“நான் தோல்வி அடைந்த அரசியல்வாதியா..?” – ஆதங்கத்தைக் கொட்டிய கமல்ஹாசன்!

தன்னை தோல்வி அடைந்த அரசியல்வாதி என விமர்சிப்பதற்கு பதிலளித்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், தான் அரசியலுக்கு 20 ஆண்டுகளுக்கு முன்பே அரசியலுக்கு வரத் தவறியது தான் தனது தோல்வி என ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.
மேலும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் குரல் இந்த ஆண்டு நாடாளுமன்றத்திலும் அடுத்த ஆண்டு தமிழக சட்டமன்றத்திலும் ஒலிக்கும் என்றும் அவர் கூறி உள்ளார். கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலின் போதே திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்படலாம் எனக் கூறப்பட்டது. ஆனால், தொகுதி பங்கீட்டில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக ராஜ்யசபா சீட் தருவதாக கமலுக்கு திமுக தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த தேர்தலில் அவர் திமுக கூட்டணியை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார்.
இந்த நிலையில், தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில ராஜ்யசபா எம்.பி-க்களின் பதவிக் காலம் விரைவில் முடிவடைய உள்ளது. இதில் திமுக-வுக்கான இடங்களில் ஒரு இடம் கமல்ஹாசனுக்கு ஒதுக்கப்பட உள்ளது. அதற்கான பேச்சுவார்த்தையும் முடிந்து உடன்பாடு எட்டப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாது வரவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலிலும் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு கணிசமான இடங்களைத் தர திமுக ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிகிறது.
இத்தகைய பின்னணியில் தான், மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கப்பட்டதன் 8 ஆம் ஆண்டு தொடக்க விழா , சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் அலுவலகத்தில் நடந்தது.
அப்போது பேசிய அவர், ‘ இந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் நமது குரல் ஒலிக்கும். அடுத்த ஆண்டு சட்டசபையில் ஒலிக்கும். அதற்கு கட்டியம் கூறுவது தான் மக்கள் நீதி மய்யம் கட்சியின் இந்த விழா” எனக் கூறினார்.
தோல்வி அடைந்த அரசியல்வாதியா?
தொடர்ந்து தன்னை தோல்வி அடைந்த அரசியல்வாதி என சிலர் விமர்சிப்பதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய அவர், ” நான் தோல்வி அடைந்த அரசியல்வாதி என பலரும் விமர்சிக்கின்றனர். ஆனால் 20 ஆண்டுகளுக்கு முன்பே அரசியலுக்கு வரத் தவறியதைத்தான் என்னுடைய தோல்வியாக நான் பார்க்கிறேன்.. அப்படி வந்திருந்தால், நான் பேசும் பேச்சும், இருக்கும் இடமும் வேறாக இருந்திருக்கும்” என்று ஆதங்கத்துடன் தெரிவித்தார்.
மேலும், “எனக்கு காந்தியைப் பிடிக்கும் அளவுக்கு பெரியாரையும் பிடிக்கும். பெரியாரே காந்தியின் சிஷ்யன்தான். எனக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால், என்னுடைய அனுபவத்தில் நான் புரிந்துகொண்டது ரசிகர்கள் வேறு, வாக்காளர்கள் வேறு. கடைசி ஒரு வாக்காளர் இருக்கும் வரை நம்முடைய பணிகள் தொடரும்” என்று கூறியவர்,
அடுத்ததாக மும்மொழி விவகாரம் தொடர்பாக பேசிய அவர், “இந்தியை திணிக்க முயன்றவர்களை தடுத்தவர்கள், இன்று நரைத்த தாடியுடன் கூட்டத்தில் இங்கே நின்று கொண்டிருப்பார்கள். தமிழகத்தில் மொழிக்காக உயிரையே விட்டுள்ளனர். பச்சைக்குழந்தைக்கும் என்ன வேண்டும் என்று தெரியும். தமிழனுக்கு தெரியாதா என்ன மொழி வேண்டும், வேண்டாம் என்று. எது தேவை என்று முடிவு செய்யும் அறிவு தமிழனுக்கு உண்டு.
நான் என்ன மொழியில் படிக்க வேண்டும் என்பதை யாரும் சொல்லக் கூடாது. நான் மொழிப் போராட்டத்தில் அரை டவுசர் போட்டுக்கொண்டு பங்கேற்ற பையன்.
உங்கள் சாய்ஸ் என்னவென்று தமிழனிடம் விட்டுவிட்டால், சீன மொழி கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுவான். அதற்காக ஆவன செய்ய வேண்டியது அரசாக இருக்க வேண்டுமே தவிர, அரசியல் செய்யக்கூடாது” என்றார்.