குமரி அனந்தன்: தமிழ் மொழியின் உரிமைப் போராளி!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தன் புதன்கிழமை அதிகாலை காலமானார். அவருக்கு வயது 93.
தமிழ்மொழியை உயிர்மூச்சாகக் கொண்டு வாழ்ந்தவர் குமரி அனந்தன். 1933 ஆம் ஆண்டு மார்ச் 19 அன்று, கன்னியாகுமரி மாவட்டம் அகத்தீஸ்வரத்தில், சுதந்திரப் போராட்டத் தியாகிகளான அரிகிருஷ்ணன் – தங்கம்மாள் தம்பதியரின் மகனாகப் பிறந்த அவர், தமிழுக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்தவர்.
முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி
அவரது மறைவுச் செய்தி தமிழ்ச் சமூகத்தை துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அவரது தமிழ்ப் பற்று குறித்தும், அதற்காக அவர் ஆற்றிய பணிகள் குறித்தும் பல்வேறு கட்சித் தலைவர்களும் நினைவுகூர்ந்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
குமரி அனந்தனின் உடலுக்கு இன்று நேரில் சென்று அஞ்சலி செலுத்திய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ” பெருந்தலைவர் காமராசரின் அடியொற்றி, காங்கிரஸ் பேரியக்கத்துக்காகத் தன்னை ஒப்படைத்துக் கொண்ட அவரது மறைவு தமிழ்ச்சமூகத்துக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும். தனது அயராத உழைப்பால் மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர். நாடாளுமன்றத்தில் தமிழில் பேசுவதற்கான உரிமையை நிலைநாட்டிய பெருமை இவரையே சாரும்” என தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அரசு மரியாதையுடன் பிரியாவிடை
மேலும், குமரி அனந்தனின் பெருவாழ்வைப் போற்றிடும் வகையில், அவரது திருவுடலுக்கு அரசு மரியாதையுடன் பிரியாவிடை அளிக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார். அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் எனப் பல்வேறு தரப்பினரும் குமரி அனந்தன் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
தமிழ் மொழியின் உரிமைப் போராளி
குமரி அனந்தனின் தமிழ்க் காதல் வெறும் வார்த்தைகளில் அடங்காதது; அது அவரது செயல்களில் பிரதிபலித்தது. நாடாளுமன்றத்தில் தமிழில் கேள்வி எழுப்பும் உரிமையைப் பெற்றுத் தந்தவர் என்ற பெருமை அவருக்கு உண்டு. 1977 ஆம் ஆண்டு நாகர்கோயில் தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, அவர் எடுத்த முயற்சி ஒரு சிறு சம்பவமல்ல; அது தமிழ்மொழியின் மாண்பை உலகறியச் செய்த புரட்சி. அன்று, நாடாளுமன்றத்தில் ஆங்கிலமே ஆதிக்கம் செலுத்திய காலத்தில், தமிழகத்தின் குரலை தமிழில் ஒலிக்க வைக்க வேண்டும் என்று அவர் உறுதியாக நின்றார்.
“தனிமரம் தோப்பாகாது” என்னும் பழமொழியைப் பொய்யாக்கி, தனி ஒருவராக நின்று தமிழுக்கு உரிமை பெற்றுத் தந்தார். இதற்காக, முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவரைப் பாராட்டியதை வரலாறு பதிவு செய்துள்ளது.
அவரது தமிழ்ப் பற்று, அரசியல் எல்லையைத் தாண்டி மக்கள் நலனிலும் வெளிப்பட்டது. தமிழகத்தில் மத்திய அரசு அலுவலகங்களில் தமிழுக்கு முதலிடம் தரப்பட வேண்டும் என்று வலியுறுத்தி, ஆர்ப்பாட்டங்களை நடத்தினார். அஞ்சல் தலங்களில் தமிழில் படிவங்கள் கிடைக்க வேண்டும், விமானங்களில் தமிழில் அறிவிப்புகள் ஒலிக்க வேண்டும் என்று அவர் முழங்கிய குரல், தமிழர்களின் அடையாளத்தை உயர்த்தியது.
இலக்கியவாதி, மேடைப் பேச்சாளர்
இலக்கியவாதியாகவும், மேடைப் பேச்சாளராகவும் திகழ்ந்த அவர், தமிழின் இனிமையை மக்களிடம் கொண்டு சேர்த்தார். அவரது பேச்சுகள், தமிழ்மொழியின் செம்மையையும், அதன் பண்பாட்டு ஆழத்தையும் பறைசாற்றின.
ஒரு சம்பவம் அவரது தமிழ்க் காதலை மேலும் தெளிவாக்குகிறது. 1980 களில், தமிழகத்தில் பனைவளம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று அவர் குரல் கொடுத்தார். பனைமரம் தமிழர்களின் வாழ்வோடு பின்னிப்பிணைந்தது என்பதை உணர்ந்த அவர், அதற்காக நடைபயணம் மேற்கொண்டார். இது வெறும் அரசியல் நிகழ்வு அல்ல; தமிழ் மண்ணின் பாரம்பரியத்தையும், அதன் இயற்கை வளத்தையும் காக்க வேண்டும் என்ற அவரது ஆழ்ந்த அக்கறையின் வெளிப்பாடு. 17 முறை தமிழகம் முழுவதும் நடைபயணம் செய்த அவர், மக்களோடு மக்களாக வாழ்ந்து, அவர்களின் துயரங்களைப் புரிந்து, தமிழ்மொழியின் மூலம் அவர்களை ஒருங்கிணைத்தார்.
காமராஜரின் சீடராக, காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவராக, நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய அவர், எளிமையையும் நேர்மையையும் தன் வாழ்க்கைத் தத்துவமாகக் கொண்டிருந்தார். 1984 ஆம் ஆண்டு, ஏழை விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் பெற்றுத் தருவதற்காக களக்காட்டிலிருந்து ராதாபுரம் வரை நடைபயணம் மேற்கொண்டார்.
குமரி அனந்தனின் மறைவு, தமிழ்ச் சமூகத்திற்கு பேரிழப்பு என்றாலும், தமிழ் மொழிக்காக அவர் எழுப்பிய உரிமைக் குரல் தமிழர்களிடையே என்றென்றும் எதிரொலித்துக் கொண்டே இருக்கும்!