பாக். அத்துமீறல்களுக்கு இந்தியா தொடர்ந்து பதிலடி… எல்லை மாநிலங்களில் பதற்றம்… முழு விவரம்!

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில், ஏப்ரல் 22 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக, இந்தியா மே 6 அன்று ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை தொடங்கி, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஒன்பது பயங்கரவாத இலக்குகளை துல்லியமாக தாக்கியது.
இதனால் ஆத்திரமடைந்த பாகிஸ்தான், ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் உள்ளிட்ட இந்திய எல்லையோர மாநிலங்களில் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. குறிப்பாக ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் இந்திய ராணுவ நிலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தின. ஆனால், அதை இந்திய ராணுவம் அவற்றை வானிலேயே இடைமறித்து தாக்கி, வீழ்த்தின.
எல்லையோர மாநிலங்களின் நிலைமை
இந்த நிலையில், ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் சண்டிகர் உள்ளிட்ட எல்லையோர மாநிலங்களின் தற்போதைய நிலைமை, இந்திய அரசின் பாதுகாப்பு நடவடிக்கைகள், மின்தடை அமலாக்கம் மற்றும் மக்களின் இடப்பெயர்வு குறித்து முழு விவரங்கள் இங்கே…
ஜம்மு-காஷ்மீர்
எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டு (LoC) பகுதிகளான பூஞ்ச், ரஜோரி, குப்வாரா, பாரமுல்லா மற்றும் உரி ஆகியவற்றில் பாகிஸ்தானின் தொடர் பீரங்கித் தாக்குதல்கள் காரணமாக ஜம்மு-காஷ்மீர், மோதலின் மையமாக உள்ளது. மே 8 ஆம் தேதி இரவு, பாகிஸ்தான் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைப் பயன்படுத்தி ஜம்மு, உதம்பூர் மற்றும் ஸ்ரீநகர் விமான நிலையங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. ஆனால் இவை, இந்தியாவின் எஸ்-400 மற்றும் ஆகாஷ் பாதுகாப்பு அமைப்புகளால் தடுக்கப்பட்டன. மே 9 காலை, ரஜோரி மற்றும் பூஞ்ச் பகுதிகளில் வெடிப்பு ஒலிகள் கேட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மே 8 இரவு 11 மணியளவில், சம்பா மாவட்டத்தில் பாகிஸ்தானின் ஊடுருவல் முயற்சியை எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) முறியடித்தது.
மேலும், நவ்ஷேராவில் இரண்டு பாகிஸ்தான் ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. பாகிஸ்தானின் தாக்குதலில் 12 பொதுமக்கள் மற்றும் ஒரு வீரர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜம்மு-காஷ்மீர் அரசு, அனைத்து கல்வி நிறுவனங்களை மூட உத்தரவிட்டுள்ளது. மேலும், எல்லைப் பகுதிகளில் அவசரநிலை தகவல் பரிமாற்றத்தை மேம்படுத்துவதற்காக மூத்த அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பஞ்சாப், சண்டிகர்
பஞ்சாப்பின் எல்லை மாவட்டங்களான பதான்கோட், அமிர்தசரஸ், குர்தாஸ்பூர், ஜலந்தர், ஃபாஸில்கா மற்றும் லூதியானாவில் மே 8 இரவு முழுமையான மின்தடை அமல்படுத்தப்பட்டது. சண்டிகரில் மே 9 காலை 9.30 மணிக்கு வான்வழித் தாக்குதல் எச்சரிக்கைக்கான சைரன் ஒலிக்கப்பட்டது. மக்கள் வீட்டிற்குள் இருக்குமாறும், ஜன்னல்களை மூடவும், பால்கனிகளுக்கு வருவதைத் தவிர்க்குமாறும் சண்டிகர் நிர்வாகம் அறிவுறுத்தியது. இந்த நிலையில், காலை 10.16 மணிக்கு இந்த எச்சரிக்கை தற்காலிகமாக நீக்கப்பட்டது. மொஹாலி நிர்வாகம், சண்டிகரை ஒட்டிய செக்டார் 45-47 பகுதிகளில் வசிப்பவர்களை கண்ணாடி ஜன்னல்களைத் தவிர்க்க அறிவுறுத்தியது. அமிர்தசரஸ் கிராமங்களில் பாகிஸ்தான் ஏவுகணைகளின் உலோகத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இதனால், ராணுவம் அப்பகுதிகளை முடக்கியது. பஞ்சாப் அரசு, மே 9-11 வரை அனைத்து கல்வி நிறுவனங்களை மூட உத்தரவிட்டுள்ளதோடு, காவல்துறை மற்றும் நிர்வாக ஊழியர்களின் விடுப்புகளை ரத்து செய்து, பொது கூட்டங்களுக்கும் தடை விதித்துள்ளது.
ராஜஸ்தான்
ஜெய்சல்மர், பிகானர், ஸ்ரீ கங்காநகர் மற்றும் பார்மர் ஆகிய எல்லை மாவட்டங்களில் பாகிஸ்தான் ட்ரோன்கள் இடைமறிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மின்தடைகள் மற்றும் உயர் எச்சரிக்கை அமல்படுத்தப்பட்டன. ஜோத்பூரில் மே 8 இரவு 12.30 முதல் அதிகாலை 4.00 மணி வரை மின்தடை அமலில் இருந்தது. ஜெய்சல்மரில் பாகிஸ்தான் விமானி ஒருவர் உயிருடன் பிடிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் முழு விவரங்கள் உறுதிப்படுத்தப்படவில்லை. அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன. மேலும் ஜோத்பூர், பிகானர் மற்றும் கிஷன்கர் விமான நிலையங்கள் மே 10 வரை பயணிகள் விமானங்களுக்கு மூடப்பட்டன. முதலமைச்சர் பஜன்லால் ஷர்மா, ஒவ்வொரு எல்லை மாவட்டத்திற்கும் ரூ.5 கோடி அவசர நிதி ஒதுக்கி, எல்லையை முழுமையாக மூட உத்தரவிட்டார்.
இந்திய அரசின் நடவடிக்கைகள்
இந்திய அரசு, மக்களின் பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து, மே 5 அன்று ஏழு மாநிலங்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சிகளை நடத்தியது. இதில் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை ஒலிகள், மின்தடை நடைமுறைகள் மற்றும் வெளியேற்றத் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டன. ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் மற்றும் ஹரியானாவில் மின்தடைகள் அமல்படுத்தப்பட்டு, பாகிஸ்தானின் வான்வழித் தாக்குதல்களின் தாக்கத்தைக் குறைத்தன.
உள்துறை அமைச்சர் அமித் ஷா, CISF இயக்குநர் மற்றும் எல்லைப் படைத் தலைவர்களுடன் 24 விமான நிலையங்களில் பாதுகாப்பை மேம்படுத்த உத்தரவிட்டார். இதனையடுத்து, இந்த விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன.
இந்த நிலையில் இந்திய விமானப்படை, எஸ்-400 “சுதர்ஷன் சக்ரா” அமைப்புகளைப் பயன்படுத்தி பாகிஸ்தானின் 15 ஏவுகணைகளை இடைமறித்து தாக்கி வீழ்த்தியது. மேலும், இஸ்ரேலிய ஹார்பி ட்ரோன்கள் பாகிஸ்தானின் வான்பாதுகாப்பு ரேடார்களை முடக்கின. வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், பாகிஸ்தான் மேலும் தாக்குதல் நடத்தினால், “உறுதியான பதிலடியை” எதிர்கொள்ளும் என எச்சரித்தார்.
இதனிடையே, பல்வேறு மாநில அரசுகள் மாணவர்களை மீட்க தீவிர நடவடிக்கைகள் எடுத்துள்ளன. தமிழ்நாடு அரசு, ஜம்மு-காஷ்மீரில் பயிலும் தமிழக மாணவர்களை பாதுகாப்பாக திருப்பி அனுப்ப ஏற்பாடு செய்துள்ளது. கேரள அரசு, பாகிஸ்தானை ஒட்டிய மாநிலங்களில் உள்ள கேரள மக்களுக்கு உதவ 24/7 கட்டுப்பாட்டு அறைகளை திருவனந்தபுரத்தில் அமைத்துள்ளது. பஞ்சாப் அரசு, கட்டுப்பாட்டு மையத்தை அமைத்துள்ளது.
ரயில் நிலையங்களில் கூட்டம்
பதற்றம் அதிகரித்ததால், ஜம்மு மற்றும் உதம்பூர் ரயில் நிலையங்களில் ஆயிரக்கணக்கான மக்கள், குறிப்பாக வெளிமாநில தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் குடும்பங்கள், தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்ப கூடினர். ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது. பலர் மணிக்கணக்கில் காத்திருந்தனர். ரயில்வே துறை, கூடுதல் ரயில்களை இயக்கி, பயணிகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் வழங்கியது. ஆனால் கூட்ட நெரிசல் காரணமாக குழப்பம் நிலவியது.
உத்தரப்பிரதேசம், பீகார் மற்றும் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள், பயத்தால் தங்கள் கிராமங்களுக்கு திரும்புவதாக தெரிவித்தனர். ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம், ரயில் நிலையங்களில் கூடுதல் பாதுகாப்பு மற்றும் மருத்துவ உதவிகளை ஏற்பாடு செய்தது, மேலும் அவசர உதவி எண்களை வெளியிட்டுள்ளது.
பதற்றத்தைக் குறைக்க அழைப்பு
இன்றைய நிலவரப்படி, இந்திய ஆயுதப் படைகள் உயர் எச்சரிக்கையில் உள்ளன. ஜம்மு-காஷ்மீரில் தேடுதல் நடவடிக்கைகள் மற்றும் எல்லை ரோந்து தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்தியா, மேலும் பதிலடி தாக்குதல்களுக்கு தயாராக உள்ளது. ஆனால், பாகிஸ்தான் மோதலைத் தவிர்த்தால் பதற்றத்தைக் குறைக்க விரும்புவதாக வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.
அமெரிக்கா, ஐ.நா. மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் பதற்றத்தைக் குறைக்க அழைப்பு விடுத்துள்ளன. ஆனால் முன்னேற்றம் இல்லை. எல்லை மாநிலங்களில் மக்கள் பயத்துடன் இருந்தாலும், இந்திய ராணுவத்திற்கு உறுதுணையாக உள்ளனர்.