சிம்பொனி அரங்கேற்றம்… இந்திய கலைஞர்களுக்கு உலக வாய்ப்புகளைத் திறந்துவிட்ட இளையராஜா!

ஆசிய கண்டத்தில் இருந்து சிம்பொனியை எழுதி அரங்கேற்றிய முதல் இசையமைப்பாளர் என்ற சாதனையை படைத்து தமிழகம் திரும்பி உள்ள இசைஞானி இளையராஜா மொஸார்ட், பீத்தோவன், சாய்கோவ்ஸ்கி ஆகிய சிம்பொனி இசைக்கலைஞர்கள் வரிசையில் இணைந்திருப்பது தமிழ்நாட்டுக்கும் தமிழர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளது.
உலகளாவிய அளவில் ஒரு இந்திய இசையமைப்பாளர் சிம்பொனி உருவாக்கி மேடையேற்றுவது மிகப் பெரிய கனவாகவே இருந்து வந்தது. அதை நனவாக்கும் வகையில், இளையராஜா உலகின் தலை சிறந்த இசைக்குழுவான ‘ராயல் பிலார்மோனிக்’ ஆர்கெஸ்ட்ராவுடன் இணைந்து, அப்போலோ அரங்கில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை 12.30 மணிக்கு லண்டனில் தனது முதல் சிம்பொனி ‘valiant’ இசையை அரங்கேற்றம் செய்தார்.
வரலாற்று சாதனை
சுமார் 1.30 மணி நேரம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ராஜாவின் இசைக் குறிப்புகளை நூற்றுக்கணக்கான கலைஞர்கள் பல்வேறு இசைக் கருவிகளில்ஒரே நேரத்தில் இசைத்தது பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. இதன்மூலம், ஆசிய கண்டத்தில் இருந்து சிம்பொனியை எழுதி, அரங்கேற்றிய முதல் இசையமைப்பாளர் எனும் சாதனையை இளையராஜா படைத்துள்ளார்.
82 வயதில் அவரது இந்த சாதனை மிக பிரம்மாண்டமானது. 1,500 திரைப்படங்கள், 8,000க்கும் மேற்பட்ட பாடல்கள், தனி ஆல்பங்கள், ஆயிரக்கணக்கான மேடைக் கச்சேரிகள், கவிதைகள், ஒளிப்படங்கள், திரைப்படத் தயாரிப்புகள், திருவாசகம் சிம்பொனி எனக் கடந்திருக்கிறார்.
கர்னாடக இசையில் பஞ்சமுகி, ராஜலஹரி என்கிற புதிய ராகங்களை உருவாக்கிப் பிரவாகமெடுத்த இளையராஜா, இப்போது தனது முதல் அசல் சிம்பொனிக்கு வந்து சேர்ந்திருக்கிறார். இதன் மூலம், மேற்கத்தியச் செவ்விசையின் மரபில் ஒருவராக இணைந்திருக்கிறார்.

இந்திய கலைஞர்களுக்கு திறக்கப்பட்ட வாய்ப்புகள்
இந்த நிலையில், இளையராஜாவின் இந்த சாதனை, எதிர்காலத்தில் இந்திய இசைக்கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என இசைத் துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்துப் பேசும் அவர்கள், “லண்டனில் அரங்கேறிய இளையராஜாவின் சிம்பொனி நிகழ்ச்சி, இளையராஜா என்ற ஒரு தனிநபரின் சாதனை என்பதை விட இது ஒட்டுமொத்த இந்திய இசைக்கும் கிடைத்த வெற்றி எனலாம்.
இது, இந்திய இசையமைப்பாளர்கள் உலகளாவிய பாரம்பரிய இசை அரங்கில் அங்கீகரிக்கப்படுவதற்கான கதவுகளைத் திறந்துவிட்டுள்ளது. மேலும், உலகம் இந்திய இசையை எவ்வாறு உணர்கிறது என்பதை மறுவரையறை செய்துள்ளதோடு, இந்திய திரை இசை அல்லது நாட்டுப்புற மரபுகளுக்கு அப்பால் இந்திய இசையின் ஆழத்தை வெளிப்படுத்தி உள்ளது. அத்துடன் எதிர்கால தலைமுறை இசைக்கலைஞர்களை, இசையமைத்தல் மற்றும் இசைக்குழுவில் அறியப்படாத அம்சங்களை ஆராயவும் ஊக்குவிக்கும்.
இந்தியாவின் சமய, பாரம்பரிய இசைகள் உலக அரங்கில் முக்கியத்துவம் பெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தமிழர்களின் இசை செல்வாக்கு மேலும் வளரக் கூடிய வாய்ப்புக்கள் உருவாகும்” எனக் கூறுகின்றனர்.
விமான நிலையத்தில் அரசு சார்பில் வரவேற்பு
இந்த நிலையில், லண்டனில் இருந்து இன்று சென்னை திரும்பிய இளையராஜாவுக்கு விமான நிலையத்தில் உற்சாக உற்வேற்பு அளிக்கப்பட்டது. தமிழக அரசு சார்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், பா.ஜ.க. கட்சியை சேர்ந்தவர்கள் மற்றும் திரைத்துறையினர் இளையராஜாவை வரவேற்றனர்.

அரங்கேற்றத்தில் நடந்தது என்ன…? விவரித்த இசைஞானி
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இளையராஜா, “அனைவருக்கு நன்றி. என்னை நீங்கள் அனைவரும் மலர்ந்த முகத்தோடு வழியனுப்பி வைத்தீர்கள். அத்துடன் இறைவன் ஆசிர்வதித்தார். சிம்பொனி நிகழ்ச்சியை சிறப்பாக முடித்துத் திரும்பியுள்ளேன்.
இசைக் குறிப்பை யார் வேண்டுமானாலும் எழுதிடலாம். அவ்வாறாக எழுதிக் கொடுத்தால் அதை யார் வேண்டுமானாலும் வாசித்துவிடலாம். ஆனால், அதை வாசிப்பவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி வாசித்தால் என்னவாகும். அப்படி ஆகிவிடாமல் லண்டனில் கண்டக்டர் மைக்கேல் டாம்ஸ் சிறப்பாகச் செய்துதந்தார். நான் இங்கிருந்து லண்டன் சென்றதும் ஒரே ஒரு ஒத்திகையில் கலந்து கொள்ளவே நேரமிருந்தது. சிம்பொனி அரங்கேற்றத்தில் அதன் விதிமுறைகளை மீறிவிடக்கூடாது. அதைப் பின்பற்றி 80 இசைக் கலைஞர்களும் ஒன்றிணைந்து மியூசிக் கண்டக்டரை கவனிக்க வேண்டும். அவ்வாறாக ஒவ்வொரு ஸ்வரத்திலும் அவர்கள் கவனத்தை குவித்து வாசித்தபோது கேட்பவர்கள் மூச்சுவிட மறந்து ரசித்தனர்.
சிம்பொனியில் மொத்தம் 4 பகுதிகள். அந்த 4 மூவ்மென்ட் முடியும் வரை யாரும் கைதட்டக் கூடாது. அது விதிமுறை. ஆனால் அதற்கு மாறாக ரசிகர்கள் ஒவ்வொரு மூவ்மென்ட் முடிந்தபின்னர் கைதட்டி ஆச்சரியப்படுத்தினர். ரசிகர்கள் ஆர்ப்பரிக்கும் போது கண்டக்டர் மைக் என்னைப் பார்த்து மகிழ்ச்சியில் சிரிப்பார்.
மேலும், சிம்பொனியின் இரண்டாவது பகுதியில் நான் இசையமைத்த சினிமாப் பாடல்கள் இசைக்கப்பட்டன. அதில் ஒரு பாடலை நான் அவர்களோடு இணைந்து பாடினேன். எனக்கு இங்கே எனது இசைக்குழுவுடன் பாடியே பழக்கம். அவர்களோடு பாடி எனக்குப் பழக்கமில்லை. ஆனால் அவர்களோடு பாடினேன். அது மிகவும் கடினம். அதற்கும் மக்கள் நல்ல வரவேற்பு கொடுத்தார்கள்.
மொத்தத்தில் இந்த சிம்பொனி இசை வல்லுநர்கள் பாராட்டிய சிம்பொனியாகியுள்ளது. அது உங்களின் வாழ்த்து. இதை நான் அரங்கேற்றியது தமிழகத்துக்கும், இந்தியாவுக்கும் பெருமை.மேலும், முதல்வர் அரசு மரியாதையோடு வரவேற்றது நெகிழ்ச்சியாக உள்ளது. அதேபோல், தமிழக மக்களின் வாழ்த்தும், வரவேற்பும் எனக்குப் பெருமையாக இருக்கிறது.
13 தேசங்களில் சிம்பொனி இசை நிகழ்ச்சி

சிம்பொனி இசையை நீங்கள் டவுன்லோடு செய்து கேட்கக் கூடாது. அதை அந்த இசைக்கலைஞர்கள் இசைக்க அமைதியான அரங்கில் நீங்கள் நேரடியாகக் கேட்க வேண்டும். அதனால், 13 தேசங்களில் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடக்கவுள்ளது. அக்டோபர் 6 ஆம் தேதி துபாயில், செப்டம்பர் 6 ஆம் தேதி பாரிஸ், தொடர்ந்து ஜெர்மன் என பல நாடுகளில் இந்த சிம்போனி இசை செல்ல இருக்கிறது. என்னுடைய மக்கள் என் மீது அன்பும் வைத்துள்ளார்கள், தெய்வமாக கொண்டாடுகிறார்கள், இசை கடவுள் என்கிறார்கள். நான் சாதாரண மனிதனை போல தான் வேலை செய்து கொண்டிருக்கிறேன் தவிர என்னைப் பற்றி ஒரு எண்ணமும் கிடையாது.
பண்ணைபுரத்தில் வெறுங் காலில் நடந்தேன். வெறுங்காலுடன் தான் இங்கே வந்தேன். இன்று சிம்பொனி இசைத்து வந்துள்ளேன். முடிந்தால், இளைஞர்கள் என்னை முன்மாதிரியாக வைத்து அவரவர் துறையில் முன்னேறி நாட்டுக்கு நலம் சேர்க்க வேண்டும். இதுவே எனது அறிவுரை” என்றார்.