Amazing Tamilnadu – Tamil News Updates

“இனி ‘உலக நாயகன்’ பட்டம் வேண்டாம்!” – கமல் அறிவிப்புக்கு காரணம்…

டந்த 7 ஆம் தேதியன்று தனது 70 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடினார் நடிகர் கமல்ஹாசன். 60 ஆண்டுகளுக்கும் மேலான திரை வாழ்க்கையுடன், நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் என பன்முகத் திறமைகளால் ரசிகர்களை வசீகரித்தவர் கமல். திரைப்படத்துறையில் அவரது பயணம் அசாதரணமானது.

80 களில் ரசிகர்களால் ‘காதல் இளவரசன்’ என்ற பட்டப்பெயருடன் அழைக்கப்பட்ட கமல், பின்னாளில் தனது சிறந்த நடிப்புத் திறமைக்காக பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். சிறந்த நடிகருக்கான நான்கு தேசிய திரைப்பட விருதுகளையும், ஐந்து வெவ்வேறு மொழிகளில் பத்தொன்பது ‘பிலிம்பேர்’ விருதுகளையும் வென்றுள்ளார். 1990 ஆம் ஆண்டில், கமல்ஹாசனுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது, மேலும் 2014 ஆம் ஆண்டில், இந்திய சினிமாவுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரித்து, இந்தியாவின் மிக உயரிய சிவிலியன் விருதுகளில் ஒன்றான பத்ம பூஷன் விருதும் வழங்கப்பட்டது.

கே.எஸ். ரவிக்குமார் இயக்கிய ‘தசாவதாரம்’ படத்தில் கமல் 10 விதமான தோற்றங்களில் நடித்தது எல்லோராலும் பாராட்டப்பட்டது. அதில் ‘உலக நாயகனே’ என்று தொடங்கும் பாடலும் இடம்பெற்றிருந்த நிலையில், அந்த படத்துக்குப் பின்னர் கமல், அவரது ரசிகர்களால் தற்போது வரை ‘உலக நாயகன்’ என்றே அழைக்கப்படுகிறார்.

” இனி பட்டம் வேண்டாம்… ”

இந்த நிலையில், தனக்கு எந்த பட்டமும் அடைமொழியும் வேண்டாம் என்றும், ‘கமல் என அழைத்தால் போதும்’ என்று அறிவித்துள்ளார் கமல். இது தொடர்பான அறிவிப்பை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அவர், அதற்கான காரணங்களையும் விளக்கி உள்ளார்.

“உயிரே உறவே தமிழே. வணக்கம். என் மீது கொண்ட அன்பினால் ‘உலக நாயகன்’ உட்பட பல பிரியம் ததும்பும் பட்டங்களால் என்னை அழைக்கிறீர்கள்.

மக்கள் கொடுத்து, சக கலைஞர்களாலும் ரசிகர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட இப்படிப்பட்ட பாராட்டுச் சொற்களால் மகிழ்ந்திருக்கிறேன்; உங்கள் இந்த அன்பால் நெகிழ்ந்துமிருக்கிறேன். உங்களின் பிரியத்தின் மீது எனக்கு மாறாத நன்றியுணர்வும் உண்டு. சினிமாக் கலை, எந்த ஒரு தனி மனிதனையும் விட பெரியது. அந்தக் கலையில் மேலும் மேலும் கற்றுக்கொண்டு பரிணாமம் அடைய விரும்பும் ஒரு மாணவன் தான் நான். பிற கலைகளைப் போலவே சினிமாவும் அனைவருக்குமானது; அனைவராலுமானது. கிறமையான கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள், நல்ல ரசிகர்கள் ஒன்றிணைந்துதான் சினிமா உருவாகிறது. கலையை விடக் கலைஞன் பெரியவன் இல்லை என்பது என் ஆழமான நம்பிக்கை.

கற்றது கைம்மண் அளவு என்பதை உணர்ந்தவனாகவும், தொடர்ச்சியான முன்னகர்வில் நம்பிக்கை கொண்டு உழைத்துயர்பவனாகவும் இருப்பதே எனக்கு உவப்பானது. அதனால்தான் நிறைய யோசனைக்குப் பிறகு ஒரு முடிவுக்கு வர நேர்ந்தது. மேலே குறிப்பிட்டது போன்ற பட்டங்களையும் அடைமொழிகளையும் வழங்கியவர்களுக்கு எந்த மரியாதைக் குறைவும் வந்து விடாத வண்ணம் அவற்றைத் துறப்பது என்பதே அது. எனவே, என் மீது பிரியம் கொண்ட அனைவருக்குமாக ஒரு வேண்டுகோள் வைக்கிறேன்.

” கமல் என அழைத்தாலே போதும் “

இனிவரும் காலத்தில் என் ரசிகர்களும் ஊடக நண்பர்களும் திரைத்துறையைச் சார்ந்தவர்களும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தொண்டர்களும், சக இந்தியர்களும் என்னை கமல்ஹாசன் என்றோ கமல் என்றோ KH என்றோ குறிப்பிட்டால் போதுமானது என்று கேட்டுக்கொள்கிறேன். இத்தனை காலமாக நீங்கள் என் மேல் காட்டி வரும் அன்புக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவிக்கிறேன். சக மனிதன் என்கிற ஸ்தானத்திலிருந்தும், சினிமாவை நேசிக்கிற நம் அனைவரிலும் ஒருவனாகவே நான் இருக்க வேண்டும் என்கிற என் எண்ணத்தில் இருந்தும் இந்த வேண்டுகோள் வெளிப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன் ” என்று தெரிவித்துள்ளார் கமல்.

Exit mobile version