Amazing Tamilnadu – Tamil News Updates

IRCTC-க்குப் போட்டியாக வருகிறது புதிய ரயில்வே ‘ஆப்’!

ன்லைன் மூலம் ரயில் டிக்கெட் எடுப்பதற்கு ரயில்வேயின் துணை நிறுவனமான ஐஆர்சிடிசி-யையே பெரும்பாலானோர் நம்பி உள்ளனர். ஆனால், இதில் டிக்கெட் புக் செய்வதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக பயணிகள் தரப்பில் நீண்ட நாட்களாகவே புகார் சொல்லப்பட்டு வருகிறது.

குறிப்பாக, பண்டிகை தினங்களையொட்டி முக்கிய ஊர்களுக்குச் செல்ல டிக்கெட் முன்பதிவு செய்ய முற்படும்போது ஐஆர்சிடிசி தளத்துக்குள் லாக்-இன் செய்து உள்ளே செல்லவே பெரும்பாடாகிவிடுகிறது. அப்படியே லாக்- இன் ஆகி உள்ளே சென்றாலும், பணம் செலுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டு,வெயிட்டிங் லிஸ்ட் சென்றுவிடுகிறது.

இது தவிர, சரக்கு ரயில் போக்குவரத்து, ரயில் சுற்றுலா என, தனித்தனியாக செயலிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால், ரயில்வேயின் ஒருங்கிணைந்த சேவைகளைப் பெறுவதில் சிரமம் ஏற்படுகிறது.

இந்த நிலையில், தற்போது பயணிகளின் சிரமங்களைப் போக்கும் விதமாக, ரயில்வேயின் அனைத்து சேவைகளையும் ஒரே செயலியில் பெறும் வகையில், ‘சூப்பர் ஆப்’ ஒன்றை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது இந்தியன் ரயில்வே.

இது குறித்து பேசிய ரயில்வே அதிகாரிகள், ” இந்த புதிய செயலியில் பயணிகள் விரைவாக டிக்கெட் முன்பதிவு செய்யலாம். முன்பதிவு இல்லாத டிக்கெட் பெற முடியும். டிக்கெட் ரத்து செய்த அடுத்த 24 மணி நேரத்தில் பணம் திரும் பெற உதவும். பி.என்.ஆர்., சரிபார்த்தல், ரயில்கள் செல்லும் நிகழ்விடத்தை பார்த்தல், உணவு ஆர்டர், விமான டிக்கெட் முன்பதிவு, ஓய்வு அறைகள், கால்டாக்சி முன்பதிவு வசதிகளையும் பெறலாம்.

இதேபோல், சரக்கு அனுப்புவது, அதற்கான ஆவணங்களை சமர்ப்பிப்பது, கட்டணம் செலுத்துவது உள்ளிட்ட வசதிகளும் இடம்பெறும். இந்த மொபைல் போன் செயலி உருவாக்கம், இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. எனவே, அடுத்த மூன்று மாதங்களில் இந்த செயலி அறிமுகம் செய்யப்படும். இது பயன்பாட்டிற்கு வரும்போது, பயணியர் அனைத்து வசதிகளையும் ஒரே செயலியில் எளிதில் பெறலாம்” எனத் தெரிவித்தனர்.

எனவே ரயில்வே கொண்டு வர உள்ள இந்த புதிய செயலி, ஐஆர்சிடிசிக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version