ரூ.1000 மகளிர் உரிமைத் திட்டம்: விடுபட்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு!

தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், பெண்களின் பொருளாதார மேம்பாடு மற்றும் சமூக உயர்வை நோக்கமாகக் கொண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் மூலம், தகுதியுள்ள பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 நிதி உதவி வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் தொழில்நுட்பக் கோளாறு, ஆவணப் பிழைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த திட்டத்தில் பயன் பெற முடியாமல் இருந்த பெண்கள், “எங்களுக்கும் மாதம் ரூ.1000 வேண்டும்” என அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களிடம் தொடர்ந்து முறையிட்டு வந்தனர். இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, வரும் ஜூன் 4 முதல், ‘மக்களுடன் முதல்வர்’ நிகழ்ச்சியின் மூலம் விடுபட்ட பெண்கள், ‘மகளிர் உரிமைத் தொகை’ திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்.
சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு
‘மக்களுடன் முதல்வர்’ நிகழ்ச்சியின் கீழ், தமிழ்நாடு முழுவதும் 9,000 இடங்களில் முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இந்த முகாம்களில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் பெண்கள்’ தங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். இதற்காக அரசு தீவிரமான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் முகாம்கள் எங்கெங்கு நடைபெற வேண்டும் என்பது குறித்த விவரங்கள் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.
மேலும், இத்திட்டத்தில் பணியாற்றும் தாசில்தார்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு சென்னையில் மே 13 அன்று பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. இந்தப் பயிற்சியில், விண்ணப்பங்களைச் சரிபார்ப்பது, முகாம்களை திறம்பட நடத்துவது மற்றும் பொதுமக்களுக்கு உதவுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன.
விண்ணப்பிக்க தகுதியுள்ளவர்கள்
இத்திட்டத்தில் பயன்பெற, பின்வரும் தகுதிகளைப் பெண்கள் பூர்த்தி செய்ய வேண்டும்:
தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
வயது 21 முதல் 60 வரை இருக்க வேண்டும்.
குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
ஆண்டுக்கு 3,600 யூனிட்டுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள்.
5 ஏக்கருக்கு குறைவாக நன்செய் நிலம் அல்லது 10 ஏக்கருக்கு குறைவாக புன்செய் நிலம் வைத்திருக்கும் குடும்பங்கள்.
அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர் மற்றும் பிற அரசு உதவித் திட்டங்களில் பயன்பெறுவோர் இதற்கு தகுதியற்றவர்கள்.
விண்ணப்பிக்கும் முறை
‘மக்களுடன் முதல்வர்’ முகாம்களில் விண்ணப்பிக்க விரும்புவோர் ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கிக் கணக்கு விவரங்கள், வருமானச் சான்றிதழ் மற்றும் பிற தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமும் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க விரும்புவோர், www.tn.gov.in இணையதளத்தில் உள்ள மகளிர் உரிமைத் திட்டப் பக்கத்தைப் பயன்படுத்தலாம். விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னர், தகுதியுள்ளவர்களுக்கு நிதி உதவி வழங்கப்படும்.