இந்தியா-பாகிஸ்தான் பதற்றம்… ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு நிறுத்தம்!

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) 2025 ஐபிஎல் தொடரை ஒரு வாரத்திற்கு நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை மதியம் ஐபிஎல் நிர்வாக கவுன்சில் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், “ஐபிஎல் 2025-இன் மீதமுள்ள போட்டிகள் உடனடியாக ஒரு வாரத்திற்கு நிறுத்தப்படுகின்றன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை தரம்சாலாவில் நடைபெற்ற டெல்லி கேபிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் இடையேயான போட்டி, அருகிலுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்பட்டதால் பாதியில் ரத்து செய்யப்பட்டதை அடுத்து இந்த முடிவு எதிர்பார்க்கப்பட்டது.
பிசிசிஐ அறிக்கையில், “போட்டியின் புதிய அட்டவணை மற்றும் இடங்கள் குறித்த மேலதிக அறிவிப்புகள், தொடர்புடைய அதிகாரிகள் மற்றும் பங்குதாரர்களுடன் விரிவான ஆலோசனைக்குப் பிறகு விரைவில் வெளியிடப்படும். வீரர்களின் பாதுகாப்பு முதன்மையானது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
“ஐபிஎல் நிர்வாக கவுன்சில், அனைத்து முக்கிய பங்குதாரர்களுடனும் ஆலோசனை செய்து, பெரும்பாலான உரிமையாளர்களின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்தது. வீரர்களின் கவலைகள், ஒளிபரப்பாளர்கள், ஸ்பான்சர்கள் மற்றும் ரசிகர்களின் கருத்துகளை உரிமையாளர்கள் வெளிப்படுத்தினர். இந்திய ஆயுதப்படைகளின் வலிமை மற்றும் தயார்நிலையில் பிசிசிஐ முழு நம்பிக்கை கொண்டிருந்தாலும், அனைத்து பங்குதாரர்களின் ஒட்டுமொத்த நலனுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்றும் அந்த அறிக்கையில் பிசிசிஐ தெரிவித்துள்ளது.

“இந்த சவாலான நேரத்தில், பிசிசிஐ நாட்டுடன் உறுதியாக நிற்கிறது. இந்திய அரசு, ஆயுதப்படைகள் மற்றும் மக்களுக்கு எங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்துகிறோம். ஆபரேஷன் சிந்தூர் மூலம் பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் பாகிஸ்தான் ஆயுதப்படைகளின் தேவையற்ற ஆக்கிரமிப்புக்கு எதிராக துணிச்சலுடன் பதிலடி கொடுக்கும் ஆயுதப்படைகளின் வீரம், தைரியம் மற்றும் தன்னலமற்ற சேவையை பிசிசிஐ பாராட்டுகிறது. கிரிக்கெட் ஒரு தேசிய ஆர்வமாக இருந்தாலும், நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்புக்கு மேல் எதுவுமில்லை. இந்தியாவை பாதுகாக்கும் அனைத்து முயற்சிகளையும் ஆதரிக்க பிசிசிஐ உறுதிபூண்டுள்ளது மற்றும் நாட்டின் நலனுக்கு ஏற்ப தனது முடிவுகளை எப்போதும் எடுக்கும்,” என்று அந்த அறிக்கையில் பிசிசிஐ மேலும் தெரிவித்துள்ளது.