயக்கத்தில் வெள்ளிக்கிழமை அன்று வெளியான ‘எல் 2: எம்புரான்’ (L2: Empuraan) திரைப்படம், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
2019-ல் வெளியான ’லூசிஃபர்’ படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகிய இப்படம், சமூக-அரசியல் பின்னணியுடன் கூடிய அதிரடி த்ரில்லராக உருவாகியுள்ளது. மோகன்லால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், படம் முதல் நாளிலேயே பாக்ஸ் ஆபிஸில் கலெக்சனை குவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மாஸ் ஓப்பனிங்
‘எல் 2: எம்புரான்’ வெளியாவதற்கு முன்பே முன்பதிவு மூலம் உலகளவில் ரூ.58 கோடி வசூலித்து சாதனை படைத்தது. மார்ச் 27 அன்று காலை 6 மணிக்கே திரையரங்குகளில் முதல் காட்சி தொடங்கியது, கேரளாவில் திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு போன்ற பகுதிகளில் 90% முன்பதிவு காணப்பட்டது. மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என பல மொழிகளில் வெளியாகி, பான்-இந்திய அளவில் பரவலான வரவேற்பை பெற்றுள்ளது இப்படம்.
ரசிகர்கள் சமூக வலைதளங்களில் “மோகன்லால் மாஸ்”, “பிருத்விராஜின் மாஸ்டர் பீஸ்” என புகழ்ந்து வருகின்றனர். IMAX மற்றும் EPIQ வடிவங்களில் முதல் மலையாள படமாக வெளியானது, படத்தின் காட்சி அனுபவத்தை மேலும் உயர்த்தியுள்ளது.

கொண்டாடும் மோகன்லால் ரசிகர்கள்
விமர்சகர்கள் படத்தை பரவலாக பாராட்டினாலும், சில குறைகளையும் சுட்டிக்காட்டியுள்ளனர். “மோகன்லாலின் திரை ஆளுமை மற்றும் பிருத்விராஜின் பிரம்மாண்ட இயக்கம் படத்தை உயர்த்துகிறது. காட்டுப் பகுதியில் நடக்கும் சண்டைக் காட்சியும், தேவாலய சண்டை காட்சியும் ஹாலிவுட் தரத்தில் உள்ளன” என்று பலர் புகழ்ந்துள்ளனர். ஆனால், ” ‘லூசிஃபர்’ அளவுக்கு ஆழமான திரைக்கதை இதில் இல்லை. மெதுவான வேகம் மற்றும் அதிகப்படியான கதாபாத்திரங்கள் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. படம் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கினாலும், புதுமையும் தாக்கமும் குறைவு” என்றும் விமர்சனங்கள் பதிவிடப்பட்டுள்ளன. அதே சமயம், ‘மலைக்கோட்டை வாலிபன்’, ‘பரோஸ்’ போன்ற படங்களால் ஏமாற்றமடைந்த மோகன்லால் ரசிகர்களுக்கு ‘எல் 2: எம்புரான்’ கொண்டாட்டமாக அமைந்துள்ளது எனலாம்.
பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்: ‘லியோ’ சாதனை முறியடிப்பு
பாக்ஸ் ஆபிஸ் தகவல்களைத் தரும் Sacnilk தரவுகளின்படி, ‘எல் 2: எம்புரான்’முதல் நாளில் இந்தியாவில் ரூ.22 கோடி நிகர வசூலை பதிவு செய்து, மலையாள சினிமாவின் மிகப்பெரிய ஓப்பனிங் வசூல் சாதனையை படைத்துள்ளது. கேரளாவில் மட்டும் ரூ.19.45 கோடி வசூலித்து, மலையாள சினிமா வரலாற்றிலேயே முதல் நாளில் அதிக வசூல் அள்ளிய படம் என்கிற சாதனையை ‘எம்புரான்’ படைத்துள்ளது. இதற்கு முன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் வெளியான ‘லியோ’ திரைப்படமானது முதல் நாளில் கேரளாவில் 12 கோடி ரூபாய் வசூலித்து இருந்தது. இதுதான் கேரளா மொத்தத்திற்குமான முதல் நாள் அதிக வசூலாக இருந்து வந்தது. தற்போது அந்த சாதனையை ‘எம்புரான்’ முறியடித்துள்ளது.

மேலும் தெலுங்கு ரூ.1.2 கோடி, தமிழ் ரூ.0.8 கோடி, இந்தி ரூ.0.5 கோடி, கன்னடம் ரூ.0.05 கோடி என வசூலாகி உள்ளதாக தெரியவந்துள்ளது. உலகளவில் முதல் நாள் வசூல் ரூ.50 கோடியை தாண்டியதாக படக்குழு அறிவித்துள்ளது. வட அமெரிக்காவில் பிரீமியர் காட்சிகள் மூலமே ரூ.4.8 கோடி வசூலித்து, மலையாள படங்களுக்கான புதிய வசூல் ரெக்கார்டை ஏற்படுத்தி உள்ளது. நீண்ட வார இறுதி விடுமுறையால், வசூல் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மலையாள சினிமாவில் இதுவரை ரூ.200 கோடியை தாண்டிய படம் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ மட்டுமே. ஆனால், ‘எல் 2: எம்புரான்’ அதை முறியடித்து, முதல் 300 கோடி கிளப்பில் இணையும் வாய்ப்பிருப்பதாக மலையாள திரையுலக வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன. ‘லூசிஃபர்’ மூலம் பாக்ஸ் ஆபிஸ் எல்லைகளை உடைத்த மோகன்லால்-பிருத்விராஜ் கூட்டணி, ‘எல் 2: எம்புரான்’ மூலம் மலையாள சினிமாவை உலக அரங்கில் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றுள்ளது. இப்படத்தின் பிரம்மாண்ட தயாரிப்பு, சர்வதேச படப்பிடிப்பு இடங்கள், மற்றும் IMAX தொழில்நுட்பம் ஆகியவை மலையாள திரையுலகிற்கு புதிய உயரத்தை அளித்துள்ளதாகவும் மல்லுவுட் சிலாகிக்கிறது.
மலையாள திரையுலகைப் பொறுத்தவரை இப்படம் 2025 ஆம் ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையலாம் என்றும், மூன்றாம் பாகத்துக்கும் வாய்ப்புள்ளதாகவும் பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.