வயநாடுக்கு நேரில் சென்ற மோகன்லால்… சூர்யா, நயன்தாரா முதல் ராஷ்மிகா மந்தனா வரை நிதியுதவி வழங்கிய தென்னிந்திய திரைபிரபலங்கள்!
கேரள மாநிலம், வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி இன்று 5 ஆவது நாளாக நடைபெற்று வருகிறது. ராணுவத்தினர் உட்பட 1,300-க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள், கனரக இயந்திரங்கள் மற்றும் அதிநவீன உபகரணங்களுடன் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
ஜூலை 30 அதிகாலையில், வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை இதுவரை 340 ஐ தாண்டி உள்ளது. 341 உடல்களுக்கு பிரேத பரிசோதனைகள் முடிக்கப்பட்டுள்ளன. 146 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 250 -க்கும் அதிகமானோரை காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வான்வழி ட்ரோன் படங்கள் மற்றும் செல்போன் ஜிபிஎஸ் போன்றவற்றை பயன்படுத்தி பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களின் கடைசியாக இருந்த இடங்கள் கண்டறியப்பட்டு, அதன் அடிப்படையில் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதி ஒன்றில், நேற்று 4 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், இவர்களைப் போன்று வேறு யாரேனும் உயிர் தப்பி சிக்கிக் கொண்டிருக்கிறார்களா என மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர்.
நேரில் பார்வையிட்ட மோகன்லால்
இந்த நிலையில், பிரபல நடிகர் மோகன்லால் இன்று வயநாடு சென்று பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்டார். அவர் இந்திய ராணுவத்தின் ( Territorial Army) கெளரவ கர்ணலாக இருப்பதால், ராணுவ சீருடையிலே சென்றார். அங்கு பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்த அவர், முகாம்களில் உள்ள மக்களுக்கு ஆறுதல் கூறினார்.
பின்னர், வயநாட்டில் பாதிக்கப்பட்ட பகுதி மக்களின் நல்வாழ்விற்காகவும், நிவாரண பணிகளுக்காகவும் தனது ‘விஸ்வசாந்தி அறக்கட்டளை’ மூலம் ரூ. 3 கோடி நிதி உதவி அளிப்பதாக அறிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மீட்பு நடவடிக்கையில் இந்திய ராணுவத்தினர் சிறப்பாக பணியாற்றியதாக பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்தார்.
ராஷ்மிகா மந்தனா, சூர்யா, கார்த்தி நிவாரண நிதி
இதனிடையே நிவாரணப் பணிகளுக்காக, கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தென்னிந்திய நடிகர், நடிகைகள் பலர் நன்கொடை அளித்து வருகின்றனர்.
நடிகர் விக்ரம் ரூ.20 லட்சம் வழங்கிய நிலையில், நடிகை ராஷ்மிகா மந்தனா ரூ.10 லட்சம் வழங்கி உள்ளார். சூர்யா, கார்த்தி, ஜோதிகா மூவரும் ரூ.50 லட்சம் வழங்கி உள்ளனர். நயன்தாரா- விக்னேஷ் சிவன் இணைந்து ரூ.20 லட்சமும் மோகன்லால் ( தனிப்பட்ட முறையில்), ரூ.25 லட்சம், மம்மூட்டி ரூ.20 லட்சம், துல்கர் சல்மான் ரூ.15 லட்சம் எனப் பலரும் நிவாரண நிதி வழங்கியுள்ளனர்.
தமிழகத்தில் அலெர்ட்
வயநாடு நிலச்சரிவு சம்பவம் எதிரொலியாக தமிழக மலைப் பகுதிகளில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தொடர் கனமழை எச்சரிக்கையும் இந்திய வானிலை ஆய்வு மையத்தால் விடுக்கப்பட்டுள்ளது.
கேரளா மட்டுமின்றி, தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களுக்கும் மழை தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தை பொறுத்தவரை, பொள்ளாச்சி, வால்பாறை, நீலகிரி பகுதிகளில் தொடர் கனமழை காரணமாக சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில், தற்போது வயநாடு சம்பவத்தை தொடர்ந்து, தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மலை கிராமங்களை கண்காணிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
பேரிடர் மீட்பு குழுக்களை, பாதிக்கப்படும் பகுதிகளில் தயாராக நிலை நிறுத்தவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.