இந்தியாவின் பெருமிதம் ‘ஆகாஷ் ஏவுகணை’… பாக். ஏவுகணைகள், ட்ரோன்கள் வீழ்த்தப்பட்டது எப்படி?

இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையால் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஒன்பது பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. இதற்கு பதிலடியாக, பாகிஸ்தான் 48 மணி நேரத்திற்குள் இரண்டு அலை அலையாக ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியது. ஆனால், இந்தியாவின் வலிமையான வான்பாதுகாப்பு அமைப்பு இந்த தாக்குதல்களை முறியடித்து, நாட்டை பாதுகாத்தது.
இந்திய வான்படை, ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் உள்ள ராணுவ தளங்களை குறிவைத்து பாகிஸ்தான் அனுப்பிய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை இந்திய வான்பாதுகாப்பு அமைப்பு, வெற்றிகரமாக வீழ்த்தியது.
முதல் அலை தாக்குதல் மே 7 இரவு தொடங்கி, மே 8 அதிகாலை வரை நீடித்தது. இதில், 15 இந்திய நகரங்களுக்கு அருகிலுள்ள ராணுவ தளங்கள் குறிவைக்கப்பட்டன. ஆனால், இந்திய வான்பாதுகாப்பு அமைப்பு இந்த ஏவுகணைகளை இடைமறித்து, பாகிஸ்தானின் வான்பாதுகாப்பை முடக்குவதற்கு இஸ்ரேலிய தயாரிப்பான HARPY ட்ரோன்களை பயன்படுத்தி பதிலடி கொடுத்தது. இரண்டாவது அலை தாக்குதல் சில மணி நேரங்களில் தொடங்கியது. பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் ஜம்மு காஷ்மீரில் சைரன்கள் ஒலிக்க, எல்லை நகரங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு முழு இருட்டு (Blackouts In Border Areas) உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்திய வான்பாதுகாப்பு பாகிஸ்தானின் இந்த தாக்குதலையும் தோல்வியடையச் செய்தது.
இந்தியாவின் ‘Iron Dome’ (அயர்ன் டோம்)
இந்திய வான்படை, எதிரி ஆயுதங்களை எதிர்கொள்ள பல்வேறு தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்தியது. இதில், விமான எதிர்ப்பு துப்பாக்கிகள், மேற்பரப்பு-வான ஏவுகணைகள் மற்றும் ஒருங்கிணைந்த கவுன்ட்டர்-யுஏஎஸ் (Counter-Unmanned Aircraft System) கட்டமைப்பு ஆகியவை முக்கிய பங்கு வகித்தன. இந்த C-UAS கட்டமைப்பு, ட்ரோன்கள் மற்றும் வான்வழி அச்சுறுத்தல்களை செயலிழக்க வைக்கிறது. குறிப்பாக, ரேடார் மற்றும் ரேடியோ அலைவரிசை சென்சார்கள் மூலம் வான்வெளி அச்சுறுத்தல்களை கண்டறிந்து, அவற்றை கண்காணிக்கிறது. அச்சுறுத்தல் கண்டறியப்பட்டவுடன், வெடிபொருள் இல்லாத முறைகளான ரேடியோ சிக்னல் ஜாமிங் போன்றவற்றை பயன்படுத்தி எதிரியின் தாக்குதலை முறியடிக்கிறது. மேலும், இடைமறிக்கும் ஏவுகணைகளை வீசி, எதிரி ஏவுகணைகளையும் அழிக்கிறது.
இந்தியாவின் பரந்த பரப்பளவு மற்றும் அணுக முடியாத பகுதிகளை கருத்தில் கொள்ளும்போது, C-UAS கட்டமைப்பு மிக முக்கியமானது. இது, இந்திய ஆயுதப்படைகளுக்கு மற்ற வளங்களை மூலோபாய ரீதியாக பயன்படுத்த உதவுகிறது. இந்த கட்டமைப்பு, வெவ்வேறு வகையான ஏவுகணைகளை எதிர்கொள்ள பல அடுக்கு பாதுகாப்பு அமைப்புகளையும் உள்ளடக்கியதாக உள்ளது.
S-400 ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு
இந்தியாவின் மிக முக்கிய வான்பாதுகாப்பு அமைப்புகளில் ஒன்று S-400 ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு ஆகும். இது 600 கிமீ தொலைவில் உள்ள அச்சுறுத்தல்களை கண்காணிக்கவும், 400 கிமீ வரம்பிற்குள் அவற்றை இடைமறிக்கவும் முடியும். இந்த அமைப்பு, 360 டிகிரி கண்காணிப்பு ரேடார், இடைமறிக்கும் ஏவுகணைகள், மற்றும் கட்டளை மையம் ஆகியவற்றை உள்ளடக்கியது. இது நவீன போர் விமானங்களையும் எதிர்கொள்ளும் திறன் கொண்டது. மேலும், குறுகிய தூர மேற்பரப்பு-வான பாதுகாப்பு அமைப்பான SAMAR (Surface-to-Air Missile for Air Defence), பாகிஸ்தான் ஏவுகணைகளை எதிர்கொள்ள பெரிதும் பயன்படுத்தப்பட்டது. இது ரஷ்யாவின் Vympel ஏவுகணைகளை பயன்படுத்தி, 12 கிமீ வரம்பில் குறைந்த உயரத்தில் பறக்கும் ட்ரோன்களை இடைமறிக்கக்கூடியது.
அரண் போல் காத்த ஆகாஷ் ஏவுகணை
மேலும், பாகிஸ்தானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை முறியடித்து இந்திய வான் பரப்பை பாதுகாத்ததில்
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆகாஷ் ஏவுகணை முக்கிய பங்கு வகித்தது. இது, 50 கிமீ வரம்பில் பல இலக்குகளை ஒரே நேரத்தில் எதிர்கொள்ளும் திறன் கொண்டது. இதில், எதிரியின் ஜாமிங் மற்றும் தவிர்ப்பு முறைகளை முறியடிக்கும் மின்னணு எதிர்-எதிர் நடவடிக்கைகள் (ECCM) உள்ளன. இஸ்ரேலின் அயர்ன் டோம் போலவே, ஆகாஷ் அமைப்பும் ஒரே நேரத்தில் பல இலக்குகளை தாக்க முடியும்.
மே 8 மற்றும் 9 ஆம் தேதிகளுக்கு இடைப்பட்ட இரவில், மேற்கு எல்லை மற்றும் ஜம்மு காஷ்மீரில் உள்ள கட்டுப்பாட்டு கோடு (LoC) பகுதிகளில் பாகிஸ்தான் நடத்திய பல்வேறு ட்ரோன் தாக்குதல்களை இந்திய ராணுவம் வெற்றிகரமாக எதிர்கொண்டு பதிலடி கொடுத்தது.
S-125 பெச்சோரா (S-125 Pechora) மற்றும் பிற ஆயுதங்கள்
1970 களில் இந்திய ராணுவத்தில் இணைக்கப்பட்ட S-125 பெச்சோரா மேற்பரப்பு-வான ஏவுகணைகள், ட்ரோன்கள், ஹெலிகாப்டர்கள், மற்றும் போர் விமானங்களை எதிர்கொள்ளும் திறன் கொண்டவை. இது ஒரு பழைய அமைப்பாக இருந்தாலும், இன்னும் திறம்பட செயல்படுகிறது. இந்த அனைத்து அமைப்புகளும் ஒருங்கிணைந்து, இந்தியாவை வான்வழி அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாக்கின்றன. இவற்றுடன், பிரான்ஸ் தயாரிப்பு ரஃபேல் போர் விமானங்கள் உள்ளிட்ட வான்படையின் மேம்பட்ட விமானங்களும் வான் பாதுகாப்புக்கு உதவுகின்றன.
மொத்தத்தில் S-400, SAMAR, ஆகாஷ், பெச்சோரா மற்றும் C-UAS கட்டமைப்பு ஆகியவை ஒருங்கிணைந்து, இந்தியாவின் வான்வெளியை அசைக்க முடியாத கோட்டையாக மாற்றியுள்ளன. இந்த தொழில்நுட்பங்களும், இந்திய வான்படையின் மூலோபாய திறனும், எதிரி நாட்டின் எந்த ஒரு அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ள தயாராக உள்ளன.