கொட்டுக்காளி: ‘அழகான சினிமா மொழியில் அற்புதமான கதை…’ – கமல்ஹாசன் நீண்ட பாராட்டு… நெகிழ்ந்த படக்குழு!

யக்குநர் பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கத்தில் சூரி மற்றும் அன்னா பென் நடித்துள்ள ‘கொட்டுக்காளி’ திரைப்படம் தேசிய மற்றும் உலக அரங்கில் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள இந்தப் படம் நாளை மறுநாள் ( 23ஆம் தேதி) வெளியாகிறது.

எந்த வித பின்னணி இசையும் இல்லாமல், லைவ் சவுண்டுடன் மட்டுமே வந்துள்ள இப்படம், பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த படம் திரைப்பிரபலங்கள் பலருக்கும் முன்கூட்டியே திரையிடப்பட்டுள்ளது. படத்தைப் பார்த்த பலரும் பாராட்டி உள்ளனர்.

கமல்ஹாசன் பாராட்டு

அந்த வகையில், நடிகர் கமல்ஹாசனும் படத்தைப் பார்த்துவிட்டு, அப்படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி உள்ளார். அத்துடன், படத்துக்கு நீண்ட பாராட்டு தெரிவித்து, தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் அறிக்கை ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில், ” கொட்டுக்காளி என்ற மத்திய அரசுச் சான்றிதழ் பெற்ற படத்தை திரையில் தோன்றும் கணத்தில் இருந்து ஆச்சரியங்கள் தொடங்குகின்றன. சான்றிதழில் 103 நிமிடங்கள் 44 செகண்டுகள் என்ற குறிப்பைப் பார்த்ததுமே தமிழ் சினிமா ராக்கூத்து உலகத்தில் இருந்து மீண்டு நவீன கதைசொல்லி ஒருவனின் களமாகிவிட்டது என புரிகிறது.

படத்தில் தம்பி சூரியைத் தவிர எனக்குத் தெரிந்த வேற எந்த முகங்களும் இல்லை. மூன்று நிமிடங்களுக்குப் பிறகு அவரும் தெரியவில்லை, பாண்டியன் எனும் கதாபாத்திரமாக தான் தெரிந்தார். காலில் கல் கட்டிய சேவல் ஒன்று விடிய காலை ஆகியும் கூவாமல் குழம்பி நிற்கிறது. மறுபுறம் நம் கண்ணுக்குத் தெரியாத கல் ஒன்று காலில் கட்டப்பட்ட பெண் ஒருத்தி அந்தச் சேவலையே வெறித்துப் பார்க்கிறாள்.

‘கொட்டுக்காளி டைட்டில் திரையில், கண் இமைக்கும் நேரத்தில் கால் கட்டை உதறித் தப்பிக்கிறது சேவல். அதனை வெறித்துப் பார்த்த பெண்ணின் கண்ணில் சின்ன எதிர்பார்ப்பு, பின் இரு உறவினர்கள் சேவலை துரத்திப் பிடித்துக்கொண்டு போகிறார்கள். பெண்ணின் கண்ணில் நம்பிக்கை குறைகிறது.

ஓர் இளம்பெண்ணின் கல்லூரிக் காதலையும் கேன்ஸரையும் எந்த ஒரு புரிதலும் இல்லாது அணுகும் ஒரு கிராமத்துக் குடும்பம். கிராமம் என்றால், சிமென்ட் சாலை, வாகன வசதி, செல்ஃபோன், டாஸ்மாக், நாப்கின், 24 மணி நேர மின்சாரம் என 21-ஆம் நூற்றாண்டின் நவீன வசதிகள் நிறைந்த கிராமம்.

இருந்தாலும், ‘எங்க வீட்டு பிள்ளைக்குப் பேய் பிடிச்சுருக்கு… பேய் ஓட்டக் கூட்டிப்போறோம்’ என்று விசாரிப்பவர்களிடம் கூசாமல் சொல்கிறான் பாண்டியன். செல்லும் இடமெல்லாம் பிளாஸ்டிக் குடங்கள் விற்கும் வண்டி ஒன்று பேயாய் ஆடிச்செல்கிறது. கண்ணேறு தவிர்க்கும் அசுர முகங்கள் இன்னொரு வண்டியில் இடையே பேயாடுகிறது.

நடுவழியில் டாஸ்மாக் பேய் என்று பல பேய்களின் ஆட்டம் தென்பட்டாலும் அவை பூசாரிகளால் விரட்ட முடியாத பேய்கள் எனப் புரிந்துகொள்கிறோம். இது பேய்க் கதைதான், காதல் பேய்க் கதை. அதன் பின், நாயகியின் கண்ணில் பூமியின் பொறுமை தெரிகிறது. பின்னணி இசை என்று எதுவும் இல்லை.

இது கொட்டுக்காளி படத்தின் விமர்சனம் அல்ல, இனி இது போன்ற நல்ல சினிமாக்களும் தமிழில் அடிக்கடி வரும் எனக் கூறும் கட்டியம். இது ஒரு சிலருக்கு எச்சரிக்கை. ரசனைக் குறைபாடுள்ளவர்கள் தம்மை விரைவில் மெருகேற்றா விட்டால், நல்ல நவீன சினிமாவின் நீரோட்டத்தில் கலக்க முடியாது. கரையிலேயே நின்றபடி தண்ணீரை அசுத்தப்படுத்தாமல் அவர்கள் தங்கள் தாகங்களைத் தீர்த்துக்கொள்ள வேண்டியதுதான்.

மொத்தத்தில் கொட்டுக்காளி குழுவினர் அழகான சினிமா மொழியில் அற்புதமான பகுத்தறிவுக் கதை ஒன்று சொல்லியிருக்கிறார்கள். அதற்காக இயற்கைக்கு மட்டுமல்ல திரு. சிவகார்த்திகேயனுக்கும் நன்றி. சாளரமல்லாத சிறையாக தமிழ் சினிமாவை பழைய வர்த்தகர்கள் வைத்திருக்க முடியாது. புதிய பார்வையாளர்களும், படைப்பாளர்களும் பலகி விட்டார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

படக்குழு நெகிழ்ச்சி

இந்த நிலையில், கமலின் இந்த பாராட்டு குறித்து படத்தின் தயாரிப்பாளரான சிவகார்த்திகேயன் உட்பட படக்குழுவினர் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர். அத்துடன் சிவகார்த்திகேயன், கமலின் பாராட்டுக் கடிதத்தை, தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

‘கொட்டுக்காளி’ திரைப்படம் இவ்வாறு பல்வேறு தரப்பிலும் பாராட்டுதல்களைப் பெற்று வருவதால், படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

有氧so young > 揮灑汗水,提高代謝量. Alex rodriguez, jennifer lopez confirm split. 자동차 생활 이야기.