சிந்து நதி நீர் ஒப்பந்தம் என்றால் என்ன… இந்தியாவின் நடவடிக்கையால் பாகிஸ்தானுக்கு என்ன பாதிப்பு?

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22 அன்று நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதில் பெரும்பாலானோர் சுற்றுலா பயணிகள்.
பாகிஸ்தானை தளமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பாவின் கிளை அமைப்பான ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்’ (டிஆர்எஃப்) இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. என்றபோதிலும் இந்த தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் ராணுவத்தின் தூண்டுதல் இருப்பதாகவும், பயங்கரவாதிகளுக்கு அந்த நாடு வழங்கி வரும் உதவிகளுமே முக்கிய காரணம் என்றும் இந்திய அரசு கருதுகிறது.
இந்த நிலையில், இந்த தாக்குதலுக்குப் பதிலடியாக, இந்திய அரசு ஐந்து முக்கிய நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. இதில், 1960-ல் உலக வங்கி மத்தியஸ்தத்துடன் இந்தியாவும் பாகிஸ்தானும் கையெழுத்திட்ட சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை “உடனடியாக நிறுத்தி வைப்பது” மற்றும் அட்டாரி-வாகா எல்லைக் காவல் நிலையத்தை மூடுவது ஆகியவை முக்கியமானவை.
இந்த முடிவுகள் பாகிஸ்தானுக்கு கடுமையான பொருளாதார, விவசாய மற்றும் தூதரக பாதிப்புகளை ஏற்படுத்தும் எனக் கூறப்படும் நிலையில், அது குறித்து பார்க்கும் முன்னர், சிந்து நதி நீர் ஒப்பந்தம் என்றால் என்ன என்பது குறித்து தெரிந்துகொள்ளலாம்.
சிந்து நதி நீர் ஒப்பந்தம் என்றால் என்ன?

சிந்து நதி நீர் ஒப்பந்தம், 1960 செப்டம்பர் 19-ல் இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேரு மற்றும் பாகிஸ்தான் அதிபர் அயூப் கான் ஆகியோர் இடையே கையெழுத்தானது. இது சிந்து நதி மற்றும் அதன் துணை ஆறுகளான ஜீலம், செனாப், ரவி, பியாஸ் மற்றும் சட்லெஜ் ஆகியவற்றின் நீர் பகிர்வை நிர்வகிக்கிறது. இந்த ஒப்பந்தப்படி, கிழக்கு ஆறுகளான ரவி, பியாஸ் மற்றும் சட்லெஜ் (ஆண்டுக்கு 41 பில்லியன் கன மீட்டர்) இந்தியாவிற்கும், மேற்கு ஆறுகளான சிந்து, ஜீலம் மற்றும் செனாப் (ஆண்டுக்கு 99 பில்லியன் கன மீட்டர்) பாகிஸ்தானுக்கும் ஒதுக்கப்பட்டன.
இந்தியா மேற்கு ஆறுகளில் மின்சார உற்பத்தி, நீர்ப்பாசனம் போன்றவற்றிற்கு மட்டுப்படுத்தப்பட்ட பயன்பாட்டு உரிமையைப் பெற்றது. இந்த ஒப்பந்தம், மூன்று போர்களையும் தாண்டி, இரு நாடுகளுக்கு இடையிலான மிக வெற்றிகரமான ஒத்துழைப்பாக கருதப்பட்டது.
பாகிஸ்தானுக்கு ஏற்படும் பாதிப்புகள்
சிந்து நதி மற்றும் அதன் துணை ஆறுகள், பாகிஸ்தானின் விவசாயம், குடிநீர் மற்றும் பொருளாதாரத்திற்கு உயிர்நாடியாக உள்ளன. இந்த ஆறுகள் ஆண்டுக்கு 6,723.4 பில்லியன் கன அடி நீரை வழங்குகின்றன, இது பாகிஸ்தானின் விவசாயப் பகுதிகளை பாசனம் செய்கிறது. பாகிஸ்தானின் பொருளாதாரத்தில் விவசாயம் 23% பங்களிக்கிறது மற்றும் 68% கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை ஆதரிக்கிறது. ஒப்பந்தம் நிறுத்தப்படுவதால், இந்தியா நீர் பகிர்வு தரவுகளை நிறுத்தலாம் அல்லது மேற்கு ஆறுகளின் நீர் ஓட்டத்தை கட்டுப்படுத்தலாம். இது, பாகிஸ்தானில் பயிர் உற்பத்தி குறைவு, உணவுப் பற்றாக்குறை மற்றும் பொருளாதார ஸ்திரமின்மையை ஏற்படுத்தும். குறிப்பாக, பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணங்களில் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவர்.
அட்டாரி-வாகா எல்லை மூடலால் ஏற்படும் தாக்கங்கள்
அட்டாரி-வாகா எல்லைக் காவல் நிலையம், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான முக்கிய வர்த்தக மற்றும் மக்கள் தொடர்பு பாலமாக விளங்குகிறது. இந்தியாவின் முதல் நிலப்பகுதி துறைமுகமாக அமைந்த இது, அமிர்தசரஸிலிருந்து 28 கிமீ தொலைவில் உள்ளது. 2023-24-ல், இந்த எல்லை வழியாக ரூ.3,886.53 கோடி மதிப்பிலான வர்த்தகமும், 6,871 சரக்கு இயக்கங்களும், 71,563 பயணிகள் பயணமும் பதிவாகியுள்ளன.

இந்த எல்லை மூடப்படுவதால், இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் முற்றிலும் நின்று, பாகிஸ்தானின் பொருளாதாரத்திற்கு மேலும் பாதிப்பு ஏற்படும். ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு வரும் பொருட்களும் பாதிக்கப்படும். மேலும், 1959 முதல் நடைபெறும் எல்லை சடங்கு (Beating Retreat Ceremony) நிறுத்தப்படுவது, இரு நாடுகளுக்கு இடையிலான கலாசார தொடர்பை முறிக்கும். இந்த மூடல், தூதரக உறவுகளில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தி, மக்கள் பயணத்தை கடுமையாக கட்டுப்படுத்தும்.
நடவடிக்கையின் நோக்கம் என்ன?
பாகிஸ்தானை பொருளாதார ரீதியாகவும், தூதரக ரீதியாகவும் தனிமைப்படுத்துவதை நோக்கமாக கொண்டே இந்தியா இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அயலுறவுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் பாகிஸ்தானுக்கு எதிராக கடுமையான எச்சரிக்கையாகவும் இது அமையும். சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்துவது, பாகிஸ்தானின் பொருளாதார உயிர்நாடியை தாக்குவதாகும்.
இது அந்நாட்டு அரசு மற்றும் ராணுவத்தின் மீது உள்நாட்டு அழுத்தத்தை அதிகரிக்கும். இதனால், பாகிஸ்தான் பேச்சுவார்த்தைக்கு வந்தால், பயங்கரவாத குழுக்களுக்கு நிதி மற்றும் தளவாட ஆதரவை பாகிஸ்தான் குறைக்க வேண்டும் என இந்தியா வலியுறுத்தும். மேலும், தூதரக உறவுகளை குறைப்பது மற்றும் பாகிஸ்தானின் எக்ஸ் கணக்கை இந்தியாவில் தடை செய்வது, அந்நாட்டின் பிரச்சாரத்தை கட்டுப்படுத்தும் என இந்தியா கருதுகிறது.
பாகிஸ்தானும் பதிலடி

இதனிடையே இந்தியா சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தியதையும், தூதரக உறவுகளை குறைத்ததையும் தொடர்ந்து, பாகிஸ்தானும் பதில் நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. வியாழக்கிழமை அன்று பிரதமர் ஷெபாஸ் ஷரீஃப் தலைமையில் நடந்த அந்த நாட்டின் தேசிய பாதுகாப்பு குழு கூட்டத்தில், இந்திய விமானங்களுக்கு பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த தடை, வாகா எல்லையை மூடுவது, இந்தியாவுடனான அனைத்து வர்த்தகத்தையும் நிறுத்துவது ஆகிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
மேலும், சிந்து நதி நீரை திசை திருப்புவது போராக கருதப்படும் என்றும் அந்த நாடு எச்சரித்துள்ளது.
கூட்டத்தில் முக்கிய அமைச்சர்கள் மற்றும் முப்படை தளபதிகள் பங்கேற்றனர். “இந்தியாவின் குற்றச்சாட்டுகள் மற்றும் பஹல்காம் போன்ற நிகழ்வுகளை அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்துவது, பிராந்திய அமைதியை பாதிக்கிறது. பாகிஸ்தானின் இறையாண்மை மற்றும் மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், உறுதியான பதிலடி கொடுக்கப்படும்” என கூட்டத்திற்கு பின் வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.