‘இந்தியன் 3’ நேரடியாக ஓடிடியிலேயே ரிலீஸ்? – பின்னணி தகவல்
ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன், சித்தார்த், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா, விவேக், நெடுமுடி வேணு, மனோபாலா, இமான் அண்ணாச்சி, சமுத்திரக்கனி, எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்டவர்கள் நடித்த “இந்தியன் 2′ திரைப்படம் கடந்த ஜூலை 12-ஆம் தேதி வெளியானது.
லைகா நிறுவனத்தினரால் சுமார் 250 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு வெளியான இந்தப் படம், ரசிகர்களிடையே எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. அனிருத்தின் பின்னணி இசையும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இதனால், படத்தின் வசூல் வெகுவாக பாதிக்கப்பட்டு, லைகா நிறுவனத்துக்கு சுமார் 167 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் கூறப்பட்டது. மேலும், ஓடிடி தளத்திலும் இப்படம் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இயக்குநர் ஷங்கரின் படம் இந்தளவுக்கு விமர்சிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
28 ஆண்டுகளுக்கு முன்னதாக வெளியான ‘இந்தியன்’ திரைப்படம், ஷங்கர் மற்றும் கமல்ஹாசனுக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாகவும் வசூல் ஈட்டி தந்த படமாகவும் மாறியது. ஆனால், ‘இந்தியன் 2’ திரைப்படம், முதல் ஞாயிற்றுக்கிழமையை வசூல் செய்ய முடியாமல் முடங்கிவிட்டது.
முன்னதாக ‘இந்தியன் 2’ படப்பிடிப்பின்போதே 3 ஆம் பாகத்திற்கான பெரும்பாலான காட்சிகள் எடுக்கப்பட்டதாகவும், இதனால் படப்பிடிப்பை திட்டமிட்டநாட்களை விட அதிகமாக நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. மேலும், படத்தின் பட்ஜெட் எகிற இதுவும் ஒரு முக்கிய காரணம் என்றும், இதுவே இரண்டாம் பாகத்தினால் லைகா நிறுவனத்துக்கு பெரும் நஷ்டம் ஏற்பட முக்கிய காரணமாக அமைந்தது என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில், ‘இந்தியன் 3’ பாகத்தின் எஞ்சிய காட்சிகளுக்கான படப்பிடிப்பும் முடிவடைந்து விட்டது.
இந்த நிலையில்,‘இந்தியன் 3’ படத்தினை தியேட்டரில் ரிலீஸ் செய்யாமல் நேரடியாக ஓடிடியிலேயே வெளியிட லைகா நிறுவனம் முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து அந்த நிறுவனம் தரப்பில், ” ‘இந்தியன் 3’ படத்தினை நேரடி ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்று இருப்பது உண்மை தான். ஆனால், இன்னும் எதுவுமே முடிவு செய்யப்படவில்லை. இன்னும் கமல், ஷங்கர் உள்ளிட்ட அனைவரிடமும் பேசிய பிறகே முடிவு செய்யப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருவேளை ‘இந்தியன் 3’ நேரடியாக ஓடிடி-யில் வெளியிடப்பட்டால், அதற்கு ‘இந்தியன் 2’ மீதான விமர்சனங்கள் படத்திற்கு நெகட்டிவாக அமைந்தது போன்று இருந்துவிடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கையே காரணமாக இருக்கலாம் என சினிமா விமர்சகர்கள் கூறுகின்றனர்.