Amazing Tamilnadu – Tamil News Updates

சென்னைவாசிகளை சிலிர்க்க வைக்கப்போகும் போர் விமானங்கள்!

இந்திய விமானப்படை 1932 ஆம் ஆண்டு அக்டோபர் 8 ஆம் தேதி அன்று நிறுவப்பட்டது. இதையொட்டி, ஆண்டு தோறும் அன்றைய தினம் நாடு முழுவதும் உள்ள இந்திய விமானப்படை தளங்கள் மற்றும் விமான நிலையங்களில் இந்திய விமானப்படை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் வரும் 8 ஆம் தேதி 92 ஆவது இந்திய விமானப் படை தினம் நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது.

சென்னை மெரினாவில் சாகச நிகழ்ச்சி

இதை முன்னிட்டு, நாளை சென்னை மெரினா கடற்கரையில் வான்வழி சாகச நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட விமானங்கள், இந்திய விமானப்படையின் விமானங்கள் மற்றும் ராணுவ ஹெலிகாப்டர் கலந்து கொள்கின்றன. போர் விமானங்கள் மற்றும் இந்திய ராணுவ விமானங்கள் என அனைத்து ரகத்திலும் ஒன்று சாகச நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, வானத்தில் வர்ண ஜாலம் காட்ட உள்ளன.

இந்த நிகழ்ச்சிகளைக் கண்டுகளிக்க 15 லட்சத்திற்கும் அதிகமானோர் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கின்றனர். இதனால் சென்னை பெருநகர காவல் துறை பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளது. விமான சாகச நிகழ்ச்சியை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் விமானப்படை அதிகாரிகள், அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பார்க்க உள்ளனர். இதனால், தமிழ்நாடு பொதுப்பணித்துறை சார்பில் மெரினா கடற்கரை மணல் பரப்பில் 15க்கும் மேற்பட்ட ஷாமினார் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளது.

மக்களைக் கவர்ந்த ஒத்திகை நிகழ்ச்சி

முன்னதாக இதற்கான ஒத்திகை நிகழ்ச்சி, சென்னை மெரினா கடற்கரையில் நேற்று காலை 11 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெற்றது. இதை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்களது குடும்பத்தினருடன் கண்டு ரசித்தனர். தற்போது காலாண்டு தேர்வு முடிந்து அரசு பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் பள்ளி மாணவர்கள் தங்களது பெற்றோர்களுடன் சாகச ஒத்திகை நிகழ்ச்சியைக் காண குவிந்தனர்.

விமானங்கள் மற்றும் போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் காற்றை கிழித்தப்படி வண்ண பொடிகளை தூவி வானில் வட்டமிட்டப்படி சாகச நிகழ்ச்சியை நடத்தின. அதை பொதுமக்கள் தங்களது செல்போன்கள் மற்றும் கேமராக்கள் மூலம் வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர்.

தாம்பரம் விமானப்படை பயிற்சி மையம்

அக்டோபர் 8 ஆம் தேதி, தாம்பரம் விமானப்படை பயிற்சி மையத்தில் நடைபெறும் இந்திய விமானப் படை தினத்தில் வீரர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. நாட்டின் வான்வெளியை பாதுகாப்பதில் இந்திய விமானப்படையின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டும் வகையில் அன்றைய தினம் இந்திய விமானப்படையின் வகை, வகையான விமானங்கள் காண்போரை கவர்ந்திழுக்கும் ஏரோபாட்டிக் வான் சாகசங்களில் ஈடுபட உள்ளன.

இந்த விமானப்படை சாகச நிகழ்வில், வானில் லாகவமாக வந்து குட்டிக்கரணங்கள் அடித்து வியப்புக்குள்ளாக்கும் ஆகாஷ் கங்கா அணி, ஸ்கைடைவிங் கலையில் விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மிக நெருக்கமாக வந்து சாகசங்கள் நிகழ்த்தும் சூர்யகிரண் ஏரோபாட்டிக் டீம், வான் நடனத்தில் ஈடுபடக்கூடிய சாரங் ஹெலிகாப்டர் அணி ஆகியவை தங்களது வான்கலைகளால் மக்களை பரவசத்தில் ஆழ்த்த உள்ளன.

மேலும், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நவீன இலகுரக போர் விமானம் தேஜஸ், இலகுரக போர் ஹெலிகாப்டர் பிரசாந்த் மற்றும் டகோட்டா, ஹார்வர்ட் போன்ற பாரம்பரிய பெருமைவாய்ந்த பழங்கால விமானங்கள், போக்குவரத்து விமானங்கள் என அனைத்து வகை விமானங்களும் விதவிதமான அணிவகுப்பில் ஈடுபட உள்ளன.

Exit mobile version