பொருளாதாரம், தனிநபர் வருமானம்: முன்னேற்றத்தில் தமிழகம்!
ஜிடிபி ( GDP) எனப்படும் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியிலும் தனிநபர் வருமானத்திலும் தமிழகம் உட்பட தென்னிந்திய மாநிலங்கள் வட மாநிலங்களை விட முன்னணியில் இருப்பது தெரியவந்துள்ளது.
ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றம் மற்றும் வளர்ச்சி என்பது ஜிடிபி எனப்படும் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியை அடிப்படையாக கொண்டு கணக்கிடப்படுகிறது. அந்த வகையில் கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய தென் மாநிலங்கள், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30 சதவீதம் அளவுக்கு வழங்கி, முக்கிய பங்களிப்பாளர்களாக திகழ்கின்றன.
அதே சமயம், ஒரு காலத்தில் பொருளாதார ரீதியாக வலுவாக இருந்த மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள் இதில் சரிவைச் சந்தித்து வருகின்றன.
ஒட்டுமொத்த மாநிலங்களும் சராசரி வளர்ச்சியை எட்டிய போதிலும், மேற்கு வங்கம் உள்ளிட்ட சில மாநிலங்கள் மட்டும் பின்னடைவை சந்தித்து உள்ளது. அதாவது, 1961 ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தில் 10.5 சதவீதமாக இருந்த ஒட்டுமொத்த உற்பத்தி தற்போது 5.6 சதவீதமாக குறைந்துள்ளது. ஒரு காலத்தில் தேசிய சராசரியில் 127.5% ஆக இருந்த மேற்குவங்க மாநிலத்தின் தனிநபர் வருமானம் 83.7% ஆகக் குறைந்துள்ளது. இது பாரம்பரியமாக பின்தங்கிய ராஜஸ்தான் மற்றும் ஒடிசா போன்ற மாநிலங்களுக்கும் கீழே சரிந்துள்ளது.
ஒவ்வொரு 10 ஆண்டுகளை ஒப்பிட்டு இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி எப்படி உள்ளது என்பது குறித்து பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக்குழு மத்திய அரசுக்கு அறிக்கை அளித்து வருகிறது. அதன்படி, 2023- 24 ஆம் நிதியாண்டின் பொருளாதாரம் மற்றும் தனிநபர் வருமானத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி மாநில வாரியாக எப்படி உள்ளது என்ற ஆய்வு விவரங்களை அந்தக் குழு மத்திய அரசிடம் அளித்துள்ளது. அந்த அறிக்கையிலேயே இந்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
தமிழகம் 3 ஆவது இடம்
அதன்படி ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியாவில் உள்ள மாநிலங்களில் மகாராஷ்டிரா மாநிலம், சமீபத்திய ஆண்டுகளில் அதன் பங்கு 15% இலிருந்து 13.3% ஆக குறைந்திருந்தாலும், 13.3 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக ஆந்திர மாநிலம் 9.7 சதவீதத்துடன் இரண்டாவது இடத்திலும், தமிழகம் 8.9 சதவீதத்துடன் மூன்றாவது இடத்திலும் இருக்கிறது.
1991 ஆம் ஆண்டுக்கு முன்பு இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் தென்மாநிலங்களின் பங்களிப்பு பெரிய அளவில் இல்லை. ஆனால், நரசிம்ம ராவ் பிரதமராக இருந்தபோது காங்கிரஸ் கட்சி ஆட்சியில் 1991 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கைக்கு பிறகு ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் தென்மாநிலங்கள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது.
தனிநபர் வருமானம்
மகாராஷ்டிராவின் தனிநபர் வருமானம் மார்ச் 2024 ல் தேசிய சராசரியில் 150.7% ஆக உயர்ந்துள்ளது. அதேபோன்று தனிநபர் வருமானத்திலும் ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது தென்மாநிலங்கள், மராட்டியம், குஜராத் உள்ளிட்ட மேற்கு மாநிலங்கள் மற்ற மாநிலங்களைவிட சிறப்பாக செயல்படுகின்றன.
வடமாநிலங்களில் சில பகுதிகளில் மட்டும் குறிப்பிடத்தக்க வளர்ச்சி உள்ளது. மேற்கு வங்கம் உள்ளிட்ட கிழக்கு மாநிலங்களில் வளர்ச்சி கவலை அளிப்பதாக உள்ளது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.