தமிழ்நாட்டில் பொங்கல் முதல் தொடங்கப்படும் ‘முதல்வர் மருந்தகங்கள்’ … குறைந்த விலையில் கிடைக்கும்!
தமிழகத்தில் குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்கும் வகையில் வரும் பொங்கல் முதல் 1000 ‘முதல்வர் மருந்தகங்கள்’ திறக்கப்பட உள்ளது.இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த மருந்தாளுநர்களுக்கும், கூட்டுறவு அமைப்புகளுக்கும் தேவையான கடனுதவியோடு மூன்று லட்சம் ரூபாய் மானியம் அரசால் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
நாட்டின் 78 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை – புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் நேற்று தேசியக் கொடியை ஏற்றி வைத்து பேசுகையில் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
3 ஆண்டுகளில் 65,483 இளைஞர்களுக்கு அரசுப் பணி
இது தொடர்பாக அவர் பேசுகையில், “இந்த அரசு பொறுப்பேற்ற கடந்த 3 ஆண்டுகளில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், ஆசிரியர் தேர்வு வாரியம் ஆகிய தேர்வு வாரியங்கள் மூலமாக 32 ஆயிரத்து 774 பேருக்கு பல்வேறு அரசு துறைகளில் நேரடிப் பணி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. உள்ளாட்சி அமைப்புகள், அரசுத் துறை நிறுவனங்கள் போன்ற பல்வேறு அரசு அமைப்புகளில் 32 ஆயிரத்து 709 இளைஞர்கள் பணிநியமனம் பெற்று, கடந்த 3 ஆண்டுகளில் மொத்தம் 65 ஆயிரத்து 483 இளைஞர்களுக்கு அரசுப் பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டுக்குள் 75,000 அரசு வேலை
அது மட்டுமல்லாமல், வரும் ஜனவரி 2026 க்குள், அதாவது இன்னும் 16 மாதங்களுக்குள் பல்வேறு பணி நியமனங்கள் நடைபெற இருக்கிறது. அதன்படி, வரும் 2026ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும்.
நமது திராவிட மாடல் அரசில் தமிழ்நாடு தொழிற்துறையில் புதிய பாய்ச்சலை கண்டு வருகிறது. அதற்கு அடையாளமாகத்தான், கடந்த ஜனவரி மாதம் 7 மற்றும் 8 ஆகிய நாட்களில் நடந்த “உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில்” முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு, 6 லட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி ரூபாய் அளவிலான முதலீடுகளை ஈர்ப்பதற்காக, 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருக்கிறது. இதன் மூலம், 14 லட்சத்து 54 ஆயிரத்து 712 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பும், 12 லட்சத்து 35 ஆயிரத்து 945 பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பும் கிடைக்க உள்ளது.
பொங்கல் முதல் ‘முதல்வர் மருந்தகங்கள்’
நான் தொடர்ந்து மேற்கொண்டு வரும் கள ஆய்வுகள் மற்றும் மக்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகள் ஆகியவற்றின் அடிப்படையில், உங்களது திராவிட மாடல் அரசின் சார்பாக, இந்த வீர விடுதலை திருநாளில் சில அறிவிப்புகளை வெளியிடுவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நடுத்தர குடும்பங்கள் தங்களுக்கு தேவையான மருந்துகளை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது. நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு தொடர்ந்து மருந்துகளை வாங்க வேண்டியுள்ளதால், இவர்களுக்கு அதிக செலவுகள் ஏற்படுகின்றன. இதற்கு தீர்வாக, பொதுப்பெயர் வகை (ஜெனரிக்) மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் கிடைக்கச் செய்யும் வகையில், ‘முதல்வர் மருந்தகம்’ என்ற புதிய திட்டத்தை அரசு செயல்படுத்தும். வரும் பொங்கல் திருநாள் முதல் செயல்படுத்தப்படவுள்ள இந்த திட்டத்தின்கீழ், முதற்கட்டமாக 1000 முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்படும். இந்த திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்திட, மருந்தாளுநர்களுக்கும், கூட்டுறவு அமைப்புகளுக்கும் தேவையான கடனுதவியோடு மூன்று லட்சம் ரூபாய் மானிய உதவியாக அரசால் வழங்கப்படும்.
முன்னாள் ராணுவ வீரர்களுக்கு ரூ. 1 கோடி வரை தொழில் கடன்
தாய்நாட்டிற்காக இளம் வயதை ராணுவ பணியில் கழித்து, பணிக்காலம் நிறைவு பெற்ற, ஓய்வுபெற்ற முன்னாள் படைவீரர்களது பாதுகாப்பான வாழ்க்கையை உறுதி செய்திடவும், வாழ்வாதாரத்தை மேம்படுத்திடவும், ‘முதல்வரின் காக்கும் கரங்கள்’ என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும். இந்த திட்டத்தின்கீழ், முன்னாள் படைவீரர்கள் தொழில் தொடங்க ஒரு கோடி ரூபாய் வரை வங்கிகள் மூலம் கடன் பெறுவதற்கு வழிவகை செய்யப்படும்.
அடுத்த 2 ஆண்டுகளில் 400 முன்னாள் ராணுவத்தினர் பயன்பெறும் வகையில், 400 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு ஏறத்தாழ 120 கோடி ரூபாய் முதலீட்டு மானியம் மற்றும் 3 விழுக்காடு வட்டி மானியம் சேர்த்து வழங்கப்படும்” என மேலும் தெரிவித்தார்.