Amazing Tamilnadu – Tamil News Updates

சங்க இலக்கியம் முதல் சட்டமன்ற உரைகள் வரை… ‘கலைஞர் கருவூலம்’ இணையதளத்தில் அரிய படைப்புகள்!

றைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நடத்திய, ‘தமிழிணையம் 99’ மாநாட்டைத் தொடர்ந்து, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின்கீழ், கடந்த 2001 ஆம் ஆண்டு தமிழ் இணையக் கல்விக்கழகம் உருவாக்கப்பட்டது. இந்நிறுவனத்தால் 39 நாடுகளில் 181 தொடர்பு மையங்கள் மூலமாக 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இணையவழியில் தமிழ் கற்பிக்கப்படுவதுடன், கணித்தமிழ் தொடர்பான ஆய்வுகள் மற்றும் கருவிகளை உருவாக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், அறிவைப் பொதுமை செய்யும் நோக்கத்தில் தமிழ் மின்நூலகம் (https://www.tamildigitallibrary.in) உருவாக்கப்பட்டு, தமிழ் மொழி, இலக்கியம், வரலாறு, பண்பாடு, அறிவியல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட நூல்கள், பருவ இதழ்கள் மற்றும் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓலைச்சுவடிப் பக்கங்களைப் பதிவேற்றம் செய்து, உலகெங்கும் வாழும் தமிழ் ஆர்வலர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் பயன்படும் வகையில் கட்டணமில்லாச் சேவையினை வழங்கி வருகிறது. இந்த மின்நூலகம் கடந்த மூன்றரை ஆண்டுகளில் மட்டும் 10.5 கோடி பார்வைகளை எட்டியுள்ளது. இதுவரை மொத்தம் 12 கோடிக்கும் மேற்பட்ட பார்வைகளைக் கடந்து பயணிக்கிறது.

‘கலைஞர் கருவூலம்’ இணையப் பக்கம்

கருணாநிதியின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழ் இணையக் கல்விக் கழகத்தால் உருவாக்கப்பட்டுள்ள ‘கலைஞர் கருவூலம்’ என்ற சிறப்பு இணையப் பக்கத்தை (https://www.tamildigitallibrary.in/kalaignar) தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இப்பக்கத்தில் இலக்கியம், இதழியல், உரைகள், திரைப்படங்கள், காலப்பேழை, கலைஞர் குறித்து எனும் தலைப்புகளின் கீழ், 17 கலைஞரின் நாவல்கள், 36 சிறுகதைகள், 17 நாடகங்கள், 62 கவிதைகள். 18 கட்டுரைகள், 6 தன்வரலாறு, 7 இலக்கிய உரைகள், 322 கலைஞர் நடத்திய இதழ்களின் பிரதிகள், 18 ஆண்டு மலர்கள். 73 கடிதங்கள். 3 கேலிச்சித்திரங்கள், 36 சட்டமன்ற உரைகள், 89 சொற்பொழிவுகள். ஓர் நேர்காணல், 11 திரைக்கதை வசனங்கள், 2 பாடல்களின் தொகுப்புகள். 126 புகைப்படங்கள். 19 ஒலிப்பேழைகள், 9 காணொலிகள், 82 கலைஞர் குறித்த நூல்கள் மற்றும் 2 கலைஞர் குறித்த கட்டுரைகள் என மொத்தம் 955 அரிய உள்ளடக்கங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், பண்பாட்டையும் நாகரிகத்தையும் அள்ளித்தரும் அரிய களஞ்சியமான சங்க இலக்கியங்கள் தமிழர்களின் வாழ்வியலைப் படம்பிடித்துக் காட்டுகின்றன.

சங்கத்தமிழ் நாள்காட்டி

அந்த வகையில், சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டிலும் எட்டுத்தொகையிலும் உள்ள அறிவுச் செல்வங்களை இன்றைய தலைமுறை பெறுவது அவசியம். இதனை கருத்தில் கொண்டு, நம் பண்பாட்டில் தலைசிறந்து விளங்கும் அக வாழ்க்கையை எடுத்துரைக்கும் 211 பாடல்களும், தமிழர்களின் வீரம், கொடை, புகழ், கடமைகள், கல்விச் சிறப்பு முதலானவற்றை எடுத்தியம்பும் 141 புறப்பாடல்களும், அகமும் புறமும் சார்ந்து 14 பாடல்களும் என 366 பாடல்களைத் தேர்ந்தெடுத்து ஓவியங்களாக வரைந்து, விளக்கவுரை மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்புடன் தயாரிக்கப்பட்டுள்ள ‘சங்கத்தமிழ் நாள்காட்டி’யையும் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

இப்பாடல்களுக்கான ஓவியங்கள் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் ஓவியர்களால் வரையப்பட்டவையாகும். இச்சங்கத்தமிழ் நாள்காட்டி எல்லா ஆண்டுகளிலும் பயன்படுத்துவதற்கு ஏற்ற வகையில் (Infinity Calendar) ஆங்கிலத் தேதிகளை மட்டும் குறிப்பிட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழ்ச் சமூகத்தின் ஒப்பற்ற மரபினை நினைவூட்டும் இச்சங்கத்தமிழ் நாள்காட்டி, தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (TIDCO) மற்றும் தமிழ்நாடு மாநில தொழில் மேம்பாட்டுக் கழகத்தின் (SIPCOT) நிதி நல்கையுடன் தமிழ் இணையக் கல்விக்கழகத்தால் உருவாக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Exit mobile version