Site icon Amazing Tamilnadu – Tamil News Updates

கலைஞரின் கனவு இல்லம் திட்டம்… ஒரு லட்சம் வீடுகளுக்கு நிதி ஒதுக்கீடு!

லைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2024-25 ஆம் ஆண்டில் ஒரு லட்சம் புதிய கான்கிரீட் வீடுகள் கட்டுவதற்கு ஒரு வீட்டிற்கு ரூ.3,50,000/- வீதம் மொத்தம் ரூ.3,500 கோடி நிதி ஒதுக்கீட்டிற்கு அனுமதி ஆணை வழங்கப்பட்டுள்ளது.

வீட்டின் கட்டுமானத்திற்கு ஏற்ப தரைமட்ட நிலை, ஜன்னல் மட்ட நிலை, கூரை வேயப்பட்ட நிலை மற்றும் பணிமுடிவுற்ற பின் என நான்கு தவணைகளில் ஒற்றை ஒருங்கிணைப்பு வங்கி கணக்கின் (Single Nodal Account-SNA) மூலம் தொகை நேரிடையாக பயனாளிகளுக்கு விடுவிக்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்திற்கு தமிழ்நாடு அரசால் ஏற்கனவே, ரூ.300 கோடி வழங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும், ரூ.500 கோடி வழங்கப்பட்டுள்ளது. இந்த தொகை வீடுகளின் கட்டுமானத்திற்கேற்ப பயனாளிகளின் வங்கிகணக்கிற்கு நேரடியாக தொகை விடுவிக்கப்பட்டு வருகிறது.

கலைஞரின் கனவு இல்லம் 2024-25 திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளின் கட்டுமான பணிகளும் நல்ல முன்னேற்றத்தில் உள்ளதால், இந்த நிதியாண்டிற்குள் அனைத்து வீடுகளும் கட்டி முடிக்கப்பட்டு, மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர அரசால் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஊரக வீடுகள் சீரமைத்தல் திட்டம்

மேலும், 2000-01-ஆம் ஆண்டுக்கு முன்னர் பல்வேறு அரசு திட்டங்களின் கீழ் கட்டப்பட்ட வீடுகளை பழுதுநீக்கம் செய்யும் பொருட்டு ஊரக வீடுகள் சீரமைத்தல் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் இந்த நிதியாண்டில் ஒரு லட்சம் வீடுகளை சீரமைக்க அனுமதி வழங்கப்பட்டு, தேவைக்கேற்ப சிறு மற்றும் பெரும் பழுது நீக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதுநாள்வரை 15,350 பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இதற்காக அரசால் ஏற்கனவே, ரூ.150 கோடி வழங்கப்பட்டிருந்த நிலையில் தற்சமயம் மேலும் ரூ.450 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. இந்நிதியாண்டிற்குள் நிர்வாக அனுமதி வழங்கப்பட்ட அனைத்து வீடுகளிலும் பழுதுநீக்கப்பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளது.

அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் – II 2024-25

அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சிதிட்டம் – II ன் கீழ் 2021-22 ஆம் ஆண்டு முதல் 2025-26 ஆம் ஆண்டு வரையிலான ஐந்து ஆண்டுகளில் அனைத்து கிராமங்களையும் முழுமையான வளர்ச்சி அடைந்த கிராமங்களாக மாற்றுவதற்கு தேவையான அடிப்படை மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள், பிற திட்டங்களுடன் ஒருங்கிணைத்து படிப்படியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நடப்பாண்டில், இத்திட்டத்தின் கீழ் 2,482 கிராம ஊராட்சிகள் 15,695 பணிகள் எடுக்கப்பட்டு, 12,722 பணிகள், முடிக்கப்பட்டுள்ளன. இதேபோல் ஊரக குடியிருப்பு பழுதுபார்க்கும் திட்டத்தின் கீழ் முந்தைய ஆண்டுகளில் கட்டப்பட்ட தொகுப்பு வீடுகள் பழுது பார்க்கும் பணிகளுக்காக ஏற்கனவே ரூ.150 கோடி அரசால் வழங்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ரூ.450 கோடி அரசால் வழங்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.347.50 கோடி வழங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், கலைஞரின் கனவு இல்லம் திட்டம், ஊரக குடியிருப்பு பழுதுபார்க்கும் திட்டம் மற்றும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் எடுக்கப்பட்டுள்ள பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது என தமிழக அரசு மேலும் தெரிவித்துள்ளது.

Exit mobile version