குறளோவியம் முதல் குமரி சிலை வரை… திருக்குறளும் கலைஞரின் தீராக் காதலும்!
திருவள்ளுவர் என்றாலே திருக்குறளோடு தமிழக முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியும் கூடவே நினைவுக்கு வருவது தவிர்க்க முடியாத ஒன்று. தனது 80 ஆண்டுகளுக்கு மேலான எழுத்து பணியிலும், பேச்சிலும், அரசியல் வாழ்க்கையிலும் அவர் திருக்குறளையும் திருவள்ளுவரையும் பற்றிப் பேசாத நாட்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு செயல்பட்டவர்.
அத்தகைய வான்புகழ் கொண்ட வள்ளுவரின் புகழுக்கு மகுடம் சூட்டும் விதமாக செய்த காரியம் ஒன்று என்றால், அது கன்னியாகுமரி கடல் நடுவே 133 அடி உயரத்தில் அவருக்குச் சிலை எழுப்பியது தான். கடந்த 2000 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி அப்போதைய தமிழக முதலமைச்சராக இருந்த கருணாநிதி, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு அச்சிலையைத் திறந்து வைத்தார்.
அத்தனைகாலம் அமர்ந்தே இருந்த திருவள்ளுவரை குமரியில் எழுந்து வானுயர நிற்க வைத்து பெருமை சேர்த்த நிலையில், இன்று இந்தியாவின் தென்கோடி முனையான குமரியின் அடையாளமாக திகழ்கிறது வள்ளுவர் சிலை. இப்படி எழுந்து நிற்கும் வள்ளுவரை உலகில் வேறு எங்கும் படமாகவும் சிலையாகவும் பார்க்க முடியாது. குமரியில் மட்டுமே அதை பார்க்க முடியும்.
இந்நிலையில், அச்சிலை திறக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டி, அதன் வெள்ளிவிழா கொண்டாடப்பட இருக்கிறது. வரும் டிசம்பர் 31, ஜனவரி 1 ஆகிய நாட்களில் வள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சிகளை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் மாணவ, மாணவிகளுக்குப் பல்வேறு போட்டிகளும் திருக்குறளின் பெருமைகளை உணர்த்தும் வகையில் மாவட்டந்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
குறளோவியம் முதல் குமரி வள்ளுவர் சிலை வரை…
இந்த நிலையில், குமரியில் சிலை எழுப்பியது மட்டுமல்லாது குறளுக்கு விளக்க உரை எழுதியது தொடங்கி, குறளோவியம் படைத்தது, சென்னையில் குறளகம், வள்ளுவர்கோட்டம், அரசுப் பேருந்துகளில் திருக்குறளை இடம்பெறச் செய்தது, பழைய அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்துக்கு திருவள்ளுவர் பெயர் சூட்டியது, அனைத்துப் பேருந்துகளிலும் திருவள்ளுவர் படமும் திருக்குறளும் இடம்பெறச் செய்தது என திருவள்ளுவர் மீதும் திருக்குறள் மீது கலைஞர் கருணாநிதி கொண்டிருந்த தீராக் காதலும், வள்ளுவனுக்கு புகழ் சேர்க்க அவர் மேற்கொண்ட சில நடவடிக்கைகளும் இங்கே…
1953 ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கைதாகி திருச்சி சிறையில் அடைக்கப்படுகிறார் கருணாநிதி. சிறையில் இருந்தவர் அங்குள்ள சிறைக் கைதிகளுக்கு வள்ளுவரைப் பற்றி பாடம் நடத்தியதோடு அங்கு திருக்குறள் மன்றம் ஒன்றையும் ஆரம்பித்து நடத்தினார்.
திமுக எதிர்க்கட்சியாக இருந்த 1963 ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் வள்ளுவரின் படத்தை வைக்க வேண்டுமென்று குரல் கொடுதத்தன் விளைவாக, 1964 ஆம் ஆண்டு அப்போதைய குடியரசுத் தலைவர் ஜாகிர் உசேன் தமிழக சட்டசபையில் வள்ளுவரின் படத்தை திறந்து வைக்கிறார்.
1966 ல் கருணாநிதி மேற்கொண்ட முயற்சியால் மைலாப்பூரில் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் திருவள்ளுவர் சிலையொன்றை திறந்து வைக்கிறார். பின்னர் அண்ணாவின் தலைமையில் ஆட்சியமைந்தபோது பொதுப்பணித்துறையோடு சேர்த்து போக்குவரத்து துறையையும் கவனித்துக் கொண்டிருந்தார் கருணாநிதி. அப்போது தனியார் பேருந்துகள் அனைத்தும் அரசுமயமாக்கப்படுகிறது. அதோடு அனைத்துப் பேருந்துகளிலும் திருவள்ளுவர் படமும் திருக்குறளும் இடம்பெறச் செய்கிறார்
1969 ல் அவர் முதலமைச்சராக இருந்தபோது, தமிழர் திருநாளாகக் கொண்டாடப்படும் பொங்கல் விழாவிற்கு அடுத்த நாள் திருவள்ளுவர் தினம் கொண்டாட வேண்டும் என்று உத்தரவிட்டு, அந்த நாளை, அரசு விடுமுறை நாளாக அறிவிக்கிறார்.
ஆண்டுதோறும் தமிழக காவல்துறையினரின் நன்னடத்தையை பாராட்டி பதக்கங்கள் வழங்குவதுண்டு. அந்தப் பதக்கத்தில் திருவள்ளுவர் திருவுருவம் இடம்பெற வேண்டும் என்று சட்டம் கொண்டு வந்தார்.
1973 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 27 ம் நாள் சென்னையில் நுங்கம்பாக்கத்தில் வள்ளுவருக்கு கோட்டம் ஒன்று அமைக்க அடிக்கல் நாட்டுகிறார். விரைந்து கட்டி எழுப்பப்பட்ட கோட்டம் 1976 ஆம் ஆண்டு முடிவடைகிறது. திறப்பு விழாவுக்கு நாளும் குறிக்கப்படுகிறது. ஆனால் அப்போது மத்திய அரசால் அவரசநிலை பிரகடனப் படுத்தபட்டதால் திமுக ஆட்சி அகற்றப்படுகிறது. அதோடு வள்ளுவருக்காக அவர் கட்டிய கோட்டத்தை அவரால் திறந்து கூட வைக்க முடியவில்லை. தற்போது அவரது மகன் மு.க. ஸ்டாலின் ஆட்சியில் வள்ளுவர் கோட்டம் ரூ.80 கோடி மதிப்பில் புதுப்பிக்கப்படுகிறது.
அவர் ஆட்சியில் இருந்தபோதுதான் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சுற்றுலா மாளிகைகளிலும், விடுதிகளிலும் திருவள்ளுவர் படம் இருக்க வேண்டும், திருக்குறள் எழுதப்பட்டு இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
குறளுக்கு கதை சொல்லி ஓவியமும் தீட்டி அதை குறளோவியம் என்ற பெயரில் புத்தகமாக வெளியிட்டார்.
சென்னை பாரிமுனை என் எஸ் சி போஸ் சாலையில் உள்ள ஒரு அரசு கட்டடத்திற்கு குறளகம் என பெயர் வைத்தார்.
1989 ம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது, இந்தியாவின் தென்கோடி முனையான கன்னியாகுமரியில் வள்ளுவருக்கு வானுயர சிலை ஒன்றை நிறுவ திட்டமிடுகிறார். அப்போது ஆட்சி மாற்றம் நடைபெறுகிறது அதனால் அந்த திட்டமும் கிடப்பில் போடப்படுகிறது. மீண்டும் ஆட்சிக்கு வந்த கலைஞர் 1996 ஆம் ஆண்டு சிலை அமைக்கும் பணியை மீண்டும் துவக்குகிறார். சிலையை வடிவமைக்கும் பொறுப்பு பிரபல சிற்பி கணபதி ஸ்தபதியிடம் ஒப்படைக்கப்படுகிறது.
வெவ்வேறு இடங்களில் இதற்கான பணிகள் நடைபெற்று இரு நூற்றாண்டுகள் சங்கமிக்கும் 2000 ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி முக்கடலும் சங்கமிக்கும் குமரியில் வள்ளுவரின் சிலையை திறந்து வைத்தார்.
கன்னியாகுமரியில் வைக்கப்பட்ட சிலை அறத்துப் பாலின் 38 அதிகாரங்களை குறிக்கும் வகையில் சிலையின் பீடம் 38 அடி உயரத்திலும், பொருட்பாலையும், இன்பத்துப் பாலையும் குறிக்கும் வகையிலும் 95 அதிகாரங்கள் என்பதையும் நினைவு படுத்தி 95 அடி உயரத்திலும் நிறுவப்பட்டுள்ளது. அறத்தின் மீதே பொருட்பாலும், இன்பத்துப் பாலும் இருத்தல் வேண்டும் என்ற பொருளில் இதை நிறுவியுள்ளார்.
இந்தச் சிலையை பற்றி குறிப்பிட்ட அவர் “சோலைக்குயில் பாடும், கோலமயில் ஆடும், மோனத்தவமிருக்கும், வானத் திருமேனி, வண்ணப்பொடி தூவும் வாணவில்லாய் வளையும், நீலகடல் ஓரம் நித்தம் தவம் புரியும், குமரியல்லோ சென்றோம், குதிகுதித்து நின்றோம், இங்கு வான்முட்டும் சிலையொன்று வள்ளுவருக்கு அமைத்துள்ளோம்” என்று எழுதியிருந்தார்.
பெங்களூருவில் திருவள்ளுவர் சிலை ஒன்று அமைக்கப்பட்டு ஆண்டுகள் 18 தாண்டியும் அது திறக்கப்படாமலேயே இருந்தது. அது குறித்து அம்மாநில முதலமைச்சராக இருந்த எடியூரப்பாவிடம் பேசி, அதனை திறந்து வைக்கச் செய்தார்.
இப்படி தனது பேச்சு எழுத்து வாழ்வியல் முறை என்று அனைத்திலும் குறளின் குரலாய் ஒலித்தவர் கருணாநிதி.