ஜெயச்சந்திரன்: வசந்த காலங்களை பாடி அசைந்து ஆட வைத்த கானக்குயில்!

மிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகளில் ஐம்பதாண்டு காலமாக சுமார் 16,000-க்கும் மேற்பட்ட பாடல்கள் பாடிய பிரபல பழம்பெரும் பின்னணி பாடகர் ஜெயச்சந்திரன் காலமானார். அவரது மறைவு இசை ரசிகர்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

உடல் நலக்குறைவால், கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி தனது 80 ஆவது வயதில் காலமானார்.

1973 ல் தொடங்கி 80 களில் வெளிவந்த அவரது பல பாடல்கள், இசை ஆர்வலர்களின் அன்றைய தலைமுறையினரின் பசுமையான நினைவுகளாக தாலாட்டிக் கொண்டிருக்கக் கூடியவை.

கொச்சின் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஜெயச்சந்திரனின் தந்தை ரவிவர்ம கொச்சானியன் தம்புரான், ஒரு இசைக்கலைஞர். பள்ளி நாட்களில், ஜெயச்சந்திரன் மிருதங்கம் பயின்றார். 1958 ல் நடைபெற்ற மாநில பள்ளி இளைஞர் விழாவில், ஜெயச்சந்திரன் சிறந்த பின்னணி பாடகர் மற்றும் மிருதங்க நிகழ்ச்சிக்கான பரிசுகளைப் பெற்றார். விலங்கியலில் பட்டப்படிப்பை முடித்த பின்னர், அவருக்கு சென்னையில் வேலை கிடைத்தது. சென்னை வந்த அவர் அப்போதைய திரைப்பட இயக்குனர் ஏ. வின்சென்ட்டை சந்தித்தார். அவர் சினிமாவில் பாட வாய்ப்பளித்தார்.

‘சித்திரை செவ்வானம் சிரிக்க கண்டேன்’

‘உத்யோகஸ்தா’ என்கிற மலையாள படத்தில், எம்.எஸ்.பாபுராஜ் இசையில் ‘அநுராக கானம் போலே’ என்ற பாடல் மூலம் இவர் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தார். தனது வசீகர குரலால் ஒட்டுமொத்த மலையாளத்தின் மனதையும் கொள்ளை கொண்டார். மலையாளத்தை தொடர்ந்து தமிழிலும் பாடத்தொடங்கினார். காற்றினிலே வரும் கீதம் படத்தில், ‘சித்திரை செவ்வானம் சிரிக்க கண்டேன்’ பாடல் தான், ஜெயச்சந்திரனுக்கு முதல் தமிழ் பாடல்.

எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் எத்தனையோ ஹிட் பாடல்களை பாடிய ஜெயச்சந்திரன், இளையராஜா மற்றும் டி.ராஜேந்தர் போன்றவர்களுடன் மட்டுமல்லாது எஸ்.ஏ.ராஜ்குமார், தேவா, மனோஜ் கியான், ஏ.ஆர்.ரஹ்மான், வித்யாசாகர், பரணி, ஸ்ரீகாந்த் தேவா, ஜி.வி.பிரகாஷ்குமார் உள்ளிட்ட சமீபத்திய இசை அமைப்பாளர்கள் வரை தமிழில் பணியாற்றி உள்ளார்.

‘பாடிவா தென்றலே ஒரு பூவை தாலாட்டவே…’

இளையராஜா இசையில் ‘முடிவில்லா ஆரம்பம்’ என்ற படத்தில் இடம்பெற்ற ‘பாடிவா தென்றலே ஒரு பூவை தாலாட்டவே…’ பாடல் ஜெயச்சந்திரன் குரலில் இப்போது கேட்டாலும் துள்ளலாக இருக்கும். அதேபோன்று டி.ராஜேந்தரின் ‘ஒருதலை ராகம்’ படத்தில் கடவுள் வாழும் கோவிலிலே, ‘ரயில் பயணங்களில்’ படத்தில் இடம்பெற்ற ‘வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள்…’ பாடலும் ஜெயச்சந்திரனை ரசிகர்களிடத்தில் தனித்து அடையாளம் காட்டியது.

மேலும், ‘வசந்த கால நதிகளிலே’,’மாஞ்சோலைக் கிளிதானோ மான்தானோ’, ‘மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்’, ‘காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ’, ‘கவிதை அரங்கேறும் நேரம் மலர்க்கனைகள் பரிமாறும் தேகம்’, ‘செம்மீனே செம்மீனே உன் கிட்ட சொன்னேனே’ , ‘கவிதை அரங்கேறும் நேரம்’,‘தாலாட்டுதே வானம்’ ‘அந்திநேரத் தென்றல் காற்று’, ‘சொல்லாமலே யார் பார்த்தது’ என ஏராளமான பாடல்கள் அவருக்குப் புகழ் பெற்று தந்தவை.

‘ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு’

அதிலும், 1984 ஆம் ஆண்டு, ஆர். சுந்தர்ராஜன் இயக்கத்தில், இளையராஜா இசையில் வெளியான வைதேகி காத்திருநாள் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு’ , ‘காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி’, இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமோ’ ஆகிய பாடல்கள் தமிழகத்தின் பட்டித்தொட்டியெங்கும் அவருக்குப் பெரும் புகழைப் பெற்றுத்தந்தது. மேலும் ‘அம்மன் கோவில் கிழக்காலே’ படத்தில் இடம்பெற்ற ‘பூவை எடுத்து’, ‘கடலோரக் கவிதைகள்’ படத்தில் இடம்பெற்ற‘கொடியிலே மல்லியப்பூ’ பாடலும் ஜெயச்சந்திரனின் ஹிட் பாடல்களில் முக்கியமானவை.

கேரளாவில் ஐந்து முறை சிறந்த பாடகருக்கான மாநில திரைப்பட விருதுகளையும், தமிழ்நாட்டில் இரண்டு முறை மாநில திரைப்பட விருதுகளையும் வென்றுள்ளார்.

மனித வாழ்க்கையின் அனைத்து உணர்ச்சிகரமான தருணங்களுக்கும், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் பாடல்களை விட்டுச் சென்றுள்ளார் ஜெயச்சந்திரன். அவருக்கு மனைவி லலிதா, மகள் லட்சுமி மற்றும் பாடகியான மகன் தினநாதன் ஆகியோர் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Ramazan bakkal’dan fuat sezgin konferansı. Zu den favoriten hinzufügen. hest blå tunge.