Amazing Tamilnadu – Tamil News Updates

ஜெயலலிதா நகைகள் விரைவில் ஏலம்… தயாராகும் நடவடிக்கைகள்!

டந்த 1991-96 காலக்கட்டத்தில் தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா. வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடி சொத்து குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது.

இது தொடர்பாக 1996-ம் ஆண்டு ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீது தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து அவர்களது வீட்டில் சோதனை நடத்தி சட்ட விரோத சொத்துக்களை பறிமுதல் செய்தனர். இந்த சோதனையில் ஜெயலலிதா வீட்டில் 27 கிலோ தங்கம், வைர நகைகள், 700 கிலோ வெள்ளிப் பொருட்கள் 11,344 புடவைகள், 750 ஷூக்கள், 91 கைக்கடிகாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அத்துடன் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் வாங்கி குவித்திருந்த 1,526 ஏக்கர் நிலங்களுக்கான ஆவணங்களையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்திருந்தனர்.

இந்த நிலையில், இந்த வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து ஜெயலலிதாவின் ரூ.60 கோடி மதிப்புள்ள நகைகள், சொத்து ஆவணங்கள் அனைத்தும் கர்நாடக மாநில கருவூலத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கில் கடந்த 2014 ஆம் ஆண்டு ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.

நகைகள், சொத்துகளை ஏலம் விட்டு, வழக்கை நடத்திய கர்நாடக அரசின் செலவு தொகையை வழங்க வேண்டும் என நீதிபதி தீர்ப்பளித்தார். இது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தது.

இந்நிலையில், பெங்களூருவை சேர்ந்த சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி ஜெயலலிதாவின் நகைகளை ஏலம் விட வேண் டும் என பெங்களூரு குடிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ஹெச்.ஏ. மோகன், “நகைகள், புடவைகள், சொத்து ஆவணங்களை தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும். வழக்கை நடத்திய கர்நாடக அரசுக்கு ரூ.5 கோடியை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும்” என தீர்ப்பளித்தார்.

இந்நிலையில், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, தனது அத்தையின் சொத்துகளை தன்னிடம் ஒப்படைக்கக் கோரி மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை கர்நாடக உயர் நீதிமன்றம் கடந்த ஜனவரி 13 ஆம் தேதி தள்ளுபடி செய்தது.

இதையடுத்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி மோகன் முன்னிலையில் ஜெயலலிதாவின் 27 கிலோ தங்க நகைகள், சொத்துகளை தமிழக அரசிடம் ஒப்படைக்கும் பணிகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து அந்த நகைகளை கடந்த வாரம் தமிழக உள்துறை இணைச் செயலாளர் ஹனி மேரி, தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரி எஸ்.பி. விமலா ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் ஆவணங்களில் உள்ளவாறு சரிபார்த்து பெற்றுக் கொண்டனர்.

இந்த நகைகள் 12 பெரிய அளவிலான ட்ரங்க் பெட்டிகளிலும், 16 சூட்கேஸ்களிலும் வைத்து அதிகாரிகள் தனி வாகனத்தில் ஏற்றினர். பின்னர் 30-க்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீஸாரின் பாதுகாப்புடன் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு, அரசு கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவின் படி ஜெயலலிதாவின் நகைகள் மற்றும் சொத்துகளை ஏலம் விடும் நடவடிக்கைகள் விரைவில் தொடங்க உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜெயலலிதா வழக்கை தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் கையாண்டு வந்துள்ளதால், அவர்களுடன் வருவாய்த் துறை அதிகாரிகளும் சேர்ந்து, மாவட்ட ஆட்சியர் மேற்பார்வையில் ஏலம் விடும் பணி தொடங்கப்படும் எனக் கூறப்படுகிறது.

Exit mobile version